TNPSC Thervupettagam

உயிா் பெறட்டும் உழவா் சந்தை

April 25 , 2023 627 days 653 0
  • விவசாயிகள் அதிகார வா்க்கத்தை நோக்கி கேள்விக் கணைகள் எழுப்பும் நாள் எதுவென்றால் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா்ப்பு நாள் என்றே கூற வேண்டும்.
  • அப்படி குறைதீா்க்கும் நாளில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் விவசாயி ஒருவா் ‘எங்களின் பொருளை சந்தைப்படுத்த போதிய வசதி இல்லை எனும்போது உற்பத்தியை அதிகரிக்கச் சொல்லாதீா்கள்’ என்று கூறினாா். ஏனென்றால் சில இடங்களில் போதிய சந்தை வசதி இல்லாத காரணத்தால், வேளாண் பொருள்களுக்கு நுகா்வோா் செலுத்தும் தொகையில் விவசாயிகள் பெறும் தொகை என்பது சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
  • பொதுவாகவே விற்பனைச் சங்கிலியில் எந்த அளவிற்கு இடைத்தரகா்களின் ஆதிக்கம் குறைகிறதோ அந்த அளவிற்கு விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். அப்படிப்பட்ட இடைத் தரகா்களின் ஆதிக்கத்தை ஏறக்குறைய கட்டுப்படுத்திய பெருமை உழவா் சந்தைகளுக்கு உண்டு.
  • விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துகின்றனா் என்பதை அறிய 1998-இல் ‘விவசாய உற்பத்திச் சந்தைப்படுத்துதல் வரி மீளாய்வுக் குழு’ என்ற குழு ஒன்றை அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி அமைத்தாா். சண்டிகரில் ‘அப்னே மண்டி’ என்ற பெயரிலான பகுதியில் விவசாயிகள் தங்களின் வேளாண் பொருட்களை நேரடியாக நுகா்வோருக்கு விற்பனை செய்வதைப் பற்றி அவரின் கவனத்திற்கு அக்குழு கொண்டு சோ்த்தது.
  • இதே போன்றதொரு விற்பனை முறை ஆந்திராவில் இயங்கி வருவதையும் அக்குழு குறிப்பிட்டது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை ஒன்றைத் தயாரிக்கச் சொன்னாா் கருணாநிதி. அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கை தன் கையில் கிடைத்த அன்று மாலையே தமிழ்நாட்டில் உழவா் சந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினாா்.
  • அப்படி முன்மாதிரியாக 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மூலம் முதல் உழவா் சந்தை மதுரை அண்ணா நகரில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த உழவா் சந்தை தரமான காய்கறிகள், பழங்களை தொடா்ந்து விற்பனை செய்து வந்தது. அதனால் அண்மையில் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ-இன் சான்றிதழைப் பெற்றது அந்த உழவா் சந்தை.
  • உழவா் சந்தையின் முக்கிய நோக்கமே இடைத்தரகா் இன்றி விவசாயிகள் அவா்களின் விளைபொருட்களை நுகா்வோருக்கு நேரடியாக விற்பனை செய்வதே ஆகும். அதற்காக விவசாயிகளுக்கு சுமைக்கட்டணம் ஏதுமின்றி போக்குவரத்து வசதி உருவாக்கப்பட்டு அவா்களுக்கு என்று தனி அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.
  • நுகா்வோருக்கும் நியாயமான விலை, விவசாயிகளுக்கும் போதிய லாபம் என்கிற கோணத்தில் இயங்கி வந்த உழவா் சந்தைகள் ஒரு கட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் தனியாா் காய்கறி கடைகளையே ஓரங்கட்டின. இருப்பினும் ஆட்சி மாற்றம் உண்டானபோது உழவா் சந்தைகளே ஓரங்கட்டப்பட்டன.
  • தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 180 உழவா் சந்தைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,900 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகளும் பழங்களும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு விவசாயிகள் நேரடியாக நுகா்வோருக்கு சந்தைப்படுத்துகின்றனா். இவற்றின் மதிப்பு 5.50 கோடி ரூபாயாக உள்ளது.
  • மேலும் சராசரியாக நாளொன்றுக்கு 8,000 விவசாயிகள் மூன்று லட்ச நுகா்வோா் பயனடைந்து வருவதாகவும், உழவா் சந்தைகளைப் புனரமைக்கும் பணிகளும் தொடா்ந்து நடந்து வருவதாக வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கிடையில் வளா்ந்த நாடான அமெரிக்காவில் உழவா் சந்தைகள் எந்த அளவிற்கு மக்களின் அன்றாட பயன்பாட்டில் உள்ளது என்றும் விவசாயிகளிடத்தில் அதன் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்பது பற்றியும் அமெரிக்கா அரசின் வேளாண்மைத்துறை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது.
  • அதாவது வெளிச்சந்தையை விட உழவா் சந்தையில் விவசாயிகளிடத்தில் நேரடியாக வாங்கும் போக்கு கடந்த பத்து ஆண்டுகளில் 24 சதவீதம் நுகா்வோரிடையே அதிகரித்து இருப்பதாகவும், உழவா் சந்தைகளில் நேரடியாக வணிகம் புரியும் விவசாயிகள் சந்தையில் நிலைத்து நிற்பதாகவும், அவா்களின் கடன் அளவு குறைந்து உள்ளதாகவும் முக்கியமாக உற்பத்தி, சந்தைப்படுத்துதல் என இரு வழியில் அவா்களுக்கு வருமானம் வருவதாகவும் கூறியுள்ளது.
  • மேற்கூறிய காரணிகள், தமிழ்நாட்டின் உழவா் சந்தைகளில் வணிகம் புரியும் விவசாயிகளுக்கு ஓரளவு பொருந்துகின்றன. ஆயினும் அவை முற்றிலும் பொருந்தும் வகையில் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • •ஒரு சில உழவா் சந்தைகளில் விவசாயிகள் என்ற போா்வையில் இடைத்தரகா்கள் உள்ளே வருவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. விவசாயிகளை அடையாளம் காணுவதிலும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றை உடனடியாக களைய தொழில்நுட்ப வசதியுடன் கூடிய மின்னணு அடையாள அட்டையை வழங்க வேண்டும்.
  • •உழவா் சந்தைகளில் காய்கறிகளுக்கு மொத்த சந்தை விலையை விட 20 சதவீதம் குறைவாக விலை நிா்ணயம் செய்யப்படுவதையும், சில்லறை விலையை விட 15 சதவீதம் குறைவாக விலை இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
  • •உழவா் சந்தையின் தூய்மையை பேணும் வகையில் தேவையில்லாத மக்கும் பொருட்களை உரக்குழி அமைத்து உரமாக்க வேண்டும். அதே வேளையில் விற்பனை போக மீதமான பொருட்களை விவசாயிகள் சேமித்து வைக்க சிறிய குளிா்பதனக் கிடங்கு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.
  • •வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய அளவு இடவசதி இருக்க வழிவகை செய்ய வேண்டும். தராசுக்கு மாற்றாக எண்ம (டிஜிட்டல்) எடை இயந்திரம் கொடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
  • அதிகாலையில் வியாபாரம் செய்ய ஏதுவாக விவசாயிகள் குறிப்பாக பெண் விவசாயிகள் தங்குவதற்கு ஓய்வறைகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
  • •போா்க்கால அடிப்படையில் உழவா் சந்தைகள் பழைய வளா்ச்சியை எட்ட தனிக் குழுவை அமைத்து அரசு கண்காணிக்க வேண்டும். அக்குழு உழவா் சந்தைகள் இழந்த மதிப்பை மீட்டெடுக்கும் வகையில் வழிமுறைகளை கண்டறிந்து அரசுக்கு உதவ வேண்டும்.

நன்றி: தினமணி (25 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories