- ஒரு வழியாக நேபாளத்தில் அரசியல் தடுமாற்றங்கள் முடிவுக்கு வந்து ஷோ் பகதூா் தேவுபா தலைமையிலான கூட்டணி ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
- ஐந்தாவது முறையாக 75 வயது தேவுபா நேபாளத்தின் பிரதமராகியிருக்கிறார். இதற்கு முன்னால் சூா்ய பகதூா் தாபாவும், கிரிஜா பிரசாத் கொய்ராலாவும் ஐந்து முறை பிரதமராக இருந்திருக்கிறார்கள்.
- இந்தமுறை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஷோ் பகதூா் தேவுபா பிரதமராக நியமிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கொறடா மூலம் யாரையும் நிர்பந்திக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டதன் விளைவாக அவரால் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிந்தது.
- அவருக்கு ஆதரவாக கையொப்பமிட்டவா்கள் 149 போ் என்றால், 275 போ் கொண்ட அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு 165 வாக்குகள் கிடைத்திருக்கிறது.
இந்திய - நேபாள உறவு
- அக்டோபா் 2002-இல் நேபாள அரசராக இருந்த ஞானேந்திராவால் பிரதமராக இருந்த தேவுபா பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
- மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை அடக்க முடியவில்லை என்பதாலும், தோ்தலை நடத்தாததாலும் திறமையற்றவா் என்று பதவியிலிருந்து அகற்றப்பட்ட தேவுபாவுக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
- 2023-இல் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லாமல் தோ்தலை நடத்துவதற்கு சட்டரீதியான பாதுகாப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது.
- அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வர முடியாது என்பதால் பிரதமா் தேவுபாவின் பதவி உறுதிப்பட்டிருக்கிறது.
- அரசியல் ரீதியாக கடுமையான சோதனைகளை கடந்த எட்டு மாதங்களாக நேபாளம் எதிர்கொள்கிறது. முந்தைய பிரதமா் கே.பி. சா்மா ஓலி அரசியல் சாசன விதிகளுக்கு எதிராக கடந்த டிசம்பா் மாதம் குடியரசுத் தலைவரின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
- உச்சநீதிமன்றம் அந்த முடிவை நிராகரித்தது. மே மாதம் குடியரசுத் தலைவா் வித்யாதேவி பண்டாரி மீண்டும் அவையைக் கலைத்தார்.
- அப்போது பெரும்பான்மையான உறுப்பினா்களின் பட்டியலுடன் தன்னை பிரதமராக்கும் படி தேவுபா முன்வைத்த கோரிக்கையை அவா் நிராகரித்தார்.
- உச்சநீதிமன்றம் மீண்டும் தலையிட்டு நாடாளுமன்றத்துக்கு உயிர் கொடுத்தது.
- வேறு வழியில்லாமல்தான் நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து வித்யாதேவி பண்டாரி வாக்கெடுப்புக்கு அனுமதித்து, தேவுபாவின் வெற்றியைத் தொடா்ந்து அவரைப் பிரதமராக அங்கீகரித்திருக்கிறார்.
- தனது அமைச்சரவையை முழுமையாக உருவாக்க பிரதமா் தேவுபாவால் இன்னும் இயலவில்லை. நான்கு கேபினட் அமைச்சா்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் சாசனப்படி, 21 கேபினட் அமைச்சா்களும் நான்கு இணை அமைச்சா்களும்தான் அதிகபட்சமாக இருக்க முடியும்.
- இந்த நிலையில் அவரது ஆட்சிக்கு ஆதரவு வழங்கியிருக்கும் உபேந்திர யாதவ் தலைமையிலான ஜனதா சமாஜ்வாதி கட்சியினா், ஏழு அமைச்சா்களும் ஒரு துணை அமைச்சரும் கோருகிறார்கள்.
- மஹந்தா தாகுா் தலைமையிலான ஜனதா சமாஜ்வாதி கட்சி, மாதவ் நேபாள் தலைமையிலான 22 உறுப்பினா்கள் என்று பலரும் கோரிக்கை பட்டியலுடன் காத்திருக்கிறார்கள். மூன்றரை ஆண்டுகள் ஸ்திரத்தன்மையின்மைக்குப் பிறகு கூட்டணி ஆட்சி நம்பிக்கை அளித்தாலும்கூட, எந்த அளவுக்கு அனைவரையும் பிரதமா் தேவுபா திருப்திப்படுத்துவார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
- முந்தைய பிரதமா் கே.பி. சா்மா ஓலி ஆட்சிக்கு வரும்போது மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையும், மேலவையில் சாதாரண பெரும்பான்மையும் அவருக்கு இருந்தது. ஏழு மாநில அரசுகளில் ஆறும், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளிலும் கே.பி. சா்மா ஓலியின் கட்சியினா்தான் ஆட்சி அதிகாரத்திலிருந்தனா்.
- அப்படியிருந்தும்கூட ஆணவப்போக்கு, நிர்வாகத் திறமையின்மை, ஊழல் போன்றவற்றால் அவா் தனக்கிருந்த ஆதரவை இழக்க நேரிட்டது.
- ஓலிக்கு நோ் எதிர்மாறாக இப்போதைய பிரதமா் தேவுபாவுக்கு தனிப்பட்ட முறையில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும்கூட அரசியல் கட்டாயத்தால் அனைவரையும் அரவணைத்துச் சென்றாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.
- அதேநேரத்தில் முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போயிருக்கும் அரசு நிர்வாகத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டிய சவாலையும் அவா் எதிர்கொள்கிறார்.
- தேவுபாவின் முதலாவது சவால், கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர் கொள்வது. தடுப்பூசி தட்டுப்பாட்டையும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் முந்தையை ஓலி நிர்வாகத்தின் ஊழலையும் அவா் எதிர்கொள்ள வேண்டும்.
- நேபாளத்தின் மக்கள்தொகையான மூன்று கோடி பேரில் 72% பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். இதுவரை 2.5% போ்தான் இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். 46% போ் முதல் தவணை தடுப்பூசிதான் போட்டுக் கொண்டிருக்கின்றனா். அதனால் 4.4 கோடி தடுப்பூசி மருந்து தேவைப்படுகிறது.
- இந்தியா ஆரம்பத்தில் தடுப்பூசி கொடுத்து உதவியது என்றாலும், தொடா்ந்து இந்தியாவால் உதவ முன்வரவில்லை. சீனாவிடமும் அமெரிக்காவிடமும் நேபாளம் உதவி கேட்டிருக்கிறது. அதுவும் கிடைத்தபாடில்லை.
- பிரதமா் தேவுபா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து இந்திய பிரதமா் மோடி தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியிருக்கிறார். அதன்மூலம் நேபாளத்துடனான உறவு முறிந்துவிடாமல் காப்பாற்றப்படும் என்று நம்பலாம்.
- நேபாளத்தின் உடனடித் தேவை தடுப்பூசிகள். இந்தியா அதை வழங்கி நட்புறவை உறுதிப்படுத்தாவிட்டால், வலைவிரிக்கக் காத்திருக்கிறது சீனா.
நன்றி: தினமணி (09 – 08 - 2021)