TNPSC Thervupettagam

உலக குழந்தைகள் தினம்

November 25 , 2017 2556 days 6999 0

உலக குழந்தைகள் தினம்

மாணிக்கவள்ளி கண்ணதாசன்

-  - - - - - - - - - - - - - - - - - - - - - -

               நவம்பர் 20 ஆம் தேதியானது உலக குழந்தைகள் தினமாக 1954 ஆம் ஆண்டு முதல்  கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் குழந்தைகளிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் அவர்களின்நலவாழ்விற்காகவும் உலகளவில் இந்த தினம் கொண்டாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

               1959 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி குழந்தைகள் உரிமைகளின் பிரகடனம்  ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் 1989 ஆம் ஆண்டு  இத்தினத்தில் தான் குழந்தைகளின் உரிமைகள் மீதான ஒப்பந்தம் ஐ.நா அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

               1990 ஆம்  ஆண்டு நவம்பர் 20 ஆம் நாளன்று குழந்தைகளின் உரிமைகள் மீதான ஒப்பந்தம் ஐ.நா அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளுடைய முதலாமாண்டு தினம் கொண்டாடப்பட்டது. எனவே, இது உலக குழந்தைகள் தினமாக மட்டுமல்லாமல் குழந்தைகள் உரிமைகள் தினமாகவும் கொண்டாடப்படுகின்றது.

               ஐக்கிய நாடுகள் அவை மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் உரிமைகள் மீதான ஒப்பந்தம், குழந்தைகள் உரிமைகளை எவ்வாறு வரையறுக்கின்றது தெரியுமா? இனம், நிறம், பால், மொழி, மதம், கருத்து, செல்வம், திறன் ஆகியவற்றைக் கடந்து  18 வயதிற்கு உட்பட்டோர்க்கு குறைந்த பட்சம் உரிமைகள் மற்றும் சுதந்திரம் அளிக்கப்படல் வேண்டும் என்று வரையறுக்கின்றது.

குழந்தைகளின் உரிமைகள்

               ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கமே  “குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகள் அளிக்கப்படல் வேண்டும் “ என்பது தான். மேலும், குழந்தைகளின் உரிமைகள் நான்கு பரந்த பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு பிரிவுகளும் சமூக, பொருளாதார, கலாச்சார , குடிமை உரிமைகளை அளிக்கக்கூடியதாகும். அந்த உரிமைகள் என்னென்ன என்பதினை அறிவோமா?

  1. வாழும்உரிமை,
  2. பாதுகாக்கப்படும்உரிமை,
  3. பங்கேற்கும்உரிமை ,
  4. முன்னேற்றஉரிமை

ஆகியன ஆகும்.

               வாழும் உரிமையானது குழந்தை தன் தாயின் கருவில் இருக்கும் பொழுதே துவங்கி விடுகின்றது.  நம்  இந்திய  அரசாங்கத்தின்  கொள்கையின் படி குழந்தையின் வாழ்க்கையானது தாயின் கருவில் 20 வாரங்களிலேயே துவங்கி விடுகின்றது. வாழும் உரிமையில் குழந்தையின் பிறக்கும் உரிமை, குறைந்தபட்ச தர அளவிலான உணவு, உறைவிடம், உடை மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமை ஆகியனவும் அடங்கி விடுகின்றன.

               பாதுகாக்கப்படும் உரிமையானது குழந்தைகள் புறக்கணிக்கப்படுதலிலிருந்து காத்தல் , வீடு மற்றும் பிற இடங்களில் சுரண்டல் மற்றும் தவறாக நடத்தப்படுதலிலிருந்து காத்தல் ஆகியன ஆகும். ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச குழந்தைகள் நிதியமான யுனிசெஃபும் இதனையே  வலியுறுத்துகின்றது.

               குழந்தைகளின் பங்கேற்கும் உரிமையானது குழந்தைகள் சார்ந்த முடிவெடுக்கும் விஷயங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குழந்தைகள் பங்கேற்கும் உரிமையினைப் பெற்றுள்ளமை ஆகும். மேலும், வயதிற்கேற்றாற் போலவும் முதிர்ச்சிக்கேற்றாற் போலவும் பங்கேற்கும் நிலையானது வேறுபடுகின்றது.

               குழந்தைகள் அனைத்து விதமான முன்னேற்ற உரிமைகளைக் கொண்டுள்ளார்கள். அவை குறிப்பாக உணர்வு, உடல் மற்றும் மன ரீதியான முன்னேற்ற உரிமைகளை உள்ளடக்கியது. உணர்வு சார் முன்னேற்ற உரிமையானது முறையான வளர்ப்பு மற்றும் அன்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. மன ரீதியான முன்னேற்ற உரிமையானது கல்வி மற்றும் கற்றல் ஆகியவற்றை உள்ளடக்கியது.  அனைத்து உரிமைகளையும் குழந்தைகளுக்கு அளித்திடல் வேண்டும். அகிலத்தினை ஆண்டிடும் உரிமையினை அவர்களுக்கு உரித்தாக்கிட வேண்டும் என்பது சரிதானே!.

               குழந்தைகளின் உரிமைகளைப் பொறுத்தவரை பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் மட்டுமல்லாமல் ஊடகங்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இதில் மிகப்பெரிய பங்குள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுதெல்லாம் ”உன் குழந்தையை மத்திய அரசின் கல்வி முறை அளிக்கும் பள்ளியில் சேர்த்திருக்கின்றாயா அல்லது மாநில அரசின்  கல்வி முறை அளிக்கும் பள்ளியில் சேர்த்திருக்கின்றாயா”?  என்று எவரேனும் கேட்டால் பெற்றோர் அளிக்கும் பதில் என்ன தெரியுமா? நான் என் குழந்தையை  மத்திய அரசின் அல்லது மாநில அரசின் கல்வி முறையில் போட்டிருக்கின்றேன் என்பது தான்!

               போடுவதற்கு  குழந்தை என்ன உயிரில்லாத ஜடப்பொருளா? என்ன கொடுமை! குழந்தைகளுக்குத் தாங்கள் பயிலும் கல்விமுறையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கூட இல்லை. சிலர் சொல்வார்கள் “குழந்தைகளுக்கு என்ன தெரியும்? பெற்றவர்களுக்குத் தெரியாதா பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டிய கல்வி முறை எதுவென்று”? சில குழந்தைகளுக்கு விளையாட்டு முறையில் கல்வி கற்க ஆர்வமிருக்கும்! சில குழந்தைகளுக்கோ திறன் சார் கல்வி பெறுவதில் ஆர்வம் அதிகம் இருக்கும். மேலும் சில குழந்தைகளுக்கு  சுயமாக கற்றலில் ஆர்வம் அதிகம் இருக்கும்! சில குழந்தைகளுக்கோ படைப்பாற்றல் அளிக்கும் கல்வி முறையில் ஆர்வம் இருக்கும். அதையெல்லாம் ஆராயாமல் அந்தக் கல்வியில் போட்டேன், இந்தக் கல்வியில் போட்டேன் என்பது எப்படி ஏற்றுக்கொள்ளத் தக்கது?

               இன்றைய குழந்தைகள் மிகுந்த புத்திசாலிகள் ஆவர். தங்களுக்கான கல்விமுறையினைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் பெற்றவர்கள். தங்களின் உரிமைகளை உணர்ந்தவர்கள்.  குழந்தைகளுக்கான உரிமைகளை அளித்தலே பெற்றோருடைய அடிப்படைக் கடமையாக அமைய வேண்டும்.

               உரிமைகளை அளித்தல் என்பது அவர்கள் இஷ்டத்திற்கு விட்டுவிடுதல் என்பதல்ல. கடமைகளைப் புரிதலுடன் கூடிய உரிமைகளை அளித்திடல் வேண்டும். உடலளவிலும் மனதளவிலும் பாதுகாப்பு, நல்ல உணவு, உறைவிடம், ஆரோக்கியம் மற்றும் சிறப்புக் கவனம் ஆகியவற்றை அளித்தலே குழந்தைகளின் உரிமைகளை அளித்தலில் முதல் படிநிலை ஆகும். அடக்கி வளர்க்கப்படும் குழந்தையானது பிறரை அடக்கி ஆளவே நினைக்கும். சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வளரும் குழந்தையே பிறரின் உணர்வுகளையும் உரிமைகளையும் எளிதாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றதாகும். மேலும் சிறந்த குடிமகனாய்ச் சீரும் சிறப்புமாய் வளரும்.

               பொருளாதார ரீதியாய்க் குழந்தை பெற்றோரைச் சார்ந்தே வளர்வதால் சில பெற்றோர்கள் நாம் பெற்றப் பிள்ளை தானே என்று அதிகப்படியான உரிமைகளை எடுத்துக்கொள்கின்றார்கள். அது தவறு! செலுத்திடும் முதலுக்கு லாபம் எதிர்பார்ப்பதற்கு குழந்தை வளர்ப்பு என்பது வணிகம் அல்லவே!

               குழந்தைகளின் உரிமைகளை முழுமையாக அளிப்போம். அவர்கள் உரிய முறையில் வளர்வதை உறுதி செய்வோம்.

                                                   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories