TNPSC Thervupettagam

உம்மன் சாண்டி (1943 - 2023) - அணிகளின் அரசியலாளர்

July 21 , 2023 496 days 327 0
  • மக்கள் கூட்டத்தின் தலைவர் என்கிற வகையில் அறியப்பட்டவர் உம்மன் சாண்டி. கேரள காங்கிரஸ் மாணவர் அமைப்பின்வழி அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்தவர். இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு ஆட்சிக் காலத்தில் குட்டநாடு படகுக் கட்டணத்தை 1 அணாவிலிருந்து 10 காசுகளாக உயர்த்தியதற்கு எதிராக நடந்த ‘ஓரணா சமரம்’தான் இவரை அடையாளம் காட்டிய முதல் போராட்டம். ஏ.கே.ஆண்டனி போன்ற தலைவர்களின் பரிச்சயம் கிடைத்தது. காங்கிரஸின் மாணவ அமைப்பான கேரள மாணவர் சங்கத்தின் ஆற்றல்மிக்க தொண்டராகச் செயல்பட்டார்; அதன் மாநிலத் தலைவரானார்.
  • 1970இல் தனது 27ஆம் வயதில் புதுப்பள்ளி தொகுதி உறுப்பினராகக் கேரள சட்டமன்றத்துக்குள் காலடி வைத்தார். அதிலிருந்து 53 ஆண்டுகளுக்கு நீண்ட சட்டமன்றப் பணியை உம்மன் சாண்டி ஆற்றியிருக்கிறார். இவரைப் பற்றிக் குறிப்பிடும் பலரும் இவரை ‘அணிகளின் தலைவர்’ என்பர். நாள் ஒன்றுக்குப் பத்துப் பதினைந்துக் கூட்டங்கள், தொண்டர்கள் சந்திப்பு எனத் தன் வாழ்நாளைக் கட்சி அணிகளுக்காக அர்ப்பணித்தவர்.
  • உம்மன் சாண்டியைத் தனியாகச் சந்திக்கவே முடியாது என்பதைப் பாராட்டாகவும் விமர்சனமாகவும் சொல்வது உண்டு. முதல்வராகவும் மக்களைச் சந்திப்பதற்காகத் தனித் திட்டத்தைச் செயல்படுத்தினார். நேரடியாக மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். ‘ஜனசம்பர்க்க பரிபாடி’ என்கிற அந்தத் திட்டம், மக்கள் சேவைக்கான ஐ.நா-வின் விருதை இவருக்குப் பெற்றுத் தந்தது.
  • கருணாகரன் அமைச்சரவையில் 1977இல் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக உம்மன் சாண்டி பொறுப்பேற்றார். அந்தக் காலகட்டத்தில், படித்து வேலை இல்லாதவர்களுக்காக இவர் அறிவித்த உதவித்தொகைத் திட்டம் வரவேற்பைப் பெற்றது. கோஷ்டிப் பூசலுக்குப் பெயர் போன காங்கிரஸில், உம்மன் சாண்டி தனது அரசியல் குருவானஏ.கே.ஆண்டனி அணியில் இருந்தார். கேரள மாணவர், இளைஞர் காங்கிரஸைக் கைக்குள் வைத்திருந்த இந்த அணிக்கு எதிராகக் கருணாகரன் இருந்தார்.
  • நெருக்கடிநிலையின்போது காங்கிரஸிலிருந்து விலகிய ஆண்டனி, ‘ஏ’ அணியைத் தொடங்கினார். உம்மன் சாண்டி அந்த அணியில் முன்னணித் தலைவராகச் செயல் பட்டார். பிறகு, அந்த அணி காங்கிரஸில் இணைக்கப்பட்டது. 2004 நாடாளுமன்றத் தோல்விக்குப் பொறுப்பேற்று ஆண்டனி முதல்வர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து உம்மன் சாண்டி முதல்வராகப் பொறுப்பேற்றார். அமைச்சராக ஐந்தாண்டுகள் நிறைவுசெய்யாதவர். தன் அணிக்காகப் பலமுறை அமைச்சர் பதவியைத் துறந்தவர். ‘அணி அரசியல்வாதி’யான உம்மன் சாண்டி, முதல்வர் பதவிக்குத் தகுதியில்லாதவர் என்கிற விமர்சனத்தைப் புறந்தள்ளி, இரண்டு முறை வெற்றிகரமான முதல்வராக இருந்தார்.
  • இவர் தொடங்கிய பல வளர்ச்சித் திட்டங்கள் விமர்சனத்துக்கு உள்ளாயின. நெடுஞ்சாலை, ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ போன்ற திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் விமர்சனத்துக்கும் போராட்டங்களுக்கும் வழிவகுத்தன. ஆனால், ‘வளர்ச்சித் திட்டங்களில் அரசியல் கூடாது’ என்கிற வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப ஒரு பிரச்சாரம்போல் பிரயோகித்து, அந்த விமர்சனங்களை எதிர்கொண்டார்.
  • உம்மன் சாண்டி கொண்டுவந்த திட்டங்களை எதிர்க்கட்சித் தலைவராக வி.எஸ். அச்சுதானந்தன் எதிர்த்தார்; ஆனால், அவற்றின் திறப்பு விழாக்கள் வி.எஸ். ஆட்சிக் காலத்தில்தான் நடைபெற்றன என்பது நகைமுரண். பாமாயில் இறக்குமதி ஊழல், சூரிய மின்சக்திக் கலன் முறைகேடு என உம்மன் சாண்டி சில குற்றச்சாட்டுகளையும் எதிர் கொண்டார். ஆனால், அவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாத வழக்குகளாக மறைந்துபோயின.
  • காங்கிரஸ் கட்சியில் பல பதவிகளை வகித்தவர் உம்மன் சாண்டி. ஆண்டனியை அரசியல் குருவாக வரித்துக்கொண்டாலும், இவர் பின்பற்றிய பாணி கருணாகரனுடையது. தனது அணிகளைத் திரட்டுவதையும் அணிகளுக்கு நடுவில் ஒருவராக இருப்பதையுமே இவர் விரும்பினார்.
  • கேரளத்தின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஆட்களைப் பெயர்களுடன் நினைவு வைத்துக் கொள்ளும் ஆற்றல் இவரைச் செல்வாக்குமிக்க தலைவராக்கியது. தன் தொண்டர்களுக்காகத் தன் வாசலை எப்போதும் திறந்துவைத்திருந்தார். இவரது வாழ்க்கைச் சரித்திரப் புத்தகத்தின் தலைப்பே ‘திறந்திட்ட வாதில்’தான். இதிலிருந்தே இவரது அரசியல் வாழ்க்கையையும் வரையறுக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (21  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories