TNPSC Thervupettagam

உலகக் கவிஞர் அறிமுகம்: ஓர் அமெரிக்கத் தெருக் கவிஞன்

July 28 , 2024 6 hrs 0 min 22 0
  • சார்லஸ் புகாவ்ஸ்கி ஓர் அமெரிக்கத் தெருக் கவிஞன் என்கிற லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸின் வர்ணனை என்னை அதிர்ச்​சியடைய வைக்கவேயில்லை. புகாவ்ஸ்கி ஒரே இரவில் 10 கவிதைகளும், ஒரே வாரத்​தில் 5 சிறுகதைகளும் எழுதிய வேகமான கவிஞன். மளிகைச் சாமான்கள்​ கொண்டு வரும் பைகளின் மீதுகூட பென்சிலால் அவர் ஏதேனும் கவிதைகளை எழுதியபடி இருப்​பார் என்று புகாவ்​ஸ்கியின் மகள் மரீனா புகாவ்ஸ்கி குறிப்​பிடு​கிறார். இவரது 1,000க்கு மேற்பட்ட கவிதைகள் வெளியிடப்​பட்டிருந்​தா​லும் வெளியிடப்படாத புகாவ்​ஸ்கியின் கவிதைகள் இன்னமும் இருக்​கும் என்றே நினைக்​கப்​படு​கிறது.
  • சார்லஸ் புகாவ்ஸ்கி தலைமறைவுப் பத்திரி​கைகளால் வளர்த்​தெடுக்​கப்பட்ட ஓர் அமெரிக்கக்​ கவிஞர்; சிறுகதையாசிரியர்; நாவலாசிரியர். எழுது​வதற்​காகப் பலதரப்பட்ட வேலைகளைச் செய்தபடி வாழ்ந்​தவர். தட்டு கழுவு​பவர், தபால்​காரர், லிஃப்ட் இயக்குபவர், பெட்ரோல் போடுபவர், இரவுக் காவல்​காரர், நாய் பிஸ்கட் செய்யும் தொழிற்​சாலைத் தொழிலாளி, மாடு வெட்டு​பவர், சுவரொட்டி ஒட்டு​பவர் எனப் பல வேலைகள் செய்தபடி இருந்த இவர், எழுது​வதைச் சலிக்காது செய்து​வந்​தார். 1959இல் முதல் கவிதைத் தொகுதி​யுடன் எழுதத் தொடங்கிய சார்லஸ் புகாவ்ஸ்கி 45க்கு மேற்பட்ட கவிதைத் தொகுதி​கள், உரைநடை, நாவல்​கள், கடிதங்கள்​ ஆகியவற்றை வெளியிட்டார்.
  • ஒரு அமெரிக்கச்​ சிப்பாய்க்​கும் ஜெர்மானியத் தாய்க்​கும் ஜெர்மனியில் பிறந்த இவர், மூன்று வயதில் அமெரிக்​கா​வுக்​குக் கொண்டுவரப்​பட்டு, லாஸ் ஏஞ்சலஸில் வளர்ந்​தார். கல்லூரிப் படிப்பை நிறுத்​திவிட்டு, ஓர் எழுத்​தாளராவதற்காக நியூயார்க் சென்றார். தன் புத்தகங்களை வெளியிட முடியாத சோகத்​தில் 10 ஆண்டுகள் எழுதுவதை நிறுத்​திவிட்டுக் குடிகாரராக மாறினார். அல்சர்​ நோயால் ரத்தம்​ சொட்டத் தொடங்கிய பின், மீண்டும் எழுத்​தாளரானார்.
