TNPSC Thervupettagam

உலகுக்கு இந்தியாவின் கொடை!

October 3 , 2019 1935 days 1109 0
  • வாழும் காலத்திலும், ஏன் மறைவுக்குப் பின்பும், அதிகமாகப்  போற்றப்படுகிற மனிதர் ஒருவர் உண்டென்றால் அவர் அண்ணல் காந்தி அடிகளே. ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1966-இல் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய  பேராசிரியர் ஏக்நாத் ஈஸ்வரன் என்றும் நினைவுகூரத்தக்க ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.
  • அது வருங்கால வரலாற்று ஆய்வாளர்கள் இந்த நூற்றாண்டை அணுயுகம் என்று அழைக்க மாட்டார்கள்;  அண்ணல் காந்தி யுகம் என்றுதான் அழைப்பார்கள் என்பதாகும்.
  • இந்த வாசகம் சொல் நயத்திற்காகச் சொல்லப்பட்டதல்ல; உலகமே ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை  என எழுதுகிறார் புகழ் பெற்ற காந்தியச் சிந்தனையாளர் மைக்கேல் என்.நாக்லேர்.
காந்திஜி....
  • பலருக்கு காந்திஜி ஒரு புரியாத புதிராகவே தோன்றுகிறார். அவர் ஆன்மிகவாதியா? அரசியல்வாதியா? இரண்டும் இணைந்த கலவையா? பழைமைவாதியா? புதுமைவாதியா? சித்தாந்தவாதியா? செயல்திறன் படைத்தவரா?  எந்த வட்டத்துக்குள் இந்த விந்தை மனிதர் வருகிறார்?  
  • யாருக்கும் புரியாத புதிர் இது.  ஆழ்ந்து ஆய்வு செய்தால், அவர் ஒரு  மனித நேயம் போற்றும் மாமனிதர்; மனிதப் புனிதர் மகாத்மா.
  • சத்தியம், அகிம்சை என்ற உயர் தத்துவத்தாலும், பிரார்த்தனை, உண்ணாநோன்பு, சத்தியாகிரகம் என்ற வழிமுறைகளாலும், மனித  சமுதாயத்தையே நல்வழிப்படுத்த முடியும் என நம்பிச் செயல்பட்டு வெற்றி பெற்ற ஒரே மனிதர் மகாத்மா என்கிறார் காந்தியும் நவீன இந்தியாவும் என்ற நூலின் ஆசிரியர் பென்டரல் மூன்.
  • வருங்காலத்தை முன் உணரும் சக்தி படைத்தவன் அல்ல;  நான் மகாத்மாவும் அல்ல.  உங்களைப் போல் நானும் ஒரு சாதாரண மனிதன்;  குறைகளும், பலவீனங்களும் உடையவன் நான். இறைவனே என்னை இயக்குகிறார்.  என் அந்தராத்மாவின் ஆணைப்படி நடக்கிறேன்- இதுவே தன்னைப் பற்றி அண்ணல் கூறிய வாசகங்கள்.
  • அண்ணல் காந்தி இந்த மண்ணுலகில் வாழ்ந்தது 78 ஆண்டுகள் 3 மாதம் 29 நாள்களே.  அதில் மக்கள் நலனுக்காக சிறைவாசம் அனுபவித்தது 2,338 நாள்கள் - சுமார் ஆறரை ஆண்டுகள். தொழிலாளர் உரிமை, தீண்டாமை ஒழிப்பு, சமுதாய நல்லிணக்கம் போன்ற பல லட்சியங்களுக்காக உண்ணா நோன்பு மேற்கொண்டது 17 முறை.
பொது வாழ்க்கை
  • அவரது பொது வாழ்க்கை மூன்று பகுதிகளைக் கொண்டது.  1893 முதல் 1914 வரையிலான 21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்திய மக்களின் உரிமைக்காகப் போராட்டம். 
  • 1915 முதல் 1947 ஆகஸ்ட் 15 வரையிலான 33 ஆண்டுகள் இந்திய சுதந்திரம், மத நல்லிணக்கம், மனித நேயம் வளர்த்தல், ஒட்டுமொத்த உலக அமைதிக்கான போராட்டம். சுதந்திர இந்தியாவில் அவர் வாழ்ந்ததும், வழிகாட்டியதும் ஐந்தரை மாதங்கள் அடங்கிய மிகக் குறுகிய காலமே.
  • அண்ணலின் சிந்தை, எண்ணம், பேச்சு, எழுத்து, செயல் அனைத்தும் தேச, பிராந்திய எல்லைகளைத் தாண்டியது;  எளியவர்களின் இதயங்களே அவரது இருப்பிடமானது.
  • சாதாரண மனிதர்களின் சஞ்சலத்தை விரட்டி, அவர்கள் மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டினார். தன் மக்களின் மனதில் மண்டிக் கிடந்த அச்சத்தை அகற்றினார்; சுயமரியாதையை மீட்டெடுத்தார். தீண்டாமை  என்ற   தீய பழக்கத்தை   ஒழிக்க  முயன்றார்.  அவர்களை இறைவனின் குழந்தைகள் என்ற நிலைக்கு உயர்த்தினார்.  
  • ஒடுக்கப்பட்டவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள், மகளிர் ஆகியோரின் உரிமைக்காக ஓயாது உழைத்தார், போராடினார்.  சிறுபான்மையினர் நலன் பேணுவது பெரும்பான்மையினரின்   தலையாய கடமை  என்றார்.  உண்மையில் சமுதாயத்தில் நிலவும் அனைத்து அவலங்களையும் அகற்ற அவதாரம் எடுத்து வந்த அற்புதப் பிறவி அவர்.
  • தன்னம்பிக்கை, தன் சகாக்களின் மீது நம்பிக்கை, தன் மக்களின் மீது நம்பிக்கை, எல்லாவற்றுக்கும் மேலாக இறை நம்பிக்கை -இவையே அண்ணலின் அனைத்து வெற்றிகளுக்கும் அடித்தளம்.  அவரது  இறை  நம்பிக்கை எல்லையில்லாதது.
இரண்டாவது வட்ட மேசை மாநாடு
  • 1931-இல் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டுக்கு அகில இந்திய காங்கிரஸின் ஏகப் பிரதிநிதியாக லண்டன் சென்றார் மகாத்மா காந்தி. தனி மனிதனாகச் செல்கிறீர்களே என்று நிருபர் கேட்கிறார்.  அதற்கு, தனியாகச் செல்லுகிறேன் எனச் சொல்வது தவறு;  இறைவன் என்னோடு வருகிறாரே; என்னை வழி நடத்துகிறாரே என்றார் மகாத்மா காந்தி.
  • வட்ட  மேஜை  மாநாடு  முடிந்து இந்தியா திரும்புகிறார் காந்தி.  மும்பை துறைமுகத்தில் வந்திறங்கும் காந்தியை வரவேற்கக் காத்திருக்கிறது கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்.  மகாத்மா காந்தி ஜிந்தாபாத்  என்ற முழக்கம்   விண்ணைப்   பிளக்கிறது.  
  • வரவேற்கக்   காத்திருக்கும்  தலைவர்களில் ஒருவரான நேதாஜி, பண்டித நேருவைப் பார்த்துக் கேட்கிறார், வேண்டியதைப் பெறாமல், வெறும் கையோடு திரும்புகிறார் மகாத்மா காந்தி.  
  • இருந்தும் இந்த மக்கள் இவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் பார்த்தீர்களா?  எனக்குப் புரியவில்லையே  என்று. அதற்கு பண்டித நேரு தந்த பதில்:  வெறுங்கையோடுதான் வருகிறார் என்பது நம் இருவருக்கும் தெரிகிறது.
  • ஆனால், மக்களுக்கோ அந்தக் கைகளின் காந்த சக்தி தெரிகிறது.  இதயத்தின் ஈர்ப்பு சக்தி புரிகிறது;  இந்த சாது, நிச்சயம் சாதித்துக் காட்டுவார் என நம்புகிறார்கள்.
  • நம் இருவருக்கும் தெரியாத மகாத்மாவின் மகிமையை ஏழை மக்கள் நன்கு புரிந்திருக்கிறார்கள்.
காந்திஜியின் பதில்
  • ஆரம்ப காலத்தில் இந்தியாவில் எவரும் அவரது அகிம்சைத் தத்துவத்தை ஏற்கத் தயாராக இல்லை. ஒரு கூட்டத்தில் காந்தியைப் பார்த்து ஜே.பி.கிருபளானி கேட்கிறார்: நீங்கள் பகவத் கீதையும், பைபிளும் படித்திருக்கிறீர்கள்.  ஆனால், சரித்திரம் படிக்கவில்லையே.  அகிம்சை வழியில் எந்த நாடும் விடுதலை பெற்றதாக வரலாறு எதுவும் இல்லையே? அதற்கு, அண்ணல் தந்த பதில்:
  • வரலாறு, கடந்த காலத்தைக் காட்டும் கண்ணாடி மட்டுமே. முன்பு நடக்கவில்லை என்பதால் வருங்காலத்திலும் நடக்காது என்பது பொருளல்ல. அகிம்சை முறையில் போராடுவோம். விடுதலை பெறுவோம். புதிய வரலாறு படைப்போம்; வருங்கால சமுதாயம் அதனைப் படிக்கட்டும் என்றார் அண்ணல். அவர் நினைத்தது நடந்தது.
  • 1924-இல் ஏர்வாடா சிறைக்கு காந்திஜியைப் பார்க்கச் செல்கிறார் ராஜாஜி. சிறை அறை சிறியது.  படுக்கை  விரிப்பு  பழையது.  புத்தகங்களே தலையணை.  அமைதியாகத் தூங்குகிறார் அந்தப் புனிதர்.  
  • அந்த நிலை கண்டு, பிரெஞ்சு நெப்போலியனைவிட, ஜெர்மனியின்  கெய்சரைவிட  ஆயிரம்  மடங்கு   உயர்ந்த மகாத்மாவுக்கு   இழைக்கப்படும் அநீதி இது என ஆங்கிலேய அரசைச் சாடுகிறார்  மூதறிஞர்  ராஜாஜி.
  • சிறையிலிருந்து வந்த பின்பு மகாத்மா பதிவு செய்கிறார்: எந்த மனிதனும் சாதாரணமானவனே;  
  • எதுவும் இல்லாதவனே. உலகையே வெல்ல நினைத்த நெப்போலியன் இறுதியில் தங்கியது செயின்ட் ஹெலினா சிறையில்தான்.  
  • ஐரோப்பாவை ஆள நினைத்த கெய்சர் இறுதியில் மிகச் சாதாரண மனிதன் ஆனான். அதுவே ஆண்டவன் சித்தம் போலும். இதிலிருந்து நாம் படிக்க வேண்டியது; பணிவும், அடக்கமுமே. இந்தப் பண்புகள்தான் மோகன்தாஸ் காந்தியை மகாத்மாவாக உயர்த்தின.
  • தேச விடுதலைக்குப் பின்  மூண்டது  மதக் கலவரம்.  நிகழ்ந்ததோ  கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், எல்லையில்லா இழப்புகள். நவகாளியில் அமைதி யாத்திரை நடத்திய காந்திஜியிடம்,   வில்லியம்  ஸ்போர்ட் நெல்சன் என்ற அமெரிக்க மேதை கேட்கிறார்: உங்கள் 30 ஆண்டுகால போதனையால் எந்தப் பயனும் இல்லையே என்று.  
  • அதற்கு அண்ணல் சொன்ன பதில்:  பயத்தை நீக்குங்கள், பகைமையை நீக்குங்கள் ஆகிய இரண்டு போதனைகளைப் புகட்டினேன்.  என் மக்களோ முதல் போதனையை ஏற்றுக் கொண்டார்கள்;  இரண்டாவதை நிராகரித்து விட்டார்கள்.  இரண்டாவதை முதலாவதாக நான் முன்நிறுத்தியிருக்க வேண்டும்;  குறை என்னுடையதே என்றார்.  இதுதான் மகாத்மாவின் மாண்பு.
  • சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை 14 பேரை உள்ளடக்கியது.  அதில் இரண்டு முஸ்லிம்கள் (அபுல் கலாம் ஆசாத், ரபி அகமத் கித்வாய்), இரண்டு சீக்கியர்கள் (பல்தேவ் சிங், ராஜகுமாரி அம்ருத் கௌர்), இரண்டு தலித் மக்கள் (அம்பேத்கர், பாபு ஜகஜீவன்ராம்), ஒரு கிறிஸ்தவர் (ஜான் மத்தாய்), ஒரு பார்சி
  • (சி. ஹெச். பாபா), ஓர் இந்து மகாசபை உறுப்பினர் (சியாமா பிரசாத் முகர்ஜி), ஆங்கிலேய அரசின் விசுவாசி (ஆர்.கே.சண்முகம் செட்டி)  ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
  • பிற நால்வர்: பண்டித நேரு, வல்லப பாய் படேல், ராஜேந்திர பிரசாத் மற்றும் என்.வி. காட்கில் ஆவார். அனைத்துப் பிரிவினரும் இடம்பெற வேண்டும் என்ற அண்ணலின் ஆலோசனையே இதற்கு அடிப்படைக் காரணம்.  அண்ணலுக்கே உரிய அரிய மாண்பாகும் இது.
  • மகாத்மாவின் வழிமுறைகள் நடைமுறைச் சாத்தியமானவை.  அன்பு, அகிம்சை, அரவணைப்பு, சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டவை.  அவரது நெறிமுறைகள்தான் வருங்கால நலவாழ்வுக்கு நம்பிக்கை நட்சத்திரம்.  
  • அந்த நம்பிக்கைதான் சி. எஃப். ஆண்ட்ரூஸ், வின்சென்ட் சீயன், மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா போன்ற பல வெளிநாட்டினரை ஈர்த்தது.  அவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளைத் தீர்க்க ஒளி தந்தது.
  • உலகுக்கு இந்தியா வழங்கிய மிகப் பெரிய கொடை மகாத்மா காந்தி.  அண்ணலின் 150-ஆவது பிறந்த ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நாம், அவரது கருத்துகள் மீது அக்கறை செலுத்தி, அவற்றைக் கடைப்பிடிப்போம்!  தீராத பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காண்போம். மகாத்மா  கனவு   கண்ட வளமான   உலகை    உருவாக்க  ஒவ்வொருவரும் ஓயாது உழைப்போம்.

நன்றி: தினமணி (03-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories