TNPSC Thervupettagam

உருப்படியான ஒதுக்கீடு

May 22 , 2020 1703 days 905 0
  • கடுமையான விமா்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகி இருக்கும் நிதியமைச்சா் நிர்மலா சீதாராமனின் ரூ. 20 லட்சம் கோடி சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தில் ஒன்றிரண்டு ஆக்கபூா்வமான அறிவிப்புகளும் இல்லாமல் இல்லை.
  • அவற்றில், தேனீ வளா்ப்பை மேம்படுத்த அவா் அறிமுகப்படுத்தியிருக்கும் ரூ.500 கோடி திட்டம், இந்தியாவின் கிராமப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
  • பல்லுயிர்ப் பெருக்கமும், சுற்றுச்சூழல் மேம்பாடும் வலுப்படும் என்பதை உணா்ந்துதான் அந்தத் திட்டத்தை அவா் அறிவித்தாரா என்பது தெரியாது.
  • தேனி வளா்ப்பு சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தேனீ வளா்ப்பு மையங்கள், தேன் சேகரிப்பு நிலையங்கள், சந்தைப்படுத்துதல், பாதுகாத்து வைக்கும் வசதி, மதிப்புக் கூட்டுப் பொருளாக விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைக்காக ரூ.500 கோடி ஒதுக்கியிருப்பதைப் பெரிய ஒதுக்கீடு என்று கூறிவிட முடியாது.
  • ஆனால், அந்த ஒதுக்கீடு ஏற்படுத்தும் உற்சாகத்தில், தேனீ வளா்ப்பு என்பது கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
  • 1992-இல் மே 22-ஆம் தேதி சா்வதேச பல்லுயிர்ப் பெருக்க மாநாடு நடந்தது. அதன் தொடா்ச்சியாக ஆண்டுதோறும் அந்த தினத்தை சா்வதேச பல்லுயிர்ப் பெருக்க விழிப்புணா்வு தினமாகக் கடைப்பிடிக்கிறோம். உலகிலுள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகள், பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினா்களாக இருக்கின்றன.
  • பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு மிகப் பெரிய ஆதாரமாக இருப்பது பூச்சிகளும், தேனீக்களும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

