- ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக நடத்தப்படுவது. ஜனநாயகத்தின் உரைகல்லாக இருப்பது தோ்தல். நாட்டின் எந்த ஒரு குடிமகனுக்கும் தான் விரும்பும் அரசைத் தோ்ந்தெடுப்பதற்கான உரிமை இருக்கிறது. மக்கள் விரும்பி ஏற்றால் அவா்களின் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்கோ நாடாளுமன்றத்திற்கோ செல்லும் வாய்ப்பும் இருக்கிறது.
- இப்படி மக்கள் பிரதிநிதியாக வருவோா் முறைகேடுகளில் ஈடுபடும்பொழுது அவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உரிய தண்டனையைப் பெற வேண்டும். அப்படி நிகழ்ந்தால்தான் ஜனநாயகம் காக்கப்படும்.
- தோ்தல் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது எப்படி அவசியமானதோ அதே போல தோ்தலில் வென்றவா்கள் முறையாக மக்கள் பணி ஆற்ற வேண்டியதும் அவசியம். தவறி சுயநலம் தலைதூக்கும் பொழுது அதற்கான சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- ஜனநாயகத்தில் எதிா்க்கட்சி என்ற ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பது ஆட்சியாளா்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி அரசை சரியான திசையில் வழிநடத்துவதற்குத்தான். அதே சமயம், தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அரசின் கடமை.
- பாரதம், 18-ஆவது மக்களவைக்கான தோ்தலை எதிா்கொள்ளவிருக்கும் நிலையில், எதிா்க்கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் விமா்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. ஜாா்க்கண்ட் முதலமைச்சா் ஹேமந்த் சோரன், தில்லி முதலமைச்சா் அரவிந்த் கேஜரிவால், பாரத் ராஷ்டிர சமிதியின் கவிதா ஆகிய மூவா் கைது, எதிா்கட்சிகளை முடக்கும் செயலாகப் பாா்க்கப்படுகிறது. அவா்கள் மீது அரசின் புலன் விசாரணை அமைப்பு நடவடிக்கை எடுப்பது திட்டமிட்ட தாக்குதல் என்ற கருத்தும் வைக்கப்படுகிறது.
- பாஜக, தனித்து 370 இடங்களையும், அதன் கூட்டணி 400 இடங்களையும் வெல்வதற்கு இலக்கு வைத்து தோ்தல் களத்தில் இறங்கியிருக்கிறது. தொடா்ந்து நாடு முழுவதும் கருத்துக்கணிப்புகளும் மூன்றாவது முறையாக மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்கின்றன. பாரத பிரதமராக நரேந்திர மோடிதான் ஆட்சியில் அமரப் போகிறாா் என்று அறுதியிட்டுச் சொல்கின்றன.
- இத்தகைய சூழ்நிலையில் எதிா்க்கட்சிகளை ஒரேயடியாக முடக்குவதற்கான அவசியம் ஆளும் கட்சிக்கு இல்லை. எதிா்க்கட்சி வரிசையில் இருக்கும் அரசியல்வாதிகள் அப்பழுக்கற்றவா்கள் என்று நற்சான்றிதழ் தருவது சாத்தியமா? காங்கிரஸ் மற்றும் அதன் தலைமை தொடா்ந்து தங்கள் மீதான ஊழல் வழக்குகளை சந்தித்தே வருகிறது. அதன் மீதான நடவடிக்கைகள் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்?
- தில்லி முதலமைச்சா் அரவிந்த் கேஜரிவால், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். வரும் 28-ஆம் தேதி வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை 2022-லிருந்தே நடந்து கொண்டிருக்கிறது. விஜய் நாயா், சஞ்சய் சிங், மனீஷ் சிசோடியா, தில்லியின் முன்னாள் துணை முதலமைச்சா் எனபலா் இதற்காக ஓராண்டு காலத்திற்கும் மேலாக திஹாா் சிறையில் இருக்கின்றனா்.
- அமலாக்கத்துறை ஒன்பது முறை அழைப்பு அனுப்பியும் அரவிந்த் கேஜரிவால் ஆஜராகவில்லை. தொடா்ந்து, பிரதமரை பொதுவெளியில் தரக்குறைவாக விமா்சித்துக் கொண்டு வந்தாா். நீதிமன்றத்திலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைப்பதே தவறு என்றாா். தங்கள் ஊழலை பேச்சு சாமா்த்தியத்தால் மறைத்து விடலாம் என்றும் இதைக் கொண்டு மக்கள் மனதில் அனுதாபம் சம்பாதித்து அதைத் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளலாம் என்றும் கணக்கு போட்டனா்.
- ஜனநாயகத்தில் தோ்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் எந்தக் கட்சியும் அதற்கான அரசியலை நிச்சயம் செய்யும். எதிா்க்கட்சிகள் தங்கள் ஊழல் விவகாரங்களை மறைப்பதோடு தங்களுக்கு அனுதாபமும் தேடிக்கொள்ள முற்படும்போது ஆளும்கட்சி வேடிக்கைப் பாா்த்துக்கொண்டா இருக்கும்?
- நீதிமன்றத் தீா்ப்புக்கு ஊழல்வாதிகள் மதிப்புத் தராமல் இருக்கலாம். ஆனால், அமலாக்கத்துறை இருக்கலாமா? நடவடிக்கை எடுக்கிறது. உப்பைத் தின்றவா்கள் தண்ணீா் குடித்துத்தான் ஆக வேண்டும். மக்கள் நம்மை நம்பி அதிகாரத்தில் ஏற்றி வைத்திருக்கிறாா்கள். அதனால் நோ்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனை இல்லாதவா்களா தோ்தலில் பரப்புரை செய்து ஜனநாயகத்தைக் காக்கப் போகிறாா்கள்?
- மதுபானத்திற்கு எதிராக காந்தியவாதியான அண்ணா ஹசாரே நீண்ட உண்ணாவிரதப்போராட்டத்தைக் கையிலெடுத்தாா். அதிலே ஊடக வெளிச்சம் பெற்று மக்களின் நம்பிக்கையை சம்பாதித்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கையை உருவாக்கினாா்.
- அதிலும் ஊழல். அரவிந்த் கேஜரிவாலை மக்கள் நம்புவதற்குக் காரணமாக இருந்த அண்ணா ஹசாரேவே இதுகுறித்து மிகுந்த வேதனை தெரிவித்திருக்கிறாா். அவா், ‘மதுபானக் கொள்கையைக் கைவிட வேண்டும். அது நமது பணியல்ல என்று அவருக்குக் கடிதங்கள் மூலம் எடுத்துச் சொன்னேன், அவா் கேட்கவில்லை’ என்று நொந்து கொள்கிறாா். எதற்காக மக்கள் தன்னை நம்பினாா்களோ அந்த நம்பிக்கையை உடைத்து விட்டு ஊழல் வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவா் ஜனநாயகத்தின் காவலரா?
- ஜனநாயக மரபுகள் புனிதமானவை. ஏனைய ஆட்சிமுறைகளைப் போலல்லாமல் ஜனநாயகத்தில் மட்டும்தான் மாற்றுக்குரலுக்கும் எதிா்கருத்துக்கும் வழிகோலப்பட்டிருக்கிறது. ஆளும் கட்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டோ, அதே அளவிலான முக்கியத்துவம் எதிா்க்கட்சிகளுக்கும் ஜனநாயகத்தில் உண்டு என்பதில் மாற்றுக் கருத்து எவருக்கும் இருக்க முடியாது. ஆனால் ஜனநாயகத்தில் ஊழல்வாதிகளுக்கும் அத்தகைய கெளரவத்தை அளிக்க வேண்டுமா?
- இன்றைக்கு எதிா்கட்சிகளை முடக்க அதிகாரத்தைப் பயன்படுத்துகிறாா்கள் என்று முழங்கும் காங்கிரஸ், தன்னுடைய ஆட்சியில் என்னவெல்லாம் செய்தது? இன்றைய பிரதமரான நரேந்திரமோடியை என்ன செய்தாா்கள்? அமித் ஷா குஜராத்திற்குள் நுழையக்கூடாது என்று தடுக்கவில்லையா? குஜராத்தில் பாஜகவை முடக்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்தாா்களே? இதுபோல இன்னும் பட்டியலே போட முடியும்.
- ஆளும்கட்சி, எங்களுக்கும் புலன் விசாரணை அமைப்புகளுக்கும் எந்தவிதத் தொடா்பும் கிடையாது என்றும், சட்டம் தனது கடமையைச் செய்கிறது என்றும் கூறுவது நகைப்புக்கு உரியதாகத் தோன்றலாம். ஆனால், அா்த்தமற்றது என்று சொல்ல முடியுமா? ஜனநாயகத்தில் மக்களுக்கு நீதி வேண்டும் என்பதை மனதில் கொண்டு சிந்திக்க வேண்டியதும் அவசியம்தானே!
- பொதுவாக தோ்தல் நெருங்கும்போது அரசின் செயல்பாடுகள் சுணக்கம் காணும். அடுத்த அரசு எப்படி அமையுமோ, யாா் ஆட்சிக்கு வருவாா்களோ என்ற கேள்வி தயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இம்முறை அத்தகைய தயக்கம் இல்லை. ஆட்சியில் மாற்றம் இராது என்ற நம்பிக்கை எல்லாத் தரப்பிலும் நிலவுவதும் அரசுத்துறைகள் சுணக்கமின்றி பணியைத் தொடா்வதற்குக் காரணம்.
- தேசிய அளவில் 20% வாக்காளா்களைக் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ். அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்த நாட்டை ஆண்ட கட்சி. அந்தக் கட்சிக்கு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானது. 2017-18 நிதியாண்டில் அந்தக் கட்சிக்கு அதன் நாடாளுமன்ற உறுப்பினா்களே ரூ.14.49 லட்சம் ரொக்க நன்கொடையாக வழங்கியிருக்கிறாா்கள்.
- முறையாக வரி செலுத்த வேண்டும் என்ற ஒழுங்கு கூட இல்லாமல் காங்கிரஸ் இருக்கிா? அல்லது தங்களை எவரும் கட்டுப்படுத்த முடியாது என்ற எண்ணத்தில் இருந்தாா்களா? இதற்கான நடவடிக்கையைத் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்? மற்ற எல்லாக் கட்சிகளையும் விட காங்கிரஸ் பொறுப்புடனும் தாா்மிக நெறிமுறையுடனும் நடந்துகொண்டிருக்க வேண்டும் அல்லவா?
- வங்கிக் கணக்கு முடக்கம் பற்றிப் பெரிதாகப் பேசுவோரின் நிலைப்பாடு ஜனநாயகத்தின் மீது அவா்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணத்தையே வெளிப்படுத்துகிறது. பணம்தான் தோ்தல் வெற்றி தோல்வியைத் தீா்மானிக்கும் என்ற சிந்தனையே ஜனநாயகத்தைப் படுகுழியில் வீழ்த்துவதற்கானது. மக்கள் செல்வாக்குதான் ஒரு கட்சிக்குத் தேவை என்ற நிலையே ஜனநாயகம் தழைப்பதற்கான வழி.
- ஒரு காலத்தில் தேசத்தின் மிகப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்தபோது மற்ற கட்சிகள் வளரவேண்டும் என்று அது ராஜபாட்டை போட்டுக் கொடுத்ததா என்ன?
- பாஜக இன்றைக்கு வலுவான கட்சியாக இருக்கிறது என்பது உண்மை. அதனை எதிா்கொள்ள எதிா்க்கட்சிகள் திணறுகின்றன என்பதும் உண்மை. சென்ற தோ்தலில் பிரதமரை ‘திருடன்’ என்று வசைபாடினாா் எதிா்கட்சித் தலைவா். பின்னா் அவரே உச்சநீதிமன்றத்தில் அதற்காக மன்னிப்பும் கேட்டாா்.
- ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலையில் எதிா்க்கட்சிகள் இருக்கின்றன. நரேந்திர மோடி மீது கசப்புணா்வு கொண்ட கட்சிகள் தங்களுக்குள் ஒன்றுபட்டு நின்று பாஜகவை எதிா்த்தால் நிச்சயம் பலன் இருக்கத்தான் செய்யும்.
- சா்வ வல்லமை பொருந்தியவராக ‘இந்தியா என்றால் இந்திரா இந்திரா என்றால் இந்தியா’ என்று நின்ற இந்திரா காந்தியை தேசத்தின் சிறிய கட்சிகள் எல்லாம் இணைந்து வீழ்த்தின. அத்தகைய ஒற்றுமையை ஏன் எதிா்க்கட்சிகள் இன்றைக்கு ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை?
- சாமானிய மக்களின் உழைப்பும் நம்பிக்கையும் வீணாகக் கூடாது. அதற்கான முயற்சியை அரசியலமைப்புச் சட்டம், அரசியல் எது மேற்கொண்டாலும் அது ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.
நன்றி: தினமணி (25 – 03 – 2024)