TNPSC Thervupettagam

உலகைப் பாதிக்கும் விவகாரங்கள் தீர்க்கப்பட வேண்டும்!

May 20 , 2024 235 days 213 0
  • ஒருபக்கம் காஸா போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இன்னொரு புறம் உக்ரைன் போர்ச் சூழலும் உச்சகட்டத்தை எட்டியிருப்பது, அமெரிக்கா - சீனா இடையில் மீண்டும் வர்த்தக மோதல் துளிர்த்திருப்பது, ஸ்லோவாகியா பிரதமர் மீதான படுகொலை முயற்சி என அடுத்தடுத்த நிகழ்வுகள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருக்கின்றன.
  • 2022 பிப்ரவரி முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவில் நுழையும் முயற்சியை ரஷ்யப் படைகள் தீவிரப்படுத்தியிருக்கின்றன. சர்வதேச எல்லையைக் கடந்து, கார்கிவ் நகரின் புறநகர் கிராமங்களைக் கைப்பற்றியிருக்கும் ரஷ்யப் படைகள் அந்நகரை நோக்கி முன்னேறிவருகின்றன.
  • நிலைமை மோசமாகிவருவதால், தனது வெளிநாட்டுப் பயணங்களை ரத்துசெய்திருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தற்காப்பு வியூகங்களை வகுப்பதில் முனைந்திருக்கிறார். மேற்கத்திய நாடுகள் - குறிப்பாக – அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் கிடைக்காத நிலையில், உக்ரைனின் நிலை கவலைக்குரியதாகி இருக்கிறது.
  • இந்தச் சூழலில், சமீபத்தில் உக்ரைன் சென்றிருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், உக்ரைனுக்கு விரைவில் ஆயுதங்கள் அனுப்பப்படும் என உறுதியளித்திருக்கிறார்.
  • இதற்கிடையே, தனது நட்பு நாடான சீனாவுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றிருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இணைந்து அளித்த கூட்டறிக்கையில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, முதலில் அரசியல்ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
  • மே முதல் வாரத்தில் பிரான்ஸ், செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குச் சீன அதிபர் ஷி ஜின்பிங் சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது, உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குச் சீனா ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுத்தன. ஆனால், ரஷ்யாவுக்கு ஆயுதம் வழங்கப்படுவதாகச் சொல்லப்படுவதைச் சீனா மறுத்திருக்கிறது.
  • இந்தப் பிரச்சினைகளுக்கு நடுவில், ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோவைப் படுகொலை செய்ய முயற்சி நடந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஃபிகோ, உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகளின் எண்ணத்துக்கு மாறாகச் செயல்பட்டவர்; உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்ப மறுத்ததுடன் அந்நாட்டைப் பற்றிப் பகிரங்கமாக விமர்சித்தவர்.
  • அவரைச் சுட்டுக்கொல்ல முயற்சித்த 71 வயது யூராய் சின்டுலாவின் பின்னணியில், சர்வதேச சக்திகள் இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனினும், ஃபிகோவின் ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு, ஸ்லோவாகியாவில் பிளவை ஏற்படுத்தியிருப்பது சின்டுலாவின் கோபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. போரின் விளைவாக ஏற்படும் பாதிப்புகளில் இதுவும் ஒன்று.
  • போதாக்குறைக்கு அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் போட்டி மீண்டும் முளைத்திருக்கிறது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிக வரி விதித்திருக்கிறது ஜோ பைடன் அரசு. முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவுடன் நடத்திய வர்த்தகப் போர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், அதே பாணியில் பைடனும் இறங்கியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
  • உலக வர்த்தகத்துக்கு இறக்குமதிகள் அத்தியாவசியமானவை என்பதால், அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக மோதல், உலக அளவில் வர்த்தகச் சங்கிலியைப் பாதிக்கக்கூடும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. போரும் வர்த்தக மோதல்களும் சம்பந்தப்பட்ட நாடுகளை மட்டுமல்லாமல், உலகையே பல்வேறு விதங்களில் பாதிக்கக்கூடியவை. சம்பந்தப்பட்ட தலைவர்கள் இதை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories