TNPSC Thervupettagam

உலகை உலுக்கிய கொள்ளைநோய்கள்

February 26 , 2020 1786 days 996 0
  • உலகெங்கும் நடுக்கத்தோடு உச்சரிக்கும் பெயர் ‘கோவிட்-19’. சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய இந்த நோய், மெல்ல மெல்ல உலகின் பிற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்திருக்கிறது. சீனாவில் மட்டும் இதுவரை சுமார் 77,600 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
  • அவர்களில் 2,663 பேரின் உயிரை இந்த நோய் பலிகொண்டிருக்கிறது. தென்கொரியாவில் கிட்டத்தட்ட 1,000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது இத்தாலி, ஈரான், இஸ்ரேல், லெபனானிலும் ‘கோவிட்-19’ தனது மரணக் கணக்கைத் தொடங்கியிருக்கிறது. இது சர்வதேச அளவிலான நெருக்கடிநிலைக்கான தருணம்.
  • நிலைமை மிகவும் மோசமானது என்றாலும், இதுபோன்ற கொள்ளைநோய்களை வரலாறு நெடுகிலும் பார்க்க முடியும். அவற்றுள் பலவும் ‘கோவிட்-19’-ஐவிட மிகவும் மோசமானவை.

ஜஸ்டீனியக் கொள்ளைநோய்

  • தற்போது இஸ்தான்புல் என்று அழைக்கப்படும் முந்தைய பைஸாண்ட்டைன் சாம்ராஜ்யத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான கொள்ளைநோய் இது. அப்போது பைஸாண்ட்டைன் சாம்ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருந்த பேரரசர் ஜஸ்டினியன் பெயரிலேயே இந்தக் கொள்ளைநோய் வழங்கப்படுகிறது.
  • எகிப்திலுள்ள எலிகளிடமிருந்து தோன்றிய இந்த நோய், இஸ்தான்புல்லுக்குப் பரவியது. அந்த நகரத்தின் மக்கள்தொகையில் பாதிப் பேர் இந்த நோய்க்குப் பலியாகியிருக்கிறார்கள்.
  • அங்கிருந்து மத்தியத் தரைக்கடல் வழியாகப் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த நோய் பரவியது. சுமார் அரை நூற்றாண்டு கால அளவில் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இந்த நோயால் 2.5 கோடியிலிருந்து 10 கோடிப் பேர் உயிரிழந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

கருப்புக் கொள்ளைநோய்

  • கி.பி. 1346-ல் தொடங்கி 1353 வரை ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் தாண்டவமாடிய கொள்ளைநோய் இது. இந்தக் கொள்ளைநோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 7.5 கோடியிலிருந்து 20 கோடி வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. ‘யெர்ஸினியா பெஸ்டிஸ்’ என்ற பாக்டீரியாவால் ஏற்பட்ட கொள்ளைநோய் இது. வணிகக் கப்பல்களில் உள்ள எலிகளின் உடலில் காணப்பட்ட உண்ணிகளால் இந்த நோய் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
  • இந்தக் கொள்ளைநோயால் ஐரோப்பாவின் மக்கள்தொகையில் 30%-60% பலியானார்கள். இந்த நோயால் இழந்த மக்கள்தொகையை ஐரோப்பா திரும்ப எட்டுவதற்கு மேலும் 200 ஆண்டுகள் ஆயின என்பது குறிப்பிடத்தக்கது. இடைக்காலத்தில் ஐரோப்பிய வரலாற்றையே மாற்றியமைத்த கொள்ளைநோய் இது.

மூன்றாவது கொள்ளைநோய்

  • கோவிட்-19’-ஐப் போலவே இந்தக் கொள்ளை நோயும் சீனாவில்தான் உருவானது. சீனாவின் யூனான் மாகாணத்தில் 1850-களில் உருவான இந்தக் கொள்ளைநோய், சீனாவைத் தாண்டியும் பரவியது. மஞ்சள் மார்பு எலிகளிடமிருந்து உண்ணிகள் வழியாக மனிதர்களுக்கு இந்த நோய் பரவியது.
  • சீனா ஒரு முக்கியமான வணிகக் கேந்திரமாக இருந்ததால் இந்தக் கொள்ளைநோய் ஹாங்காங், இந்தியாவில் பம்பாய், தென்னாப்பிரிக்காவில் கேப் டவுன், அமெரிக்காவில் சான் ஃப்ரான்ஸிஸ்கோ என்று கடல் நகரங்களைத் தாக்கியது.
  • 1.2 கோடிக்கும் மேற்பட்டவர்களை இந்தக் கொள்ளைநோய் காவுவாங்கியிருந்தது. இதில் இந்தியாவில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்தக் கொள்ளைநோய் 1960-கள் வரை சற்றே குறைந்த தீவிரத்துடன் நீடித்தது.

ஸ்பானிஷ் ஃப்ளூ

  • முதல் உலகப் போர் இறுதிக் கட்டத்தை நெருங்கியபோது வெடித்தது இந்தக் கொள்ளைநோய். பெயரில் ஸ்பானிஷ் இருந்தாலும் இது ஸ்பெயினில் தோன்றிய நோய் அல்ல. பிரான்ஸில்தான் இந்தக் கொள்ளைநோய் வெடித்தது.
  • இது ஸ்பெயினிலிருந்து வந்திருக்கக்கூடும் என்று நினைத்து பிரெஞ்சுக்காரர்கள் வைத்த பெயர்தான் ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’. அதனால்தான், இன்று வரை இந்தக் கொள்ளைநோயை ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ என்ற பெயரில் அழைப்பது ஸ்பெயினில் குற்றமாகக் கருதப்படுகிறது.
  • 1918-1919 ஆகிய ஆண்டுகளில் உலகமெங்கும் இந்த நோய் தாண்டவமாடியதில் 5 கோடியிலிருந்து 10 கோடிப் பேர் வரை உயிரிழந்தார்கள். இது இரண்டு உலகப் போர்களாலும் ஏற்பட்ட உயிரிழப்பைக் காட்டிலும் அதிகம். முதல் உலகப் போரில் தங்கள் தோல்விக்குக் காரணம் ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’தான் என்று ஜெர்மானியர்கள் கருதினார்கள். மனிதர்கள் உருவாக்கிய எல்லா எல்லைக்கோடுகளையும் ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ தாண்டியது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் எண்ணிக்கை காந்தியில் ஆரம்பித்து துருக்கியின் முதல் அதிபர் முஸ்தஃபா கெமால் அதாதுர்க் வரை நீளும். ஆங்கிலக் கவிஞர் டி.எஸ்.எலியட், ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஃப்ரன்ஸ் காஃப்கா, டி.எச்.லாரன்ஸ், வால்ட் டிஸ்னி என்று பல ஆளுமைகளும் இந்தக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு மீண்டார்கள்.
  • பிரெஞ்சுக் கவிஞர் கியோம் அப்போலினேர், லெனினின் வலக்கரமாகத் திகழ்ந்த யாக்கோவ் ஸ்வெர்த்லோவ், ஆர்தர் கோனான் டாய்லின் மகன், டொனால்டு ட்ரம்ப்பின் தாத்தா என்று மாண்டவர்கள் பட்டியல் நீளும். மிக மோசமான வலியைத் தொடர்ந்து மரணம் ஏற்படுத்திய நோய் அது.
  • இறந்தவர்களின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர்களின் நுரையீரல் நீல நிறத்திலும் திரவத்தால் நிரம்பியதுபோலவும் காணப்பட்டிருக்கிறது. நீரில் மூழ்கி இறந்தால் நுரையீரல் எப்படி இருக்குமோ அப்படி இருந்திருக்கிறது.

எச்.ஐ.வி.

  • எய்ட்ஸ் கொத்துக் கொத்தாகக் கொல்வதில்லை என்றாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம். எய்ட்ஸுக்குக் காரணமாக இருக்கும் ‘ஹ்யூமன் இம்யூனோடெஃபிஷியன்ஸி வைரஸ்’ தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 1980-களின் முற்பகுதியில் ஆரம்பித்து தற்போது வரை 7.5 கோடிப் பேரைத் தொற்றியிருக்கிறது. இதுவரை எச்.ஐ.வி.யால் 3.2 கோடிப் பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.
  • உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்படி ஆப்பிரிக்காவில் 25 பேரில் ஒருவர் எச்.ஐ.வி. தொற்றோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதுவரை எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், இந்நோய்க்கு எதிரான, தொடர்ச்சியான பிரச்சாரங்களால் குறிப்பிடத்தக்க விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இதனால், 2005-2012 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எய்ட்ஸால் ஏற்படும் மரணம் 22 லட்சத்திலிருந்து 16 லட்சமாகக் குறைந்திருக்கிறது.
  • சார்ஸ்’, ‘ஸிகா’, ‘எபோலா’, ‘நிபா’, ‘மெர்ஸ்’ என்று சமீப காலமாக உலகம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் அதிகம். நவீன மருத்துவத்தின் உதவியாலும், உரிய தடுப்பு நடவடிக்கைகளாலும் இந்நோய்கள் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. இது எதுவும் இல்லாத காலத்தில் மனிதர்கள் கொத்துக்கொத்தாக எப்படி செத்து வீழ்ந்திருப்பார்கள் என்பதைக் கற்பனைசெய்து பார்த்தால், நம் காலத்தின் நிலை எவ்வளவோ மேல் என்பது நமக்குப் புலப்படும்.

தடுப்பு நடவடிக்கை

  • கொள்ளைநோய்களில் பலவும் சூறாவளிபோல் வந்துவிட்டுத் தாமாகவே சென்றுவிடுபவை. அவற்றுக்குத் தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்குள்ளும் மருந்து கண்டுபிடிப்பதற்குள்ளும் லட்சக்கணக்கானோரைக் கொன்றுவிடுபவை.
  • உலகம் முன்பு எப்போதையும்விட அதிக அளவில் தொடர்பில் இருக்கும் காரணத்தால் - சீனாவில் எங்கோ ஒரு நகரில் தோன்றிய நோய்க்காக - இன்று பதைபதைத்துக்கொண்டிருக்கிறோம் என்றாலும், இந்த விழிப்புணர்வு தேவையானதுதான். அதேசமயம், ஏழ்மையும் பீதியும் அச்சமும் கொள்ளைநோய்களின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தக்கூடும் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது; ஆகவேதான், கொள்ளைநோய்களின் காலத்தில் நிதானத்துடன் கூடிய விழிப்புணர்வு அவசியமாகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியான திசையில் செல்ல பீதி அல்ல; நிதானமே அவசியம்!

நன்றி: இந்து தமிழ் திசை (26-02-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories