TNPSC Thervupettagam

உயரட்டும் பெண்களின் அரசியல் பங்களிப்பு

April 17 , 2024 268 days 255 0
  • ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைக்கான முதல்கட்டத் தேர்தலில் 21 மாநிலங்கள் - மத்திய ஆட்சிப் பகுதிகளில் உள்ள 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. போட்டியிடும் 1,625 வேட்பாளர்களில் 134 பேர் பெண்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலோடு (9%) ஒப்பிடுகையில் இது குறைவு (8%) என்கிறபோதும், தமிழ்நாட்டிலிருந்து போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் (77).
  • முதல்கட்டத் தேர்தலைப் பொறுத்தவரை, ஆறு மாநிலங்களில் பெண் வேட்பாளர் ஒருவர்கூட இல்லை. சில மாநிலங்களில் பெண்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை நம்பிக்கையளிக்கும் வகையில் இருக்கிறது.
  • நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மசோதா 2023 செப்டம்பர் மாதமே நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம் எனப் பெரும்பான்மை முன்னணிக் கட்சிகள் தீர்மானித்துவிட்டன போலும்!
  • அதேவேளையில், இடஒதுக்கீடு இல்லாமலே பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆண்களுடன் ஒப்பிடக் கணிசமாக உயர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது. முதல் நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி 2019 தேர்தல் வரை ஆண்களோடு ஒப்பிட பெண் வேட்பாளர்களின் வளர்ச்சி வியக்கவைக்கிறது. 1957 தேர்தலில் 1,474 ஆண்களும் 45 பெண்களும் போட்டியிட்டனர்; 2019இல் 7,322 ஆண்களும் 726 பெண்களும் போட்டியிட்டனர்.
  • ஆக, ஆண் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது; பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையோ 16 மடங்கு உயர்ந்திருக்கிறது. அதேபோல் 1957இல் 4.5% பெண்களே நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், 2019இல் 14.4% பெண்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றனர்.
  • அரசியல் ஆண்களுக்கு மட்டுமான களம் அல்ல என்கிற சிந்தனை மாற்றமும் பெண்களின் அரசியல் பங்கேற்புக்கு ஒரு காரணம். மறுபுறம் பெண்கள் பெரும்பாலும் தோல்வியைத்தான் தழுவுவார்கள் என்கிற கற்பிதம் பலருக்கும் இருக்கிறது.
  • இது தவறு என்பதைத்தான் ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெறும் பெண்களின் எண்ணிக்கை உணர்த்துகிறது. 1957 தேர்தலோடு (31.7%) ஒப்பிடுகையில், 2019இல் ஆண்களின் வெற்றி (6.4%) சரிவடைந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் பெண்களின் வெற்றி (10.74%) ஆண்களைவிட அதிகம்.
  • சில கட்சிகள் பெயரளவுக்குப் பெண்களை வேட்பாளர்களாக அறிவிப்பதும் உண்டு. முதன்மைக் கட்சிகளின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஆண்கள் போட்டியிடும் தொகுதியில் தாங்கள் வெற்றிபெற வாய்ப்பு இல்லை எனத் தெரிந்த பிறகு, அங்கே பெண்களை வேட்பாளர்களாக அறிவிக்கும் கட்சிகளின் செயல், பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவாது.
  • மேலும், முதன்மைக் கட்சிகள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே பெண்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளன. வெற்றிவாய்ப்பு இருக்கிற தொகுதிகளிலும் பொதுத் தொகுதிகளிலும் பெண்களைக் களமிறக்குவதே பெண்களின் முழுமையான அரசியல் செயல்பாட்டுக்கு வழிவகுக்கும்.
  • 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வேட்பாளர்களில் 78 சதவீதத்தினர் 31 முதல் 60 வயதுக்கு உள்பட்டவர்கள் என்பது, இளையோரின் அரசியல் வருகை குறித்து நம்பிக்கை அளிக்கிறது; இவர்களில் 40 வயதுக்குக் குறைவானவர்கள் 35%. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் 31–60 வயதுக்கு உள்பட்ட வேட்பாளர்களே அதிகம். பெண்களும் இளைஞர்களும் அரசியலில் பெரும்பான்மையாகப் பங்களிப்பது நாட்டை ஆள்வோர் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories