TNPSC Thervupettagam

உத்தரமேரூர்

February 19 , 2019 2106 days 2048 0
  • தேர்தல் காலங்களில் மேடைகளிலும் ஊடகங்களிலும் வெளிப்படும் சொல்லாடலில் உத்தரமேரூர்க் கல்வெட்டும் அதில் சொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஜனநாயகமும் இடம்பெறும்.
தேர்தல் முறை
  • ஏறத்தாழ 1,100 ஆண்டுகளுக்கும் முற்பட்ட கல்வெட்டில் உத்தரமேரூரில் நடந்த அக்காலத் தேர்தல் முறையை அறிய முடிகிறது.
    • தேர்தல் அறிக்கை இல்லாமல்,
    • வாக்குறுதிகள் இல்லாமல்,
    • பரப்புரை இல்லாமல்,
    • தேர்தல் சின்னம் இல்லாமல்,
    • வேட்பாளர் பெயர் எழுதிய ஓலையுடன்

நடந்து கொண்டிருந்த ஒரு தேர்தல் முறையைத் தெரிந்துகொள்ள  உத்தரமேரூர் உதவுகிறது.

உத்தரமேரூர்    
  • உத்தரமேரூர், காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ளது. இதற்குப் பேரூர் என்றும் பெயர் இருந்திருக்கிறது. உத்தரமேரூர் என்று அந்த ஊருக்கு எப்படி பெயர் வந்தது?  வடமதுரை, தென்மதுரை, உத்தர கைலாசம், தட்சிண கைலாசம்  என்பதைப் போல உத்தரமேரூர் என்றால் தட்சிண மேரூர் என்று எங்காவது இருக்கிறதா? தெரியவில்லை. ஆனால், தஞ்சைப் பெரிய கோயில் விமானத்திற்குத் தட்சிண மேரு என்று  பெயர்.
  • ஆனால், உத்தரமேரூரில் அப்படி மேரு எதுவும் இல்லை. உத்தரமேருவுடன் ஊர் சேர்ந்து உத்தரமேரூர் ஆகியிருக்கிறது. ஆனால், கல்வெட்டில் உத்திரமேரு சதுர்வேதிமங்கலம் என்றுதான் உள்ளது. அப்படியெனில் அங்கே சதுர்வேதி மங்கலமும் இருந்திருக்கிறது.
  • ஊரும் இருந்திருக்கிறது. சதுர்வேதி மங்கலத்தில் சபை இருந்திருக்கிறது; ஊருக்கு அவை இருந்திருக்கிறது. அங்கிருந்த குந்தவை ஆழ்வார் மடத்தில் வைணவப் பெரியார்கள் உணவருந்த ஊரவை நிலம் அளித்தது கைலாசநாதர் கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்லவர் காலம்
  • ஏனெனில், ஊர் என்றால் விவசாயக் குடிமக்கள் வாழும் இடம். சதுர்வேதி மங்கலம் பார்ப்பனர்கள் வாழும் இடம். உத்தரமேரு, பல்லவர் காலத்திலேயே சதுர்வேதி மங்கலமாக வழங்கப்பட்டிருக்கிறது. உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்து சபையோம் என்பது பராந்தக சோழன் கல்வெட்டுத் தொடர்.
  • அங்கு வைகுந்தப் பெருமாள் கோயில், சுந்தரவரதப் பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் என்று பல கோயில்கள் இருக்கின்றன. அவற்றுள் வைகுந்தப் பெருமாள் கோயிலில் இருந்து 70 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.
  • அவற்றுள் இரண்டு கல்வெட்டுகள் ஜனநாயகம் பற்றி கூறுகின்றன என்று போற்றப்படுகின்றன. அங்கு, அப்போதிருந்த சம்வத்சர வாரியம், தோட்ட  வாரியம், ஏரி வாரியம் ஆகியவற்றின் நிர்வாகம்  எப்படி நடந்தது? நிர்வாகத்தை யார் மேற்கொண்டார்கள்? அவர்களின் தகுதி மற்றும் தகுதியின்மை என்ன? அதற்கு அதிகாரம் தந்தவர்கள் யார்? அதற்கான விதிமுறைகள் எவை? விதிமுறைகளை வகுத்தவர்கள் யார்?  வகுப்பதற்கு அதிகாரம் வழங்கியவர்கள் யார்? விதிமுறை எப்போதிருந்து செயற்பாட்டுக்கு வந்தது? விதிமுறைக்கு உட்படும் இடம் எது? ஆகியவை பற்றிய செய்திகள் இரண்டு கல்வெட்டுகளிலும் இடம்பெற்றுள்ளன. இரண்டு கல்வெட்டுகளும் முதலாம் பராந்தகன் காலத்தைச் சேர்ந்தவை.
கல்வெட்டு
  • முதல் கல்வெட்டு அவனது 12-ஆம் ஆட்சியாண்டையும் ( கி.பி.919), இரண்டாவது கல்வெட்டு 14-ஆம் ஆட்சியாண்டையும் (கி.பி. 921) சேர்ந்தவை. இரண்டு கல்வெட்டுகளுக்கும் இடைப்பட்ட காலம் இரண்டு ஆண்டுகள்.
  • இக்காலத்தில் தேவைப்பட்டிருக்கிற மாற்றங்களுக்கான திருத்தங்களோடு இரண்டாவது கல்வெட்டு இருக்கிறது. ஆணையிட்டவன் முதலாம் பராந்தகன்.
  • முதல் கல்வெட்டில் (கி.பி. 919), அதிகாரம் பெற்றுத் தத்தனூர் மூவேந்த வேளான் முன்னிலையில் விதிமுறைகளை உருவாக்கியவர்கள் உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையோர்.  இரண்டாவது கல்வெட்டில் (கி.பி. 921)க்ரமவித்த பட்டனாகிய சோமாசிப் பெருமாள் முன்னிலையில் விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன. அந்த ஆண்டு முதலே விதிமுறைகள் செயற்பாட்டுக்கு வந்துள்ளன. வேட்பாளரின் தகுதிகள்:
    • கால் வேலி நிலம் உடைமையாக இருக்க வேண்டும். இரண்டாவது கல்வெட்டில் கால் வேலிக்கு அதிகமாக இருக்க வேண்டும். அதற்குக் குறைந்த அளவாகிய அரைக்கால் வேலி நிலம்தான் இருக்கிறது என்றால் ஒரு வேதமும் நான்கு பாஷ்யத்தில்  (வியாக்கியானத்தில்) ஒரு பாஷ்யம் வக்கணித்து அறிவானாகவும் (நன்றாக எடுத்துச் சொல்லத் தெரிந்தவனாகவும்) இருக்க வேண்டும் என்று விதித் திருத்தம் வந்துள்ளது.) சொந்த மனையில் வீடுகட்டி வாழ்பவராக இருக்க வேண்டும். குறைந்த அளவு வயது 30; அதிக அளவு ( இரண்டாவது கல்வெட்டில் இந்த வயது வரம்பு 35-70 என்று திருத்தப்பட்டுள்ளது.) மந்திர பிராமணம் வல்லவனாகவும் ஓதுவித்தறிவனாகவும் இருக்க வேண்டும்.
    • காரியத்தில் நிபுணனாக இருக்க வேண்டும். ஒழுக்கம் உடையவனா இருக்க வேண்டும்; நல்ல வழியில் சொத்து சேர்த்திருக்க வேண்டும்; தூய்மையான எண்ணம் உடையவனாக இருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் வாரியப் பதவிகளில் இருந்திருக்கக் கூடாது. அவர்களின் நெருங்கிய உறவினர்களும் வாரியப் பதவிகளில் இருந்திருக்கக் கூடாது.
    • இத்தகைய தகுதிகள் வேட்பாளரின் அடிப்படைத் தகுதிகளாகும். மேலும், வேட்பாளருக்குத் தகுதியற்றவர்களாகப் பின்வருவோர் கருதப்பட்டிருக்கிறார்கள்.
    • வாரியப் பதவிகளில் இருந்து கணக்குக் காட்டாதவர்கள். கணக்குக் காட்டாதவர்களின் உறவினர்கள். உறவினர்கள் பட்டியல் வருமாறு:-கணக்குக் காட்டாதவரின் சின்னம்மா, பெரியம்மா ஆகியோரின் மக்கள்; அத்தை, மாமன் மக்கள்; தாயோடு  உடன் பிறந்தவர்கள்; தந்தையோடு உடன் பிறந்தவர்கள்; தன்னோடு உடன்பிறந்தான் மக்கள்; சகோதரியின் கணவர்; தனது மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரியின் கணவன்; மகளின் கணவர், தன் மகன், தன் தந்தை. ஆகமங்களுக்கு எதிராகப் பஞ்சமா பாதகத்தில் ஈடுபட்டவர், கையூட்டு (லஞ்சம்) வாங்கியவர், பாவம் செய்தவர் ஆகியோர் அவற்றுக்கான பிராயச்சித்தம் செய்திருந்தாலும் அவர்களும் அவர்களுடைய உறவினர்களும் கூடத் தகுதியற்றவர்களே.
    • அடுத்தவர் சொத்தை அபகரித்தவர், கொலைசெய்யத் தூண்டியவர், கொலை செய்தவர், மக்கள் விரோதிகள், பொய்க் கையெழுத்திட்டோர் ஆகியோர் வேட்பாளர்ப் பட்டியலில் சேர்க்கத் தகுதியற்றவர்கள்.
தேர்தல் நடத்திய முறை
  • உத்தரமேரு முப்பது குடும்புகளாகப் பிரிக்கப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு குடும்பிலிருந்தும் முழுத் தகுதியுடையவர்களின் பெயர்கள் ஓலைகளில் எழுதப்பட்டுத் தனித்தனி குடத்தில் இடப்பட்டுள்ளன.  குடத்தின் வாயைக் கட்டியுள்ளனர்.
  • பின்னர் மகாசபை உள்மண்டபத்தில் நம்பிமார் அனைவரும் கூடி இருக்க,  அவர்களின் நடுவே மூத்தவர் ஒருவர் எல்லோரும் பார்க்கும் படியாகக் குடத்தை வைத்துக் கொண்டு நிற்க, விவரம் அறியா வயதுடைய சிறுவனைக் கொண்டு ஒவ்வொரு குடும்பின் குடத்திலிருந்து ஒரு ஓலையை எடுக்கச் சொல்லி வாங்கி அதனை நடுவர் (மத்தியஸ்தர்) கையில் கொடுக்க, அந்த ஓலையை மத்தியஸ்தர் வாங்கும்போது, ஐந்து விரல்களையும் அகல விரித்து உள்ளங்கையிலே வாங்கிப் படித்து, சுற்றியுள்ள நம்பிமார்களிடம் கொடுக்க அவர்களும் படிக்க, அந்த ஓலையில் இருந்த பெயருக்கு உரியவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இப்படியே முப்பது குடும்புக்கும் தேர்தல் நடந்திருக்கிறது.  அவ்வாறு குடும்புக்கு ஒருவர் வீதம் முப்பது குடும்புக்கும் முப்பது பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
  • அந்த முப்பது பேரில் தோட்ட வாரியத்திலும் ஏரி வாரியத்திலும் முன்னர் உறுப்பினராக இருந்த அனுபவம் உடையவர்களையும் கல்வி மிக்கவர்களையும் மூத்தோர்களையும் கொண்டு சம்வத்சர வாரியம் செயற்பட்டிருக்கிறது. இவர்கள் போக எஞ்சியவர்களில் பன்னிரண்டு பேர் தோட்ட வாரியமாகவும் ஆறு பேர் ஏரி வாரியமாகவும் செயற்பட்டிருக்கிறார்கள்.
ஜனநாயகம்
  • ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; ஆனால், அனைத்து மக்களுக்குமான அரசாக இருக்க வேண்டும். உத்தரமேரூரில் சம்வத்சர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம் ஆகியவற்றின் நிர்வாகத்திற்கு நடந்துள்ள தேர்தல், விசித்திரமான தேர்தலாக உள்ளது.
  • அந்தத்  தேர்தலில் வேட்பாளர்கள் இருந்திருக்கிறார்கள்; ஆனால்  வாக்காளர்கள் கிடையாது. அதனால் வாக்காளர்களுக்கான தகுதிகளும் சொல்லப்படவில்லை. வேட்பாளர்கள் இருந்திருக்கிறார்கள்.
  • ஆனால், அவர்கள் விருப்ப மனுவோ, வேட்புமனுவோ அளிக்க முடியாது. வேட்பாளர்கள் யார் என்பதை அவர்களது தகுதிகளே தீர்மானிக்கும். வேட்பாளர் தகுதிகளே முதற்கட்டத்தில் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களாக இருந்திருக்கின்றன. வேட்பாளர்களின் தகுதிகளையும் தகுதி இன்மையையும் சபையே தீர்மானித்து வரையறை செய்துள்ளது.
  • வேதம் அறியாதவர்களும் சொந்தமாக நிலமும் மனையும் வீடும் இல்லாதவர்களும் வேட்பாளர் ஆக முடியாது என்பதையும் ஏதும் அறியாத ஒரு சிறுவன் குடத்தில் கைவிட்டு ஓலை எடுத்து அதன்வழி ஒருவரைத் தேர்ந்தெடுப்பதும்  ஜனநாயகப் பண்புகளாக நம்மால் கருத முடியாது.
  • எனினும், வாக்காளர்களைச் சரிக்கட்ட வேண்டிய அவசியம் இல்லாத, வாக்காளர்களுக்குச் செலவழிக்க வேண்டிய தேவை இல்லாத ஒரு தேர்தலை ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்தில் நடத்தி இருக்கிறார்கள் என்பது இப்போதுள்ள நிலையில் வியப்பாக இருக்கிறது.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories