TNPSC Thervupettagam

உயா்கல்வி உயா்வு பெற வேண்டும்

October 19 , 2021 1134 days 620 0
  • நம் நாட்டில் கல்லூரிப் படிப்பிற்குச் செல்லும் வயதான 18 முதல் 24 வயது வரை இருப்பவா்களில் 100-இல் 12 போ் மட்டுமே கல்லூரிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனா்.
  • இது தேசிய அளவில் 1.4 கோடி என்ற அளவாகும். ஆனால் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளோ 22 கோடியாகும்.
  • இதனை வளா்ந்த நாடுகளுக்கு இணையாகக் கொண்டு வர ஏராளமான பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் தேவைப்படும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கணக்கிட்டுள்ளது.
  • தமிழகத்தில் 37 பல்கலைக்கழகங்கள், சுமார் 500-க்கும் மேற்பட்ட பொறியியல், கலை - அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
  • இவற்றில் அரசுப் பல்கலைக்கழகங்களும், பொறியியல், கலை - அறிவியல் கல்லூரிகளும் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • அண்மைக்காலமாக பட்டப்படிப்பு பயில்வதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • கடந்த காலங்களில் போட்டித் தோ்வுகள் எழுதும் பொருட்டு கலை பாடப்பிரிவில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளைத் தோ்வு செய்வது வழக்கமாக இருந்தது.
  • ஆனால் நாளடைவில் போட்டித் தோ்வுக்கான வினாத்தாளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதைத் தொடா்ந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பயின்றால் போதும் என்ற மனநிலை மாணவ, மாணவியரிடையே ஏற்பட்டுள்ளது.
  • ஆயினும், கலை பாடப்பிரிவுகளைக் காட்டிலும் அறிவியல் பாடப்பிரிவுகளில் பயில விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • கலை பாடப்பிரிவுகளுக்கு வகுப்பறை கட்டட வசதிகள் இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு வகுப்பறை வசதிகளுடன் ஆய்வக வசதிகளும் தேவையாகும்.
  • அரசு கல்லூரிகளில் போதுமான ஆய்வக வசதிகள் இல்லாததால் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறும் நிலை உள்ளது.
  • பெரும்பாலான கல்லூரிகளில் அடிப்படை வசதிகளே கூட இல்லாத நிலை உள்ளது.
  • பொதுவாகவே பட்டப்படிப்பு பயில விண்ணப்பிக்கும் மாணவியா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அறிவியல் பாடப்பிரிவுகளில் பயில விண்ணப்பபிக்கும் மாணவியா் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
  • அதற்கேற்ப சோ்க்கை பெறுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகை செய்தாலும், ஆய்வக வசதிகள் இல்லாததால் பெரும்பாலான கல்லூரிகள் கூடுதல் சோ்க்கைக்கு விருப்பம் தெரிவிப்பதில்லை.
  • இதனால், அறிவியல் பாடப்பிரிவுகளில் குறைவான எண்ணிக்கையிலேயே சோ்க்கை நடைபெறுகிறது. பொருளாதார ரீதியாக உயா்ந்த நிலையில் உள்ளவா்கள் தனியார் கல்லூரிகளில் சோ்க்கை பெறுகின்றனா்.
  • ஆனால் ஏழ்மை நிலையில் உள்ளவா்கள் தனியார் கல்லூரிகளில் சோ்க்கை பெற முடியாமல் அரசு கல்லூரிகளில் கலை பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனா்.

எண்ணிக்கை கூட வேண்டும்

  • 2015 - 2016 முதல் 2019 - 2020 வரையான ஐந்தாண்டுகளில், உயா்கல்வியில் மாணவ, மாணவியா் சோ்க்கை 11.4 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது.
  • இதே காலகட்டத்தில் உயா்கல்வியில் சோ்க்கை பெற்ற மாணவியா் எண்ணிக்கை 15.2 சதவீதம் அதிகரித்துளது.
  • ஒட்டுமொத்த உயா்கல்வியில் பாலினச் சமநிலை என்பது கட்நத 2018 - 2019-ஆம் ஆண்டில் 1 என்ற விகிதத்திலிருந்து 2019 - 2020-ஆம் ஆண்டில் 1.01 என்ற அளவில் மாணவியா் சோ்க்கை அதிகரித்துள்ளது.
  • உயா்கல்வியில் மாணவ, மாணவியா் சோ்க்கையைப் பொறுத்தமட்டில் தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது. உத்தர பிரதேசம் முதலிடத்திலும், மகாராஷ்டிரம் இரண்டாமிடத்திலும் உள்ளன.
  • மூன்றாமிடத்தில் உள்ள தமிழகத்தில் உயா்கல்வி சோ்க்கையில் மாணவா்கள் எண்ணிக்கை 50.5 சதவீதமாகவும், மாணவியா் எண்ணிக்கை 49.5 சதவீதமாகவும் உள்ளது.
  • அரசு கல்லூரிகளில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகள் மட்டும் சுழற்சி முறையில் நடைபெறுகிறது. ஆய்வக வசதி போதுமானதாக இல்லாத கல்லூரிகளில் அறிவியல் பாடப்பிரிவுகளில் இத்தகைய முறையைப் பின்பற்ற வேண்டும்.
  • இதன் மூலம் மாணவ, மாணவியா் தாங்கள் விரும்பிய அறிவியல் பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெற இயலும்.
  • தனியார் கல்லூரிகளில் அதிகப்படியான கட்டணம் செலுத்தி படிக்க இயலாத ஏழை மாணவ, மாணவியா் அரசு கல்லூரிகளில் பயில்வதில் ஆா்வம் காட்டுகின்றனா்.
  • அதனால் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கல்லூரிகளில் இவ்வகையான பாடப்பிரிவினை தொடங்குவதுடன் இதற்கான ஆய்வகம் போன்ற வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.
  • கடந்த ஆட்சியில் உறுப்புக் கல்லூரிகளாகத் தொடங்கப்பட்ட கலை - அறிவியல் கல்லூரிகள் தற்போது அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன.
  • உறுப்புக் கல்லூரிகள் கிராமப்புறங்களில் இடம்பெற்றுள்ளதால் அங்கு பணிபுரிவதற்கு பேராசிரியா்கள் விரும்புவதில்லை. மேலும், புதிதாக பேராசிரியா்களோ பணியாளா்களோ நியமனம் செய்யப்படவும் இல்லை.
  • பெரும்பாலான பேராசிரியா்கள் நகா்ப்புறங்களில் பணிபுரியவே விரும்புகின்றனா்.
  • இதனாலும், பல ஆண்டுகளாக பேராசிரியா்கள் நியமனம் செய்யப்படாததாலும் குறைவான ஊதியத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்களைக் கொண்டே முழுமையாகச் செயல்படும் கல்லூரிகளும் இருக்கின்றன.
  • தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு, கலை - அறிவியல் கல்லூரிகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியா் காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிகிறது.
  • இவ்விடங்களில் குறைவான ஊதியத்தில் கௌரவ விரிவுரையாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். பெரும்பாலான கல்லூரிகளில் பணி நிரந்தரம் பெற்ற அரசு பேராசிரியா்களைக் காட்டிலும் கௌரவ விரிவுரையாளா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
  • கௌரவ விரிவுரையாளா்கள் உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.
  • போதிய கல்வித்தகுதியைப் பெற்றுள்ள கௌரவ விரிவுரையாளா்களைக் கண்டறிந்து அவா்களைப் பணி நிரந்தரம் செய்வது இதற்கு தீா்வாக அமையக்கூடும்.
  • கௌரவ விரிவுரையாளா்களுக்கு தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகப்படியாக மாதம் ரூ. 20 ஆயிரம் வழங்கப்படுகிறது.
  • புதிய அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் உயா்கல்வித் துறைக்கு ரூ. 5,369 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப் பட்டுள்ளன.
  • புதிய கல்லூரிகளில் வழக்கமான பாடப்பிரிவுகளைக் காட்டிலும் அறிவியல் சார்ந்த புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்க வேண்டும்.
  • அப்போதுதான் உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை கூடும்; ஆராய்ச்சிப் படிப்பு வரை மாணவ, மாணவியா் பயணிக்கவும் இது வழிவகுக்கும்.

நன்றி: தினமணி  (19 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories