- புத்தொழில் (ஸ்டார்ட்-அப்) துறையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாமல் ஒரு பில்லியன் டாலர் (ரூ.8,000 கோடி) மதிப்புடைய புத்தொழில் நிறுவனங்கள் யுனிகார்ன் என்று அழைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டுநிலவரப்படி அமெரிக்காவில் 662, சீனாவில் 312, இந்தியாவில் 115 யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன.
- இந்திய யுனிகார்ன் நிறுவனங்களின் மொத்த மதிப்பு 350 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறியது. கடந்த ஆண்டில் மட்டும் 24 புத்தொழில் நிறுவனங்கள் யுனிகார்ன் அந்தஸ்து பெற்றதோடு 25 பில்லியன் டாலர் முதலீட்டையும் ஈர்த்துள்ளன.
- இது 2020-ம் ஆண்டை விட 2.2 மடங்கு அதிகம். ஆனால் 2021 உடன் ஒப்பிடும் போது புத்தொழிலுக்கான முதலீடு சுமார் 30% குறைந்தது. முதலீட்டைப் போலவே,புத்தொழில் நிறுவனங்கள் பிற நிறுவனங்களை கையகப்படுத்தும் எண்ணிக்கையும் 250லிருந்து 229 ஆகசரிந்துள்ளது.
- முக்கியமான கையகப்படுத்தல் நடவடிக்கை என்று பார்த்தால் ஷேர்சாட் நிறுவனத்துக்குச் சொந்தமான மோஜ் பிராண்டை 600 மில்லியன் டாலருக்கு எம்எக்ஸ் டகா டக் வாங்கியது. இதுபோல ஸோமாட்டோ 568 மில்லியன் டாலருக்கு பிளிங்கிட் நிறுவனத்தையும், லென்ஸ்கார்ட் 400 மில்லியன் டாலருக்கு ஓன்டேஸ் நிறுவனத்தையும் கையகப்படுத்தியது. பொதுவாக, உலகளவில் யுனிகார்ன் மதிப்பீடு பெறும் 13 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 1 நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்ததாக உள்ளது.
- இந்தியாவைப் பொருத்தவரையில் யுனிகார்ன் நிறுவனங்களின் தலைமையகமாக பெங்களூரு திகழ்கிறது. இந்தியாவில் இருக்கும் மொத்த யுனிகார்னில் 43 நிறுவனங்கள் இங்குதான் உள்ளன. உலகளவில் 7-வது இடத்தில் பெங்களூரு இருந்து வருகிறது. இந்தியாவில் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக டெல்லியில் 34 யுனிகார்ன்களும் மும்பையில் 20 யுனிகார்ன் நிறுவனங்களும் உள்ளன.
- ஆரம்பத்தில் சிறிய புத்தொழில் நிறுவனமாக ஆரம்பித்து சில ஆண்டுகளில் அதன் மதிப்பீட்டை ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தி யுனிகார்ன் அந்தஸ்த்தை பெறும் மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்களின் நிறுவனர்களில் யாராவது ஒருவர் ஐஐடி / ஐஐஎம் / ஐஎஸ்பி போன்ற பிரபலமான கல்வி நிறுவனங்களில் பயின்றவராக இருக்கிறார்.
- அதோடு சுமார் 80% பேர்பொறியியல் படிப்பு படித்தவராக இருக்கிறார்கள். இந்த 115 யுனிகார்ன் நிறுவனங்களில் 19 யுனிகார்ன் நிறுவனங்கள் மட்டுமே பெண் நிறுவனர்களைக் கொண்டிருக்கிறது.
சரி, இப்போது யுனிகார்ன்களின் நிலைமை என்ன?
- மதிப்பீடு சிறப்பாக இருந்தாலும் யுனிகார்ன் நிறுவனங்களின் கள யதார்த்தம் முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கிறது. 2022-ம் ஆண்டு இந்தியாவில் இயங்கி வரும் யுனிகார்ன்களில் 51 நிறுவனங்களின் மொத்த நஷ்டம் ரூ.48,582 கோடி (6.5 பில்லியன் டாலர்) ஆகும்.
- இதில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நைக்கா, பேடிம், ஸோமாட்டோ, டெல்லிவெரி நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனங்களின் மொத்த வருமானம் ரூ.1,82,746 கோடி (24.53 பில்லியன் டாலர்).
- பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இயங்கி வரும் மேலே குறிப்பிட்ட நான்கு நிறுவனங்களின் மொத்த நஷ்டம் மட்டும் ரூ.4,588 கோடி ஆகும். இந்நிறுவனங்களின் வருமானம் ரூ.20,790 கோடி. பட்டியலிடப்படாத 47 புத்தொழில் நிறுவனங்கள் கடந்த ஆண்டில் மட்டும் பெற்ற முதலீடு சுமார் 33.65 பில்லியன் டாலர். இந்த நிறுவனங்களின் மதிப்பீடு சுமார் 168 பில்லியன் டாலர். இது இந்நிறுவனங்களின் உண்மையான மொத்த வருமானமான 24.53 பில்லியன் டாலரை விட சுமார் 6.8 மடங்கு அதிகமாகும்.
- புத்தொழில் துறையில் பல வகையான நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் நிதித் துறை (ஃபின்டெக்) சம்பந்தமான புத்தொழில் நிறுவனங்களின் மொத்த நஷ்டம் ரூ.8,535 கோடி ஆகும். இதற்கு அடுத்து கல்வி தொடர்பான (எட்டெக்) துறை சார்ந்த நிறுவனங்களின் மொத்த நஷ்டம் ரூ 9,157 கோடி ஆகும்.
- ஆக, பெரும்பாலான புத்தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும் அதனுடைய மதிப்பீட்டில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படவில்லை. ஆனால், கடந்த 6 மாதங்களாக இத்துறைக்கு வரும் முதலீடுகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.
- இது ஃபண்டிங் வின்ட்டர் (funding winter) என அழைக்கப்படுகிறது. பருவகாலத்தில் ஏற்படும் சுழற்சி போல புத்தொழில் துறை முதலீட்டிலும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், இந்தியாவில் இயங்கி வரும் 88 புத்தொழில் நிறுவனங்கள் பல பிரச்சினைகளைக் காரணம் காட்டி சுமார் 25,000 பணியாளர்களை கடந்த ஆண்டு வேலை நீக்கம் செய்திருப்பதாக இன்க்42 இணையதள அறிக்கை கூறுகிறது.
- இதில் குறிப்பாக, கல்வித் துறையைச் சேர்ந்த பைஜுஸ், வேதாந்து, அன்அகாடமி போன்ற நிறுவனங்கள் வேலை நீக்கம் செய்த பணியாளர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 9,000-க்கும் மேல்.
- பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்துவது பிரபலமானதால் இத்துறை அதிகமானவர்களை வேலைக்கு நியமித்தது. ஆனால் 2021-ம் ஆண்டு பிற்பகுதிக்குப் பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கிய நிலையில் பலரையும் வேலை நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு இந்நிறுவனங்கள் தள்ளப்பட்டன.
- பைஜுஸ் நிறுவனத்தின் மதிப்பீடு 22 பில்லியன் டாலரிலிருந்து 6 பில்லியன் டாலர் என்கிற அளவுக்குக் குறைந்துவிட்டது. பைஜுஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான திவ்யா கோகுல்நாத் கூறுகையில், ‘‘நாங்கள் 300 ஹைபிரிட் கல்வி மையங்களை கடந்த ஆண்டு ஆரம்பித்திருக்கிறோம்.
- இந்த வருடம் மேலும் 300 மையங்களைத் திறக்க உள்ளோம். நஷ்டத்தை குறைக்கும் விதமாக, பிராண்ட் ப்ரமோஷனுக்கு ஆகும் செலவை குறிப்பாக விளையாட்டுகள் மூலம் செய்யப்படும் ப்ரமோஷன்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்’’ என்றார். பெரும்பாலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும், உலகளவில் பொருளாதார மந்தநிலை பற்றிய அச்சம் இருப்பதாலும் முதலீட்டாளர்கள் இத்துறையில் முதலீடு செய் தற்போது தயக்கம் காட்டுகிறார்கள்.
- இதன் விளைவாக, லாபம் ஈட்ட இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் அல்லது லாபமே ஈட்ட முடியாது எனக் கருதும் பிரிவுகளை சில நிறுவனங்கள் விற்கவோ இழுத்து மூடவோ செய்திருக்கின்றன. அது போல பணியாளர்களின் எண்ணிக்கையையும் குறைக்க ஆரம்பித்திருக்கின்றன.
- புத்தொழில் நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலையால் தூண்டப்பட்ட நெருக்கடியை கடந்து செல்லும். அதே நேரத்தில் வெற்றி பெற்ற நிறுவனமாக உருவெடுப்பதற்கு தங்கள் உத்திகளை மாற்றியமைப்பதில் அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.
நன்றி: தி இந்து (30 – 04 – 2023)