TNPSC Thervupettagam

உதவி பெறும் கல்லூரிகளுக்கு மீட்சி எப்போது?

September 14 , 2024 126 days 144 0

உதவி பெறும் கல்லூரிகளுக்கு மீட்சி எப்போது?

  • உயர் கல்வித் துறையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்​களைவிட முன்னு​தா​ரண​மாகத் திகழ்ந்​தா​லும், தமிழ்​நாட்டில் உயர் கல்வித் துறை சார்ந்த சிக்கல்​களைப் பற்றி நீண்ட விவாதங்கள் நடைபெறுகின்றன. அப்படி ஒரு சிக்கல் குறித்த நீதிமன்றத் தீர்ப்பு சமீபத்தில் நாளிதழ்​களில் செய்தியாக வந்தது.
  • திருநெல்வேலி மாவட்​டத்தில் உள்ள ஓர் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியில் 2009ஆம் ஆண்டு நியமிக்​கப்பட்ட சில பேராசிரியர்​களுக்கு 2020இல் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் பணிநியமன அங்கீ​காரம் வழங்கியது. இருப்​பினும் நீண்ட சட்டப் போராட்​டங்​களுக்குப் பிறகு, 2022 ஜூலை மாதம்தான் இப்பேராசிரியர்கள் அரசு ஊதியத்தைப் பெறமுடிந்தது.
  • 2009 முதல் பணி செய்ததற்கான ஊதியத்தை வழங்கு​மாறும் நீதிமன்றம் தீர்ப்​பளித்​திருந்தது. ஆனால், அதை நடைமுறைப்​படுத்​தாமல் மேல்முறை​யீட்டுக்குச் சென்றது உயர் கல்வித் துறை. இதை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடுமை​யாகச் சாடியது. கடந்த பல ஆண்டு​களாகவே பரவலாக இருக்கும் பிரச்சினை இது!
  • தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரி​களில் அரசு உதவிபெறும் பாடப்​பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்பு​வதற்கு உடனடியாக அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்து​வதும், நிரப்​பப்பட்ட இடங்களுக்கு ஊதியம் பெறுவதற்கான அங்கீ​காரம் வழங்காமல் காலதாமதப்​படுத்து​வதும் தமிழக உயர் கல்வித் துறையில் கடந்த 20 ஆண்டுகளாக முளைத்​துள்ள புதிய சிக்கல்கள். இது போன்ற சிக்கல்கள் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் ஏன் வருகிறது என்பதற்கான பின்னணியை அரசு உதவிபெறும் கல்லூரிகள் உருவான வரலாற்றுடனும், அதில் ஆசிரியர் பணி நியமனங்​களில் ஏற்படுத்​தப்பட்ட மாற்றங்களிலிருந்தும் புரிந்​து​கொள்​ளலாம்.

உட்ஸ் அறிக்கை:

  • இந்தியாவில் அரசு உதவிபெறும் கல்லூரி​களுக்கான கருத்துரு 1854ஆம் ஆண்டு வெளிவந்த உட்ஸ் அறிக்கையின் (Wood’s Dispatch) வாயிலாகத்தான் கிடைத்தது. இதன் காரணமாக அரசுக் கல்லூரி​களுடன் சேர்ந்து அரசு உதவிபெறும் கல்லூரி​களும் வளர்ச்சி பெற்றன. 1871ஆம் ஆண்டின் கணக்குப்படி, சென்னை மாகாணத்தில் நான்கு அரசுக் கல்லூரி​களும், ஏழு அரசு உதவிபெறும் தனியார் கல்லூரி​களும் செயல்​பட்டு​வந்தன.
  • 1981ஆம் ஆண்டின் கணக்குப்படி தமிழகத்தில் செயல்பட்ட மொத்த கலை-அறி​வியல் கல்லூரி​களின் எண்ணிக்கை 195 (இதில் 51 அரசுக் கல்லூரிகள்; 144 அரசு உதவிபெறும் கல்லூரிகள்) ஆக உயர்ந்தது. 1980களின் தொடக்கம் வரை, அரசு, அரசு உதவிபெறும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே இருந்தன.
  • மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக 1990களில் மத்திய அரசு பொருளா​தாரக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டு​வந்தது. இதன் விளைவாகக் கல்வி போன்ற சேவைகளுக்கான நிதி குறைக்​கப்​பட்​டதுடன், கல்வியில் முழுமையான தனியார்மயம் ஊக்கு​விக்​கப்​பட்டது. இந்தப் பின்னணியில் தமிழக அரசு சுயநிதிக் கல்லூரி​களைத் தொடங்க அனுமதி வழங்கியது. ஆனால், புதிதாக அரசு உதவிபெறும் கல்லூரிகள் தொடங்​கப்பட அனுமதிக்க​வில்லை.
  • தனியார் கல்லூரிகள் பெருகின; ஆசிரியர்​களின் பிரச்​சினை​களும் அதிகரித்தன. 1970களில் அரசு உதவிபெறும் கல்லூரி​களில் ஊதியம் வழங்கு​வதில் சிக்கல்கள் தோன்றின. பல கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்​களைத் தன்னிச்​சை​யாகப் பணியி​லிருந்து நீக்கின. இந்த அவலங்​களுக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் அக்காலக்​கட்​டத்தில் பல்வேறு போராட்​டங்களை நடத்தின.
  • அதே காலக்​கட்​டத்தில் கல்லூரி ஆசிரியர்​களுக்கு இடையில் நிலவும் ஊதிய முரண்​பாட்டைக் களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய அளவிலும் ஆசிரியர் அமைப்புகள் போராடின. இந்தப் பின்னணி​யில், பல்கலைக்கழக மானியக் குழு, உயர் கல்வி தொடர்பான பிரச்​சினை​களைக் களைவதற்கு அரசுக்கு வழங்கிய அறிக்கையை 1974 நவம்பர் மாதம் நாடாளு​மன்றம் ஏற்றுக்​கொண்டது.
  • இருப்​பினும் தமிழ்​நாட்டுக் கல்லூரி ஆசிரியர்​களின் நிலைமையில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. எனவே, ஆசிரியர் இயக்கங்கள் தொடர் போராட்​டங்​களில் ஈடுபட்டன. தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்​காற்றுச் சட்டம், பணிப் பாதுகாப்பு, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்​துரைத்த ஊதியம், ஊதியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெற்றது எனப் பல்வேறு நலன்களை ஆசிரியர்கள் போராட்​டங்​களின் மூலம் பெற்றனர்.

சுயநிதிக் கல்லூரி​களும் ஆசிரியர்​களும்:

  • 1980களில் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்​களின் நிலைமையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்​டிருந்தன. இந்நிலை​யில், புதிதாகத் தோன்றிய சுயநிதிக் கல்லூரி/பிரிவு​களில் பணிப் பாதுகாப்​பின்றிக் குறைவான ஊதியத்தில் ஆசிரியர்கள் பணிபுரியும் புதிய சிக்கல் உருவானது.
  • கல்வி தனியார்​மய​மானதன் விளைவாகக் கடந்த 40 ஆண்டு​களில் பல்கிப் பெருகி​யுள்ள சுயநிதிக் கல்லூரி/பிரிவு​களில் மோசமான பணிச் சூழலில் பல ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரி​கின்​றனர். இதன் காரணமாகவே பணிப் பாதுகாப்புடன் கூடிய நல்ல ஊதியத்தைப் பெறும் வாய்ப்புள்ள அரசு உதவிபெறும் ஆசிரியர் பணியைப் பெறுவதற்குக் கடும் போட்டி நிலவு​கிறது.
  • இப்போட்​டியைப் பயன்படுத்தி, அரசு உதவிபெறும் கல்லூரிப் பணியிட நியமனங்​களில் முறைகேடுகள் நடைபெறு​வ​தாகக் குற்றம்​சாட்​டப்​படு​கிறது. இப்படியான குற்றச்​சாட்டுகள் இன்றி, விதிவிலக்​காகச் சில கல்லூரிகள் மட்டுமே நியாயமான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பு​வ​தாக​வும், அப்படியான கல்லூரி​களின் பணி நியமனங்​களுக்​குத்தான் உயர் கல்வித் துறை அங்கீ​காரம் தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்​படு​கிறது.
  • ஏழை எளிய குடும்​பங்​களில் இருந்து வரும் தகுதி​யானவர்​களுக்கு இது போன்ற கல்லூரி​களில்தான் ஓரளவுக்​காவது பணிபுரியும் வாய்ப்புகள் கிடைக்​கின்றன. வாய்ப்பு கிடைத்​தாலும் பணி நியமன ஆணை, அரசு ஊதியத்தைப் பெறுவதற்கு நீதிமன்​றத்​துக்கும் உயர் கல்வித் துறை அலுவல​கங்​களுக்கும் அவர்கள் அலைய வேண்டிய நிலை உள்ளது.

அரசு செய்ய வேண்டியது என்ன?

  • சமூக நீதி பேசும் திமுக அரசு, இந்தப் பிரச்​சினையில் உரிய கவனம் செலுத்த வேண்டும். நீண்ட நாள்களாகப் பணி நியமன ஆணை கிடைக்​காமலும், ஆணை கிடைத்தும் உரிய ஊதியமின்றிப் பணிபுரியும் ஆசிரியர்​களுக்கு உடனடி​யாகப் பணி நியமன ஆணையுடன் ஊதியத்​தையும் வழங்குவது அவசியம்.
  • தமிழ்​நாட்டின் உயர் கல்வித் துறையில் நிலவும் இத்தகைய குளறு​படிகளால் கல்வியின் தரம் பெரிதும் பாதிக்​கப்​படு​கிறது. அரசுக் கல்லூரி​களுக்கு இணையாக ஏழை எளிய மாணவர்​களின் கல்விக் கனவை நிறைவேற்றும் இடமாக அரசு உதவிபெறும் கல்லூரிகளே உள்ளன.
  • எனவே, இந்தச் சிக்கல்​களைக் களைந்து இப்பணி​யிடங்களை நியாயமாக நிரப்புவது ஆயிரக்​கணக்கான ஏழை மாணவர்​களின் எதிர்​காலத்தோடு தொடர்​புடையது என்பதை அரசு உணர வேண்டும். மேலும் சுயநிதிக் கல்லூரி/ பிரிவு​களில் பணிபுரியும் பேராசிரியர்​களுக்குப் பணிப் பாதுகாப்புடன் அரசு உதவிபெறும் பிரிவில் பணிபுரியும் ஆசிரியர்​களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்​படுவது இந்தச் சிக்கலைத் தீர்ப்​ப​தற்கு உதவும்.
  • உயர் கல்வியை மேன்மைப்​படுத்தும் மாற்றங்​களைப் போராட்​டங்​களின் மூலமே சாத்தி​யப்​படுத்த முடியும் என்பதைக் கடந்த காலங்​களில் நடைபெற்ற ஆசிரியர்​களின் போராட்​டங்கள் நமக்கு உணர்த்து​கின்றன. எனினும், அந்த அழுத்தம் ஆசிரியர்​களுக்கு ஏற்படாத வகையில் அரசு கரிசனத்​துடன் நடந்து​கொள்ள வேண்டும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories