TNPSC Thervupettagam

உயிர்ப் பன்மையைச் சிதைக்கும் ஒளி மாசு

July 2 , 2023 568 days 370 0
  • சூழலியல் தொகுதிகளையும் காட்டுயிர்களையும் பாதிக்கும் பலதரப்பட்ட மாசுகளைப் போல் ஒளி மாசுவும் (light pollution) சூழலியல் தொகுதிகளைப் பாதிக்கவே செய்கிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டுக்குச் சராசரியாக 2% ஒளி மாசு அதிகரித்துவருவது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உலக மக்கள்தொகையில் 80% மக்கள் ஒளி வெள்ளத்தின் கீழ் வசிக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் பல லட்சம் உயிரினங்கள் ஒளி மாசு காரணமாகப் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றன. ஆனால், இந்த ஒளி மாசு பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவு மக்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசு அதிகாரிகளிடம் இல்லை என்பதே உண்மை.
  • இருள் சூழ்ந்து இருக்க வேண்டிய இரவு நேரத்தில் செயற்கையான முறையில், பொருத்தமற்ற வகையில் அளவுக்கு அதிகமான ஒளியை மின்சார விளக்குகளிலிருந்து பரவச் செய்வதே ஒளி மாசு. உலகமயமாக்கல், துறைமுக விரிவாக்கம், புதிய ஆலைகள், சாலைகள், விமான நிலையங்கள், நகரமயமாதல் போன்ற சமகால வளர்ச்சிப் பணிகள் அனைத்திலும் அதிக ஒளி உமிழும் மின்சார விளக்குகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இடங்களில் ஒளி மாசு என்பது கவனம் கொள்ளப்படாத ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

சூழலியல் தொகுதியும் ஒளியும்

  • ஒரு சூழலியல் தொகுதிக்கும் அடிப்படை ஆற்றல் ஆதாரம் என்பது இயற்கையான சூரிய ஒளியே. பல லட்சம் ஆண்டுகளாகத் தாவரங்கள், விலங்கினங்களின் உயிரியல் அடிப்படைத் தேவைகள் சூரிய ஒளியைச் சார்ந்தே இருக்கின்றன. உலகில் இருக்கும் பெரும்பகுதி உயிரினங்கள் சூரிய ஒளி அதிகம் இருக்கும் பகல் பொழுதுகளில் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றன; இரவு நேரம் அவற்றுக்கு ஓய்வாகும். அது போலவே ஒளி இல்லாத இரவுப் பொழுதுகளில் மட்டுமே சுறுசுறுப்பாகச் செயல்படும் உயிரினங்களும் உண்டு. பல நேரம் அதிக ஒளி உமிழும் செயற்கை விளக்குகளால் இந்த உயிரினங்கள் குழப்பமடைகின்றன; பாதிக்கப்படுகின்றன.

தாவரங்களின் மீது ஒளியின் தாக்கம்

  • 2017இல் வெளிவந்த ஓர் ஆய்வுக் குறிப்பின்படி, ஒளி மாசு அதிகம் உள்ள பகுதிகளில் இருக்கும் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக, மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்குக் காரணமாக இருக்கும் சிறிய பூச்சி இனங்கள், தேனீக்கள் அதிக ஒளி உமிழும் விளக்குகளால் ஈர்க்கப்பட்டு, பிறகு அங்கேயே மரணிப்பது குறிப்பிடப்படுகிறது. மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் பூச்சி இனங்கள் போதுமான அளவு இல்லாத காரணத்தால் சத்து நிறைந்த உணவு கிடைப்பது சிரமம் என்கிறது அந்த ஆய்வு.

கடல் உயிரினங்களின் மீதான தாக்கம்

  • உலகின் கடற்பரப்பில் 1.9 மில்லியன் கிலோமீட்டர் அளவுக்குக் கடல் பரப்பானது தொடர்ந்து ஒளி மாசால் பாதிக்கப்படுகிறது. இந்த ஒளி மாசானது கிட்டத்தட்ட ஒரு மீட்டர் ஆழம் வரை கடலினுள் ஊடுருவிச் செல்கிறது. இந்தச் செயற்கையான ஒளி கடலினுள் ஊடுருவிச் செல்லும்போது கடலில் இருக்கும் மிதவை உயிரினங்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றன.
  • சூரிய ஒளியை நம்பி தினமும் வலசை போகும் இந்த மிதவை உயிரினங்கள், செயற்கை ஒளியால் தடுமாற்றம் அடைகின்றன. வலசை போகும் கால அளவுகளில் தடுமாற்றம் ஏற்படுவதால், அவற்றின் எண்ணிக்கை பெருமளவு குறைகிறது. இந்த மிதவை உயிரிகளே சிறு மீன்களுக்கு உணவாக உள்ளன. எனவே, மிதவை உயிரிகளின் எண்ணிக்கை பல லட்சக்கணக்கில் குறையும்பட்சத்தில், அது கடல் மீன் வளத்தையே பெரிய அளவில் பாதிக்கும் என்கின்றன ஆய்வுகள். மேலும் கடலில் மழைக் காடுகள் என்று அழைக்கப்படும் பவளத்திட்டுகள் ஒளி மாசு காரணமாகப் பெரிய பாதிப்புகளைச் சந்தித்துவருவதாக ஆரம்பக்கட்ட ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
  • உலகின் பல பகுதிகளில் ஒளி மாசுபாட்டின் காரணமாகக் கடல் ஆமை இனங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன எனப் பல ஆய்வுகள் விளக்கி உள்ளன. முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குஞ்சுகள், கடலில் இருக்கும் ஒளிரும் நுண்பாசிகளை நோக்கி முன்னேறும். சிறிது நேரத்திலேயே அவை கடல் நீரை அடைந்து நீந்தத் தொடங்கிவிடும்.
  • ஆனால், தற்போது பல கடற்கரைகளில் அதிக ஒளி உமிழும் விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், கடலில் இருந்து எழும் ஒளி எது, செயற்கை ஒளி எது என்பதை ஆமைக்குஞ்சுகளால் பிரித்து உணர முடிவதில்லை. கடலை நோக்கி அவை நகர்வதற்குப் பதிலாகக் கடலுக்கு எதிர்த் திசையில் பயணிக்கின்றன. பிறகு கடல் பறவைகள், காகங்கள், நாய்கள் உள்ளிட்டவற்றுக்கு உணவாக மாறிவிடுகின்றன. கடல் ஆமைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் வீழ்ச்சியடைவதற்கு இதுவே காரணம் என ஆய்வுக் குறிப்புகள் கூறுகின்றன.

பறவைகள்

  • ஒவ்வோர் ஆண்டும் வலசை போகும் பல லட்சம் பறவைகள் ஒளி மாசு காரணமாக உயிரிழப்பதாக உலகம் முழுவதும் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வாத்து, அன்னம், கடல் காகம், வானம்பாடிகள், பொரி உள்ளான் போன்றவை அதிக உயிரிழப்புகளைச் சந்திக்கின்றன. வலசை போகும் பர்பிள் மார்ட்டின் அதிக செயற்கையான ஒளி இருக்கும் இடத்தில் பல நாள் இருப்பதால், அவற்றின் உயிரியல் கடிகாரம் தடுமாற்றத்துடன் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
  • இதன் காரணமாக அவை எட்டு நாள்களுக்கு முன்பே வலசைப் பயணத்தைத் தொடங்குகின்றன. மேலும் குறிப்பிட்ட நாளுக்கு முன்பே அவை இலக்கை அடைந்துவிடுவதால் சாதகம் அற்ற காலநிலை, உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. பெரும் நகரங்களில் வசிக்கும் புறா, வண்ணாத்திக் குருவி போன்ற பறவைகள் அதிக ஒளி மாசு இருக்கும் சூழ்நிலையில் வசிப்பதால் அவற்றிற்குத் தொடர்ச்சியான தூக்கம் கிடைப்பதில்லை. பகல் பொழுதுகளில் அவை தடுமாற்றத்துடன் நடந்துகொள்கின்றன.

விழிப்புணர்வு அவசியம்

  • டெல்லியில் உள்ள தௌலத் ராம் கல்லூரியினர் 2020- 2021 காலகட்டத்தில் ஒளி மாசு பற்றிய சில அடிப்படைக் கேள்விகளை மக்களிடம் கேட்டனர். அந்த ஆய்வு முடிவின்படி 57% இந்தியர்கள் ஒளி மாசு என்கிற வார்த்தையே தங்களுக்குப் புதிதாக இருப்பதாகக் கூறினார்கள். மீதமுள்ள 43% மக்களுக்கு அது பற்றிய விழிப்புணர்வு குறைந்த அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், ஒளி மாசுபாட்டின் அளவானது இந்தியாவின் பெருநகரங்களில் வெகுவாக அதிகரித்துவருகிறது. ஒளி மாசுபாட்டிலிருந்து உயிரினங்களைப் பாதுகாப்பது மட்டுமன்றி, நாமும் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்துவருகிறோம்.

நன்றி: தி இந்து (02 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories