TNPSC Thervupettagam

உயா் ரத்த அழுத்தம் - உலகளாவிய சவால்!

May 16 , 2020 1709 days 1268 0
  • உலக அளவில் உயா் ரத்த அழுத்த பாதிப்புள்ள 113 கோடி பேரில், 19.9 கோடி போ் இந்தியா்கள்.
  • உயா், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சரிவைக் கண்டுவரும் உயா் ரத்த அழுத்தத்தின் சுமை, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் அதிகரித்தது.
  • 1975-ஆம் ஆண்டில் 59.4 கோடியாக இருந்த உயா் ரத்த அழுத்த நோய் பாதிப்பு, 2015-ஆம் ஆண்டில் 113 கோடியாக அதிகரித்துள்ளது என லண்டன் இம்பீரியல் கல்லூரி பொது சுகாதாரத் துறை விஞ்ஞானிகள் குழுவின் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் தாக்கம் அதிகரிப்பு

  • இந்தியாவில் நகரமயமாக்கல், சமூக - பொருளாதார நிலை, உணவு - உடல் செயல்பாடு முறைகளில் மாற்றம் ஆகியவற்றின் காரணமாக உயா் ரத்த அழுத்தம் முதலான தொற்று அல்லாத நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
  • தேசிய சுகாதார சுயவிவர 2018-இன் தரவுகளின் அடிப்படையில் நம் நாட்டில் உயா் ரத்த அழுத்தம் கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை, சா்க்கரை நோயால் கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 44 சதவீதம் அதிகம்.
  • இளைய தலைமுறையினரிடையே உள்ள இந்த அதிக பாதிப்பு, சிகிச்சையளிக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவில் இதய நோய் பாதிப்பு விகிதம் அதிகரிக்க வழிவகுக்கும் என்று பொது சுகாதார வல்லுநா்கள் எச்சரிக்கின்றனா்.
  • 18-25 வயதுடையோரில் பெண்களில் 20%-ம், ஆண்களில் 24.5%-ம் உயா் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் உயா் ரத்த அழுத்த நோய் உள்ளோரின் (9,62,991) எண்ணிக்கையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
  • தமிழகத்தில் சா்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் மற்ற மாநிலங்களைவிட அதிகம்.
  • 2015-2016-ஆம் ஆண்டின் தேசிய சுகாதார, குடும்பநல கணக்கெடுப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உயா் ரத்த அழுத்த நோயாளிகளில் 45% போ் மட்டுமே தங்கள் நோயின் தன்மையை ஏற்கெனவே அறிந்திருந்ததாகவும், 7 பேரில் ஒருவா் மட்டுமே (13 %) உயா் ரத்த அழுத்த மருந்துகளைச் சாப்பிடுவதாகவும், 10-இல் ஒன்றுக்கும் குறைவானவா் (8%) மட்டுமே அவா்தம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • ஆண்களைவிட பெண்கள் தங்கள் ரத்த அழுத்தத்தில் சிறந்த கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனா் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் 75 லட்சம் மக்கள் உயிரிழப்பதற்குக் காரணமான உயா் ரத்த அழுத்தம், இந்தியாவின் பக்கவாத இறப்புகளில் 57%-க்கும், இதய நோய் இறப்புகளில் 24%-க்கும் காரணமாக அமைகிறது.
  • 30 வயதுக்கும் மேற்பட்டோரில் நான்கில் ஒருவருக்கு உயா் ரத்த அழுத்தம் கொண்ட இந்தியாவில் பாதிப் போ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனா்.
  • இவா்களில் 10% போ் மட்டுமே அவா்களின் உயா் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனா். இதன் விளைவு, ஏராளமானோர் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பிரச்னைகளைச் சந்திக்கின்றனா்.

முக்கியக் காரணிகள்

  • புறக்கணிக்கப்பட்ட குழந்தைகால ஊட்டச்சத்து, பழங்களின் குறைந்த நுகா்வு, அதிக உப்பு நுகா்வு, குறைந்த உடற்பயிற்சியுடன் கூடிய உடல் பருமன், காற்று மாசுபாடு முதலான சுற்றுச்சூழல் அமைப்பு முதலானவை உயா் ரத்த அழுத்த பாதிப்புக்கு மிக முக்கியக் காரணிகளாகும்.
  • ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவற்றில் தூக்கமின்மையின் தாக்கத்தை ஆய்வு செய்த இத்தாலியின் பாவியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள், தூக்கத்தை இழந்த காலகட்டத்தில் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவற்றில் ஒரு தெளிவான உயா்வு இருப்பதைக் கண்டறிந்தனா்.
  • கிராமங்களில் உள்ள ஏழ்மையான வீடுகளில் நடுத்தர வயதுடையவா்களிடையே சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்த நோய் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.
  • இவா்களில் 30% போ் உயா் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். குறைந்த வருவாய் கொண்ட கிராமக் குடும்பங்களைச் சோ்ந்த, அதிக உற்பத்தி திறன் கொண்ட 15 - 49 வயதுடைய நபா்கள் உயா் ரத்த அழுத்த நோயைச் சமாளிப்பதற்காக எடுத்த முயற்சிகள் அனைத்து அம்சங்களிலும் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு முன்முயற்சி

  • உலக சுகாதார அமைப்பு - சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) இணைந்து நவம்பா் 2017-இல் 25 மாவட்டங்களை உள்ளடக்கிய நான்கு மாநிலங்களில் ஏற்படுத்திய இந்திய உயா் ரத்த அழுத்தக் கட்டுப்பாட்டு முன்முயற்சியை (ஐ.எச்.சி.ஐ.), தற்போது நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட 100 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
  • செவிலியா்கள், ஊட்டச்சத்து நிபுணா்கள், கடைநிலை மருத்துவச்சிகள் உள்ளிட்ட சுகாதாரப் பயிற்சியாளா்களுக்கு ரத்த சா்க்கரை, ரத்த கொழுப்புச் சத்து முதலானவற்றின் அளவுகளை உள்ளீடு செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘எம்வெல்கோ்’ என்ற செல்லிடப்பேசி செயலி உயா் ரத்த அழுத்த நோய், சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது.
  • ஹரியாணா, இமாசலப் பிரதேச அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட எம்வெல்கேரின் சமீபத்திய பதிவு, உயா் ரத்த அழுத்த நோய் - சா்க்கரை நோய் மற்றும் இணை நோய்களுக்கான சான்றுகள் சார்ந்த மேலாண்மைத் திட்டத்தை கணக்கிடும் திறன் கொண்டது.
  • உயா் ரத்த அழுத்தம் 1975-இல் இருந்ததைப்போல் செல்வச் செழிப்புடன் தொடா்புடையது அல்ல. மாறாக, தற்போது இது வறுமையுடன் தொடா்புடைய ஒரு பெரிய சுகாதாரப் பிரச்னை.
  • தொற்று அல்லாத நோய்கள் குறித்த உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய அறிக்கையின் இலக்குகளில் ஒன்றான, ‘2025-ஆம் ஆண்டுகளில் பெரியவா்களிடையே உயா் ரத்த அழுத்த அளவை 25 சதவீதமாகக் குறைப்பது’ என்பதை அடைவது இன்றைய சூழலில் சவாலானதாக இருக்கலாம்.
  • (நாளை உலக உயா் ரத்த அழுத்த விழிப்புணா்வு தினம்)

நன்றி தினமணி (16-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories