உலகப் பொருளாதாரத்தைக் கட்டமைக்கும் நாடாக சீனா உருமாறியது எப்படி?
February 1 , 2019 2156 days 2045 0
சீனத்தில் 1978 டிசம்பரில் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் பதினோராவது மாநாடு, எதைப் பற்றியது என்பது வேண்டுமானால் உலகுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அது ஏற்படுத்திய விளைவுகள், உலகம் முழுவதும் பெரும் நில அதிர்வைப் போல இன்னமும் உணரப்பட்டுவருகிறது. வேளாண்சார் நாடாக இருந்ததைத் தொழிலுற்பத்தி ஆற்றல் மையமாக டெங் சியோபிங் தொடங்கிய ‘(பொருளாதார) சீர்திருத்தம் – திறந்துவிடல்’ கொள்கையானது மாற்றியுள்ளது. அது மட்டுமின்றி, உலகப் பொருளாதாரத்தையே கட்டமைக்கும் நாடாக சீன வளர உதவுகிறது.
பொருளாதாரச் சீர்திருத்தத்தின் 40-வது ஆண்டு விழாவைச் சீனா கொண்டாடுகிறது. உலகிலேயே அதிக அந்நியச் செலாவணியை (அக்டோபர் கணக்குப்படி, 3.05 லட்சம் கோடி டாலர்கள்) கையிருப்பாக வைத்திருக்கும் ஒரே நாடு சீனாதான். 2017 தரவுகளின்படி, அதன் ஜிடிபி 2 லட்சம் கோடி டாலர்கள். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு சீனா. சர்வாதிகார ஆட்சியமைப்பைக் கொண்ட சீனத்தால், பொருளாதாரச் சீர்திருத்தம் சாத்தியமில்லை என்று மேற்குலகப் பண்டிதர்கள் கூறிவந்தது பலிக்கவில்லை.
முரண்பாடுகளால் நிரம்பிய நாடு
இப்போதைய சீனத்தின் வெவ்வேறு துறைகளை ஒப்பிட்டால், அது முரண்பாடுகளின் மொத்த கலவைபோலத் தெரியும். சீனத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சமத்துவப் பொருளாதாரத்தைப் பேசுகிறது. ஆனால் சமூகமோ, அசமத்துவமே அடையாளமாய்க் கொண்ட முதலாளித்துவத்தால் உந்தப்படுகிறது.
நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார நலன்கள், கிராமப்புற விவசாயிகள் – வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களின் நலன்களுடன் முரண்படுகிறது. உலகிலேயே மிக அதிகமாக 2 கோடி இணையதள இணைப்புகள் சீனத்தில்தான் உள்ளன. உலகின் மொத்த மின்வணிகத்தில் 40% சீனத்தில்தான் நடக்கிறது. உலகிலேயே டிஜிட்டல் நடைமுறைகள் அதிகம் தணிக்கைக்குள்ளாகும் நாடும் சீனாதான்.
வட்டத்தைச் சதுரமாக்கும் கலையில் வல்லமைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி, சீனத்தில் பொருளாதாரச் சீர்திருத்தம் வெற்றிபெறாது என்ற கணிப்புகளைப் பொய்யாக்கியது. இதைச் சாத்தியமாக்கியது டெங் சியோபிங் காலத்தில் அமலான முன்னோடித் திட்டமாகும். ‘ஆற்றைக் கடக்கும்போது கற்களைக் காலால் தடவி நடப்பதுபோல’ என்று அதற்கு அவர் பெயரிட்டார். தேச அளவில் ஒரு திட்டத்தை அமல்படுத்தும் முன், உள்ளூர் அளவில் அதை அமல்படுத்தி சாதக-பாதகங்களைத் தெரிந்துகொள்ளச் செய்தார்.
சீனக் கடலோர நகரங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 1980-களில் ஏற்படுத்தப்பட்டன. அவை தொழிலுற்பத்தி தொடர்பான சோதனைச் சாலைகளாகவே இயக்கப்பட்டன. அவை பொருளாதார வளர்ச்சிக்கான மூலவிசையாகச் செயல்பட்டன. ஷென்ஷென் போன்ற மீன்பிடிக் குப்பங்கள்கூட உலகளாவிய உற்பத்தி நகரங்களாக வளர்ச்சிபெற்றன. ஒவ்வொரு கொள்கையும் இப்படித்தான் உள்ளூர் அளவில் சோதிக்கப்பட்டு, பிறகு விரிவுபடுத்தப்பட்டன. மருத்துவ நலத் திட்டங்கள் கூட்டுறவுத் துறையில் முயன்றுபார்க்கப்பட்டன. தொழிலாளர்கள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு இடம்பெயர விதிக்கப்பட்டிருந்த தடைகள் விலக்கப்பட்டன. மாசேதுங் காலத்தில்
1950-கள் முதல் 1970-கள் வரையில் நடந்த சித்தாந்த ஒடுக்குமுறைகளுக்கு விடைகொடுக்கப்பட்டு, காரிய சாத்தியமான வகையில் தொழிலாளர்களின் சக்தி பயன்படுத்தப்படுகிறது.
கட்சியின் அதிகாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால், பொருளாதார வளர்ச்சியின் பலன்களை வாக்குறுதி தந்தபடி நிறைவேற்றியாக வேண்டும். மத்தியதர வர்க்கம் தங்களுடைய வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் என்று கோரியது. அதையொட்டி நகரங்களின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்தது. பெய்ஜிங் மாநகரத்தின் சூழல் அதற்குச் சான்று. டெல்லி போன்ற மாநகரங்கள் பின்பற்றும் வகையில் நகரின் மாசு குறைக்கப்பட்டிருக்கிறது.
சீர்திருத்த அமலுக்குப் பிந்தைய காலத்தில் சமூக, பொருளாதாரத் தளங்களில் ஏற்பட்டுள்ள சவால்களைத் தீர்க்கும் நடவடிக்கைகளில் சீனத் தலைவர்கள் அக்கறை செலுத்திவருகின்றனர். சர்வாதிகார அரசுகளில் இப்படியொரு செயலைக் காண முடியாது. சீர்திருத்தம் பொருளாதாரத் தளத்தோடு நிற்காமல் அரசு நிர்வாகம், அரசுக் கட்டமைப்பு ஆகியவற்றிலும் பரவியிருக்கிறது. அரசு அதிகாரிகள் முக்கியப் பதவிகளை இத்தனை முறைதான் வகிக்கலாம் என்ற கட்டுப்பாடும், ஓய்வு வயது நிர்ணயமும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
சீர்திருத்தத்தில் சித்தாந்தத்தைவிட செயல்பாட்டுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகள் வளர்ச்சியில்
ஏன் பின்தங்கியிருக்கின்றன என்பதைச் சீனத்தில் சீர்திருத்தம் அமலாகும் விதத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். ஜனநாயகரீதியாகச் செயல்படுகிறோம் என்று கூறி, திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தாமல் இருப்பதற்கு இந்திய அரசால் சமாதானம் சொல்ல முடியும். சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு செயலை மேற்கொண்டால், அதை நிறைவேற்றாமல் இருக்க முடியாது. இந்தியாவில் அரசியலில் ஏழைகளுக்குப் பிரதிநிதித்துவம் இருந்தாலும் சீர்திருத்தங்களின் பலன்கள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அரசியல் பங்கேற்பு இல்லையென்றாலும், அனைவருக்கும் சீர்திருத்தப் பலன்கள் சீனத்தில் கிடைத்துவிடுகின்றன. சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை சீனத்தில் அனைவருக்கும் உறுதிசெய்யப்படுகின்றன.
ஜி ஜின்பிங் சகாப்தம்
டெங் சியோபிங் காலத்தில் தொடங்கிய ‘சீர்திருத்தம் - திறந்துவிடல்’ கொள்கையை முழுமையாகப் புரிந்துகொண்டால்தான், சீனம் இன்றைக்கு அடைந்திருக்கும் முன்னேற்றத்தையும் புரிந்துகொள்ள முடியும். ஜி ஜின்பிங் காலத்திலும் அது எப்படித் தேவைப்படுகிறது என்பதும் விடை காணப்பட வேண்டிய கேள்வி. பொருளாதார தாராளமயத்தை மேலும் விரிவுபடுத்துவதில் சீனத்துக்கு உறுதியிருந்தாலும், அமெரிக்கா தொடங்கியுள்ள வர்த்தகப் போர், சீன அரசைத் தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளியிருக்கிறது. பொருளாதாரத்தைச் சீன அரசு கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், சந்தைகள் மட்டும் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது. ‘சீன அடையாளங்களோடு கூடிய சோஷலிசம்’ என்று சீனத்தில் இதை அழைக்கிறார்கள்.
டெங் உத்வேகப்படுத்திய கொள்கைகளிலிருந்து சீனம் விலகவும் செய்திருக்கிறது. அதிபர் பதவியில் ஒருவர் தொடர்ந்து இரு முறைதான் இருக்கலாம் என்ற விதி சமீபத்தில் நீக்கப்பட்டுவிட்டது. இதனால், ஜி ஜின்பிங் காலவரம்பின்றி வாழ்நாள் முழுக்க அதிபராக நீடிக்க முடியும். “பொருளாதார நடவடிக்கைளை வெளிப்படையாக மேற்கொள்ளுங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்களையும் வேலைக்கு அமர்த்திக்கொள்ளுங்கள்” என்று டெங் வலியுறுத்தியிருந்தார். “சுயச்சார்பு அவசியம், வெளிநாட்டு விரோத சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கிறார் ஜி ஜின்பிங்.
“பொருளாதார நடவடிக்கைகளை அமைதியாக ஒருங்கிணைக்க வேண்டும்” என்றார் டெங். ஆனால், இப்போதோ வர்த்தகப் போட்டியால் ‘புதிய பனிப் போர்’ தொடங்கும் ஆபத்து நிலவுகிறது. “ஆற்றலை மறைத்துக்கொண்டு உரிய நேரத்துக்காகக் காத்திருக்க வேண்டும்” என்றார் டெங். அதில் தேசிய உணர்வு கலந்திருந்தது. டெங் காலத்தில் முன்னோடித் திட்டம் உள்ளூர் அளவில் பரிசீலிக்கப்படுவதாக அதிகம் இருந்தது. 2010-ல் 500 கொள்கைசார் திட்டங்கள் பரிசோதனையில் இருந்தன. 2016-ல் அது 70 ஆகச் சுருங்கிவிட்டது.
‘சீர்திருத்தம் – திறந்துவிடல்’ என்ற கொள்கைக்கான காலம் மலையேறிவிட்டதா? அப்படியென்றால், எது அதன் இடத்தைப் பிடிக்கப்போகிறது? அமெரிக்கா மற்றும் அதைப் போன்ற நாடுகளுடனான போட்டியைச் சீனா எப்படி எதிர்கொள்ளப்போகிறது? இந்தக் கேள்விக்கான விடைகள் இன்னும் தெளிவாகவில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் கவனத்துடன் அடியெடுத்துவைக்க வேண்டும் என்பது மட்டும் நிச்சயம்.