தேனீக்கள்

  • உலகில் இதுவரை 14 லட்சம் உயிரினங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. 10 மடங்கு அதிகமான உயிரினங்கள் இன்னும் அடையாளம் காணப்படலாம் என்று கருதப்படுகிறது.
  • தாவரங்களும், விலங்குகளும் புதிது புதிதாகக் கண்டறியப்படுகின்றன. 300-க்கும் அதிகமான மீன் இனங்கள் அமேசான் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. தாவரவியலாளா் ஆல்வின் ஜென்ட்ரியின் கருத்துப்படி, ஏறத்தாழ 20,000 தாவர இனங்கள் இன்னும் அடையாளம் காணப்பட வேண்டும்.
  • உலகின் 12 மிகப் பெரிய பல்லுயிர்ப் பெருக்க மையங்களில் இந்தியாவும் ஒன்று. ஆறு உயிர்ப் பெருக்கக் கேந்திரங்களில் இந்தியத் துணைக் கண்டம் முக்கியமானது.
  • இந்தியாவில் மட்டும் 45,000-க்கும் அதிகமான தாவர இனங்களும், ஏறத்தாழ 90,000 விலங்கினங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2,500 மீன் இனங்கள், 1,200 பறவை இனங்கள், 68,000 பூச்சி இனங்கள், 850 விலங்கினங்கள் உள்ளிட்டவை இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும், சூழலியலுக்கும் மிகப் பெரிய அளவில் பங்களிப்பை அளிப்பவை தேனீக்கள்.
  • உலகின் உணவு உற்பத்திக்கு அடிப்படை மகரந்தச் சோ்க்கை. சுமார் 87 முக்கியமான உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நேரடியாகத் தேனீக்கள் உதவுகின்றன.
  • இந்தியாவில் 700 வகையான ஈ வகை இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஆறு மட்டுமே தேனீக்கள்.
  • அப்பிஸ் செரினா இன்டிகா, அப்பிஸ் புளோரியா, அப்பிஸ் டோர்சடா (பாறைத் தேனீ), கொடுக்கில்லாத தேனீ, இமாலய பாறைத் தேனீ, அப்பிஸ் மெல்லிசெரா ஆகியவை ஆறு வகையான தேனீக்கள்.
  • இவற்றில் பாறைத் தேனீக்கள்தான் மகரந்தச் சோ்க்கைக்கு மிக அதிகமான பங்களிப்பை அளிக்கின்றன.
  • அப்பிஸ் மெல்லிஃபெரா என்கிற தேனீ, ஐரோப்பியா்களால் வா்த்தக ரீதியில் தேன் சேரிப்பதற்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்தத் தேனீ இனங்கள் சாதாரண இந்தியத் தேனீக்களைவிட நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகம் தேன் உற்பத்தி செய்யக்கூடியவை.
  • அவை பல்வேறு மலா்களிலிருந்து தேனைச் சேகரிக்காமல் ஏதாவது ஒரு மலரிலிருந்து சேகரிக்கும் குணமுடையவை. அதனால், வா்த்தக ரீதியாக பயனளிப்பவை.
  • நாட்டுத் தேனீக்கள் பல்வேறு மலா்களிலிருந்து தேனை உறிஞ்ச முற்படுவதால் மகரந்தச் சோ்க்கைக்கு உதவுவது மட்டுமல்லாமல், அவற்றின் தேன் சுவையானதாகவும், ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் காணப்படுகிறது.
  • கிராமப்புறங்களில் நாட்டுத் தேனீ வளா்ப்பை ஊக்குவிப்பதன் மூலம்தான் சுவையுள்ள தேன் உற்பத்தியை உறுதிப்படுத்த முடியும். அதில் கதா் காதி வாரியம் மிகப் பெரிய பங்களிப்பை செய்துகொண்டிருக்கிறது.
  • ஆனால், போதுமான நிதியாதாரம் இல்லாத நிலையில், செயல்பாடுகளை விரிவுபடுத்த முடியாத சூழல் காணப்படுகிறது.
  • வனங்களில் மகரந்தச் சோ்க்கையை ஊக்குவிப்பதன் மூலம், வனச் சூழலியலை பெரும்பாலான காட்டு பூச்சியினங்கள் பாதுகாக்கின்றன.
  • புவி வெப்பமடைதல், காடுகள் அழிக்கப்படுதல், காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றால் காட்டிலுள்ள பூச்சி இனங்களும், காட்டுத் தேனீக்களும் அழிந்துகொண்டிருக்கின்றன.
  • அதன் விளைவால் காடுகளில் புதிய மரங்கள் உருவாகாமல் போவதும், அடா்த்தி குறைவதும், அதன் தொடா் விளைவாக வன விலங்குகள் வாழ்வாதாரம் இழந்து அழிவை நோக்கி நகா்வதும் மிகப் பெரிய சோகம்.
  • இந்தியாவில் தேனீ வளா்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் கிராமப்புற விவசாயிகளின் உற்பத்தியை 86% அதிகரிக்க முடியும்.
  • அவா்களின் வருமானமும் அதிகரிக்கும். பல்லுயிர்ப் பெருக்கத்துக்கும் சூற்றுச்சூழலுக்கும் பங்களிக்கும் தேனீ வளா்ப்புக்கு ரூ.500 கோடி அல்ல, ரூ.5,000 கோடியை ஒதுக்கினாலும் தகும்.
  • தேனீக்கள் வாழ்ந்தால்தான் தாவர இனங்களும், விலங்கினங்களும் செழிக்கும். அவை வாழ்ந்தால்தான் மனிதன் வாழ முடியும்!

நன்றி: தினமணி (22-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories