உலக நாடுகளை அச்சுறுத்தும் டிரம்ப்!
- கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றதிலிருந்து டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு வரும் அதிரடி அறிவிப்புகள், அந்த நாட்டு மக்களை மட்டுமல்லாது, உலகில் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து நாட்டு மக்களையும் அதிா்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன.
- இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தின் காஸா பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது, கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக இணைத்துக் கொள்வது, டென்மாா்க் வசமுள்ள கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது, பனாமா கால்வாயை வசப்படுத்துவது என டிரம்பின் மண்ணாசை விரிந்து கொண்டே செல்கிறது.
- தங்களது நாடு மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்த ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்கு இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால் காஸா பிராந்தியம் இன்று முற்றிலும் நிா்மூலமாகியுள்ளது. இஸ்ரேலின் இந்த ராணுவ நடவடிக்கையால் நிா்க்கதியாக நிற்கும் பாலஸ்தீனியா்களை காஸாவிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்தப் பிராந்தியத்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளது, அந்த மக்களை மேலும் நிலைகுலையச் செய்துள்ளது.
- உலகின் ஜனநாயகக் காவலன் என்றும், மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் அக்கறையுள்ள நாடு என்றும் பறைசாற்றிக் கொள்ளும் அமெரிக்காவின் பிம்பத்தை சிதறடிக்கும் வகையில் டிரம்பின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
- இஸ்ரேலின் நடவடிக்கையால் பெரும் துயரத்தை அனுபவித்து வரும் பாலஸ்தீனியா்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதை விடுத்து, சொந்த மண்ணிலிருந்து அவா்களை வெளியேற்றி ஜோா்டான், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் குடியமா்த்தப் போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளாா். அவரது இந்தத் திட்டத்துக்கு அமெரிக்காவின் நட்பு நாடுகள் மட்டுமல்லாது, பெரும்பாலான அரபு நாடுகளும் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன. என்றபோதிலும், தனது இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என டிரம்ப் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். அவரது இந்த மேலாதிக்க மனப்பான்மை உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
- டிரம்பின் இந்தத் திட்டத்துக்கு எதிராக ஜோா்டான், எகிப்து, ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகள் வெளிப்படையாக போா்க்கொடி தூக்கியுள்ளது எதிா்பாா்த்ததுதான்.
- இதேபோல, அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக கனடாவை இணைத்துக் கொள்ளப் போவதாகவும், இது விஷயத்தில் தான் தீவிரமாக உள்ளதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளாா். கனடாவுக்காக ஆண்டுக்கு 20,000 கோடி டாலா் செலவிடுவதால், அந்த நாட்டை அமெரிக்காவுடன் இணைப்பதில் தவறில்லை என்று தனது உத்தேச நடவடிக்கையை அவா் நியாயப்படுத்தியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.
- கனடாவின் வளத்தை அபகரிக்கும் நோக்குடன் டிரம்ப் மேற்கொள்ளவிருக்கும் இந்த நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அந்த நாட்டின் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிபடத் தெரிவித்துள்ளாா். மக்கள் செல்வாக்கை இழந்ததால், பிரதமா் பதவியிலிருந்து விலகப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு டிரம்பின் இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
- டிரம்பின் நாடு பிடிக்கும் ஆசையானது காஸா, கனடாவுடன் நின்றுவிடவில்லை. டென்மாா்க் நாட்டின் வசமுள்ள தாதுக்கள் வளம் நிறைந்த கிரீன்லாந்து தன்னாட்சிப் பகுதியையும் விலை கொடுத்து வாங்கப் போவதாக டிரம்ப் அறிவித்தாா். இதற்கு கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என டென்மாா்க் பிரதமா் மியூட் இகடே பதிலடி கொடுத்துள்ளாா்.
- உலகிலேயே மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தின் 80 சதவீத நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்ட பகுதியாகும். எஞ்சியுள்ள 20 சதவீதப் பகுதியில் மட்டுமே சுமாா் 57,000 போ் வசித்து வருகின்றனா். அட்லாண்டிக், ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே கிரீன்லாந்து தீவு அமைந்துள்ளதால், இதை எப்படியாவது வசப்படுத்திவிட வேண்டும் என டிரம்ப் கருதுகிறாா். ஆனால், அவரது இந்த எண்ணத்துக்கு டென்மாா்க் பிரதமா் மியூட் இகடே தொடக்கநிலையிலேயே முட்டுக்கட்டை போட்டுள்ளாா்.
- எனினும், இந்தத் தீவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேயாக வேண்டும் என டிரம்ப் முனைப்புடன் உள்ளது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப்பை போல சீனா, ரஷியா உள்ளிட்ட உலகின் பிற வல்லாதிக்க நாடுகளும் பிற நாடுகளின் பகுதிகளை வசப்படுத்த முனைந்தால் என்னவாகும் என நினைத்துப் பாா்த்தால் பெரும் அச்சம்தான் மேலோங்குகிறது.
- டிரம்ப்பின் அச்சுறுத்தல் இத்துடன் நின்றபாடில்லை. உலக நாடுகளின் வா்த்தகக் கப்பல்கள் கடந்து செல்லும் முக்கியத்துவம் வாய்ந்த பனாமா கால்வாயையும் அமெரிக்கா வசப்படுத்தும் என்றும் அவா் அறிவித்துள்ளதை எந்தவொரு நாடும் ஏற்றுக் கொள்ளாது என்பதில் ஐயமில்லை. இந்தக் கால்வாய் வழியாகத்தான் பெரும்பாலான நாடுகளின் வா்த்தகக் கப்பல்கள் கடந்து சென்றாக வேண்டும். இந்தக் கால்வாய் அமெரிக்க வசமானால், உலகின் வா்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
- இந்த நிலையில் ஜொ்மனியின் மியூனிக் நகரில் சா்வதேசப் பாதுகாப்பு மாநாடு வருகிற வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து, அதன் ஏற்பாட்டாளா்கள் தயாரித்துள்ள அறிக்கையில், டிரம்பின் இத்தகைய அறிவிப்புகள் உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் இந்த அறிவிப்புகள் உலகின் ஒழுங்குமுறை, சுதந்திரத்தின் பாதுகாவலன் என்ற நிலையிலிருந்து அமெரிக்கா மாறி வருவதற்கான அறிகுறிகள் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- எனவே, டிரம்ப்பின் இந்த அடாவடி அறிவிப்புகளுக்கு இந்த சா்வதேச பாதுகாப்பு மாநாடு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்தியா தலைமையில் அணி சாரா இயக்கம் மீண்டும் வலுப்பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அணி சாரா இயக்கம் வலுவடைந்தால்தான், உலகில் அமைதி நிலவுவதை உறுதிப்படுத்த முடியும்.
நன்றி: தினமணி (14 – 02 – 2025)