  • இவர் கவிதைகள் பெரும்​பாலும் அமெரிக்கக்​ கீழ்த்​தட்டு மக்களின் வாழ்வையும், நேரடி வார்த்​தைப் பிரயோகத்​தையும், வன்முறை, பாலுறவு கற்பனைகளை​யும் கொண்டவை. பெரும்​பாலும் ஹென்றி சினாஸ்கி எனும் கற்பனையான கதாபாத்​திரம் பற்றிய​தாகச் சுயசரிதைத் தன்மை கொண்ட கவிதைகள் இவருடையவை. அமெரிக்​கா​வில் 60களில் தோன்றி வளர்ந்த சிற்றிதழ்​களின் ஒரு விளைச்​சல்​தான் புகாவ்​ஸ்கி. அமெரிக்கப்​ பண்டித இலக்கிய உலகத்​தால் உதாசீனப்​படுத்​தப்பட்டவர். கவிதை எழுதத் தெரியாத மோசமான குடிகாரனாக வர்ணிக்​கப்பட்ட இவர், எழுத்​தின் மீதிருந்த தனது தணியாத தாகத்​தால் வாசகர்​களைச் சென்றடைந்​தவர். அதுதான், இதுதான் என்றில்​லாமல் எல்லா வகை அமெரிக்க இதழ்களுக்​கும் நிறைய எழுதி அனுப்​பிக்​கொண்டே இருந்த சார்லஸ் புகாவ்​ஸ்கியின் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், அறிக்​கைகள், மதிப்​புரைகள், சித்திரங்கள்​ என்று அனைத்​தையும் தலைமறைவு அச்சகங்​களும், ‘பீட்ஸ்’, ‘கருப்பு மலையேறிகள்’, ‘நியூயார்க் சிந்தனைப் பள்ளி’ இதழ்கள்​ வெகுவாகப் பாராட்டி வளர்த்தன. ‘மிமியோகிராஃப் புரட்சி’ என்று வர்ணிக்​கப்பட்ட ஸ்டென்​சில் செய்யப்​பட்டு வெளிவந்த சிறுபத்​திரி​கைகளின் நாயகனாக மாறினார் சார்லஸ் புகாவ்​ஸ்கி. ‘அமெரிக்​கா​வின் மிகச் சிறந்த கவி’ என்று பிரெஞ்சு இலக்கியவாதி ழான் பால் சார்த்​தர், ழான் ஜெனே போன்றவர்​களால் பாராட்டப்பட்டவர்.
  • இவரது பரிசோதனை முயற்​சிகளை ‘ஆக்சன்ட்’ (Accent) போன்ற இதழ்கள்​ வெகுவாகப் புறக்​கணித்தன. 1944 ஏப்ரலில்இருந்து ஆகஸ்ட் 1960 வரை - மொத்தம்​ 28 முறை - 44 கவிதைகள், 33 சிறுகதைகளை இவ்விதழுக்கு அனுப்​பினார். இவை கவிதைகளோ, கதைகளோ அல்ல​வென்று இவற்றை நிராகரித்த இந்த ‘ஆக்சன்ட்’ இதழ், ஒரு பெரும் பத்திரிகை அல்ல. அதுவும் சிறுபத்​திரி​கை​தான். ஆனாலும் இவர்கள்​ புகாவ்​ஸ்கியின் பரிசோதனை எழுத்​துகளை ஏற்றுக்​கொள்​ளவில்லை. புகாவ்ஸ்கி தனது நேர்காணல் ஒன்றில் சொல்கிறார்: “அந்த இதழின் ஆசிரியர்கள்​ நான் செய்ய முடியாத, செய்ய விரும்பாத பழைய கவிதை விஷயங்​களையே விரும்​பினர். அந்த பழையவற்றையே நான் திரும்ப எழுதாதது, எனது துணிச்சல்​ சம்பந்​தப்​பட்டது என்று சொல்வதைவிட, அது எனது பிடிவாதக் குணத்தோடு சம்பந்​தப்​பட்டது”. இந்தப்​ பிடிவாதமே புகாவ்​ஸ்கியின் முத்திரை என்று புரிந்து​கொள்ள வேண்டும்.
  • “உங்கள்​ வேலையை நீங்கள்​ செய்யுங்​கள். அங்கே ஒரு போர் நடந்து கொண்டிருக்​கலாம். காடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்​கலாம். தெருவில் ஒருவர்​ உங்களைச் சுட முயலலாம். ஒரு சந்தில் நீங்கள்​ கத்தி​யால் வசமாகக் குத்தப்​பட்டிருக்​கலாம். வீட்டுக்கு வாருங்​கள். உங்கள்​ வேலை​யைத் தொடர்ந்து செய்​யுங்​கள்” என்கிற எஸ்ரா பவுண்​டின் இந்த வார்த்​தைகளையே தனது பைபிளாக ஏற்​றுக்​கொண்​டிருந்​தார் புகாவ்​ஸ்கி. வேறு வித​மாகச் சொல்​வதென்​றால், எழுதியே தீர வேண்​டும் என்கிற குணப்​படுத்த முடியாத ஒரு நோயால் பாதிக்​கப்​பட்டிருந்​தார்​ புகாவ்​ஸ்கி.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories