புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையேயான பிரச்னை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மிகவும் தெளிவான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
அரசியல் சாசனத்தின் உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்கும் தீர்ப்பாக அமைந்திருப்பதால், இனி வருங்காலத்தில் இந்தியாவில் ஆளுநர் முதல்வர் அதிகாரப் பகிர்வு குறித்த பிரச்னைகள் எழும்போதெல்லாம் இந்தத் தீர்ப்பு மேற்கோள் காட்டப்படும்.
ஆளுனர் நியமனம்
ஆளுநர்கள் நியமனம் குறித்து அரசியல் சாசன சபை மிகவும் விரிவாகவே விவாதித்தது. ஜவாஹர்லால் நேரு, கே.எம். முன்ஷி, பி.எஸ். தேஷ்முக் உள்ளிட்ட பலர், தனது அரசியல் சாசனக் கடமைகளை நிறைவேற்றும் அளவிலான அதிகாரங்களுடன் ஆளுநர்கள் மாநில நிர்வாகத் தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று கருதினர்.
அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தும் அதிகாரம் அவர்களுக்குத் தரப்பட வேண்டுமென்றும், மாநில அரசின் அன்றாட ஆணைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டால்தான், நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பது குறித்து ஆளுநர்களுக்குத் தெரியும் என்றும் பி.எஸ். தேஷ்முக் ஜூன் 2, 1949இல் இது குறித்த விவாதத்தின்போது கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
1967 தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சி அமைந்தபோதுதான் இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் குறித்த பல கேள்விகள் எழும்பின. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், பல மாநிலங்களில் எதிர்க்கட்சி ஆட்சிகளும் ஏற்பட்ட நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மூத்த காங்கிரஸ் தலைவர்களாகவும் இருந்ததால், பிரச்னைகள் ஏற்படத் தொடங்கியதில் வியப்பில்லை.
இப்படியொரு சூழல் ஏற்படும் என்பதை அரசியல் சாசன சபை உணர்ந்து விவாதித்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். 1949 மே 31ஆம் தேதி அரசியல் சாசன சபை விவாதத்தின்போது வெவ்வேறு கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைக்கும்போது, ஆளுநர்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வியை விஸ்வநாத தாஸ் எழுப்பியிருக்கிறார்.
ஆளுநர்கள் மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்று அவர் அப்போது எழுப்பிய கேள்வி தொலைநோக்குப் பார்வையுடன் கூடியது என்பதை கடந்த அரை நூற்றாண்டு கால அரசியல் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியாகிய துணைநிலை ஆளுநர், புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில்தான் செயல்பட முடியும் என்றும், துணைநிலை ஆளுநருக்கு என்று தனியாக சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின், அமைச்சரவையின் அதிகாரத்தைவிட அதிகமான அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை என்றும் வழங்கப்பட்டிருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது. ஜனநாயகத்தில் ஆளுநர்தான் முடிவெடுப்பார் என்றால், தேர்தலும், சட்டப்பேரவையும் அமைச்சரவையும் எதற்காக?