TNPSC Thervupettagam

உளவாளிகள்

November 4 , 2019 1902 days 1771 0
  • சுவாரஸ்யமான ஒரு உளவுக் கதை இது. சேஜல் கபூர் ஃபேஸ்புக்கில் இணைந்து, நட்பாகி ராணுவத்தின் வெவ்வேறு படைப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் அளவளாவி, அவர்களுடைய மனங்களிலும் கம்ப்யூட்டர்களிலும் ஊடுருவிவிட்டாள்.
  • 2015 முதல் 2018 வரையில் இப்படி 98-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகளுடன் இனிக்க இனிக்கப் பேசியவள் அவர்களுடைய கம்ப்யூட்டர்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரகசிய ராணுவத் தகவல்களைக் கவர்ந்ததுடன், எப்போது வேண்டுமானாலும் அவற்றைச் செயலிழக்க வைக்கும் வைரஸ்களையும் பரப்பிவிட்டாள்.
  • சேஜல் கபூர் என்ற பெயரும் திரையில் தெரிந்த கட்டழகும் ராணுவ அதிகாரிகளைக் கிறங்கடித்தன. நல்ல பொழுதுபோக்கு என்று நினைத்து கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி அசடுவழிந்தனர். அதிகாரிகளின் அந்தரங்கப் பசிக்கு மேற்காசிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாலுறவுக் காணொலிக் காட்சிகளையும் புகைப்படங்களையும் விருந்தாகப் படைத்தாள். பிரம்மனின் படைப்போ, ரதியின் தங்கையோ என்று மயங்கிய அதிகாரிகள் தங்களின் இதயங்களிலும் கம்ப்யூட்டர்களிலும் அவளுக்கு இடம்கொடுத்தனர்.
  • விளைவு ‘பிரம்மோஸ்’ ஏவுகணையின் திறன் தொடர்பான தகவல்களும் இதர ரகசியங்களும் உறிஞ்சியெடுக்கப்பட்டன. ‘விஸ்பர்’, ‘கிராவிட்டிராட்’ என்ற வைரஸ்களை அதிகாரிகளின் கம்ப்யூட்டர்களுக்குள் ‘குடியேற்றிவிட்டாள்’.
  • தான் யார் என்பதை அடையாளம் காண முடியாதபடிக்கு 25-க்கும் மேற்பட்ட இணையதள முகவரிகளைப் பயன்படுத்தியிருக்கிறாள். இதில் கவனிக்க வேண்டியது, ‘சேஜல் கபூர்’ பெண் அல்ல - பாகிஸ்தான் ராணுவத்துக்காகத் தொடர்ந்து உளவுபார்க்கும் உளவாளி!

கவர்ச்சிப் பொறி

  • இந்த வைரஸ்கள் கம்ப்யூட்டரில் பதிவாகியிருக்கும் அனைத்து ரகசியங்களையும், அவற்றைக் குடியேற்றியவர்களுக்கு அனுப்பிக் கொண்டேயிருக்கும் அல்லது குடியேறிய கம்ப்யூட்டரின் வலைதள இணைப்பையே நாசப்படுத்திவிடும்.
  • ஒரு பெண் நேரில் வந்து மோகவலை விரிப்பதைவிட, கம்ப்யூட்டர் வழியே உள்ளே வருவது எளிது. இதில் உடலும் உடலும் சேர வேண்டிய அவசியமுமில்லை. எனவே, உளவாளி வசமாக சிக்கிக்கொண்டு உயிரை இழக்கும் ஆபத்தும் இல்லை. இன்னொரு வசதி, ஒரே சமயத்தில் பலரை வீழ்த்தலாம்!
  • ராணுவத்தின் உளவுப் பிரிவும் உத்தர பிரதேச காவல் துறையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவும் இணைந்து இந்த உளவு வேலையைக் கண்டுபிடித்து, இதற்கு இரையான ‘பிரம்மோஸ்’ திட்ட மூத்த பொறியாளர் நிஷாந்த் அகர்வாலைக் கைதுசெய்தன.
  • இந்த வலையில் வீழ்ந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்பதை இப்போதே கண்டுபிடித்துவிட முடியாது. காரணம், கம்ப்யூட்டர்களில் குடியேறிய வைரஸ்கள் செயல்படும்போது மட்டுமே அது தெரியவரும். இவை மாதக்கணக்கில், ஏன் ஆண்டுக்கணக்கில்கூட செயல்படாமல் உள்ளேயே இருக்கும். தன்னிடம் பெயர் பதிவுசெய்துள்ளவர்களில் 27 கோடிப் பேர் போலியான முகவரி தந்தவர்களாக இருக்கக்கூடும் என்கிறது ஃபேஸ்புக். இவற்றில் பெரும்பாலானவை உளவாளிகளுடையவை.
  • ராணுவ வீரர்களையும் அதிகாரிகளையும் வீழ்த்த பெண்களைக் கொண்டு ‘கவர்ச்சிப் பொறி’ அமைப்பதானது காலம் காலமாக நடப்பதாகும். பிரிட்டிஷ் ராணுவத்தின் உளவுப் பிரிவுக்கு ‘எம்ஐ5’ என்று பெயர். அது சீனர்களின் பாலியல் உளவு குறித்து பிரிட்டிஷ் வங்கித் துறையையும் வர்த்தகர்களையும் எச்சரித்தது.
  • இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மானிய உளவுப் பிரிவு, பெர்லின் நகரத்தைச் சேர்ந்த சலோன் கிட்டி என்ற விலைமாதின் மூலம், நேச நாடுகளின் ராணுவ பலம் பற்றிய உளவுத் தகவல்களைச் சேகரித்தது.
  • பெர்லின் நகர எல்லைச் சுவர் தகர்ந்து கீழே விழும் வரையில், மேற்கு ஜெர்மனி நகரங்களின் முக்கிய இடங்களில் தங்களுக்கு உளவு சொல்லக்கூடிய பெண்களை நிறுத்தி வைத்திருப்பார்களாம் கிழக்கு ஜெர்மனி அதிகாரிகள். பெண்களைக் கவர்ச்சிப் பொறியாக்கி, எதிரி நாட்டு ராணுவ அதிகாரிகளை வலையில் விழச் செய்வது எப்படி என்று பயிற்சி தரவே மாஸ்கோவில் ஒரு பள்ளிக்கூடத்தையே நடத்தினார்களாம்.

தேர்ச்சிபெற்ற உளவாளிகள்

  • இன்றைய காலத்தில் கவர்ச்சிப் பொறியின் வடிவம், தன்மை எல்லாமே மாறிவிட்டது. இப்போது கடையில் இருக்கும் பொருளை வாங்குவதாக இருந்தாலும், தோழியுடன் சல்லாபமாகப் பேசுவதானாலும் நேரடியாகப் போக வேண்டாம்; கணினி அல்லது செல்பேசி போதும். இதைச் செய்வதற்கு இரண்டு வழிகள் ஏற்பட்டுவிட்டன.
  • சமூக வலைதளங்களில் இடம்பெற்று, முதலில் கண்ணியமாக உரையாடிப் பழகி, ஓரிரு வாரங்களிலேயே அந்தரங்கங்களைப் பகிரும் அளவுக்குச் செல்வது. இரண்டாவது, ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று இருக்கும் வலைதளங்களில் புகுந்து சபல புத்திக்காரர்களை அடையாளம் கண்டு வீழ்த்துவது.
  • உலகத்தின் இன்றைய 20 பெரிய இணையதளங்களில் மூன்று, ஆபாசப் படங்களைப் பகிர்ந்துகொள்பவை. ஆண்ட்ராய்ட் செல்பேசியில் 25%-க்கும் மேல் காணப்படுபவை ஆபாசக் காட்சிகள்தான். கோவ்கோர்ஜி (KovCoreG) என்ற ஹேக்கர் குழுமம் ஒன்று, ‘போர்ன்ஹப்’ என்ற தளம் மூலம் லட்சக்கணக்கானவர்களை ஈர்த்து, அவர்களுடைய கம்ப்யூட்டர்களில் வைரஸ்களைப் பதுக்கி வைக்கிறது.
  • தன்னிலை மறந்து, ஒப்புதல் வாக்குமூலமாக உளறிக்கொட்டுவதையெல்லாம் நகலெடுத்து வைத்துக்கொண்டு, பின்னாளில் அவர்களையே மிரட்டிப் பணிய வைத்துவிடுகின்றனர். கேட்கும்போதெல்லாம் பணம் தர வைக்கின்றனர் அல்லது தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்யச்சொல்லி சாதித்துக்கொள்கின்றனர்.
  • தேர்ச்சி பெற்ற உளவாளிகள் இதைச் செய்வதால், அப்பாவிகள் அவர்கள் சொல்வதைத் தவிர வேறெதையும் செய்யத் தோன்றாமல் சிக்கிக்கொள்கின்றனர்.
  • ஆண்களைப் பெண்கள்தான் இப்படிச் சிக்க வைக்கின்றனர் என்றில்லை, பெண்களும் ஆண்களிடம் ஏமாந்துவிடுகின்றனர். கட்டுமஸ்தான உடல் கொண்ட ராணுவ வீரர் தனது புஜபலங்களைக் காட்டும் ‘பேர்-பாடி’ படங்களைப் பதிவிடுகின்றனர். அதைப் பார்க்கும் இளம் பெண்கள், ‘அம்மாடி என்ன உடம்பு’ என்று மகிழ்ந்தோ, ‘எங்களைக் காக்கும் எல்லை தெய்வங்கள் நீங்கள்தானே?’ என்று வியந்தோ பதிவிட்டு, பொறியில் சிக்குகின்றனர்.
  • பிறகு, உரையாடல் கட்டுக்கடங்காமல் தொடர்கிறது. இப்படிப் பின்தொடர்ந்தவர் பெண்தான் என்று நினைத்து ஆண் வீரர் முக்கிய ரகசியங்களைத் தெரிவிப்பதும் உண்டு. பெண்களும் தங்களைப் பற்றிய ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டுவிட்டுப் பிறகு தவிப்பதும் உண்டு.

அரசின் நடவடிக்கை

  • இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இதுபற்றிக் கேள்வி கேட்கப்பட்டது. ராணுவத்தின் தரைப் படையில் 2015-ல் ஒன்று, பிறகு 2017-ல் இரண்டு, விமானப் படையில் 2015-ல் ஒன்று என்று கவர்ச்சிப் பொறி சம்பவங்கள் அடுத்தடுத்து தெரியவந்தன என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே பதில் அளித்தார். கடற்படை ஏதும் தெரிவிக்கவில்லை என்றார். அதன் பிறகு, ராணுவத்தின் அனைத்து படைப் பிரிவுகளுக்கும் தலைமையகம் சுற்றறிக்கை அனுப்பியது.
  • சமூகவலைதளங்களில் இடம்பெறும் பெண்கள் அல்லது பெண் பெயர்கள் கவர்ச்சி காட்டி ரகசியத் தகவல்களைப் பெறும் முயற்சி என்பதால், ராணுவ வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியது.
  • ராணுவ வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரின் செல்பேசிகள், மடிக்கணினிகள், பெருங்கணினிகள் உளவுப் பிரிவால் எப்போதாவது கண்காணிக்கப்படுகின்றன. சமூக வலைதளங்களை எப்படிக் கையாள வேண்டும் என்று அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய ட்விட்டர், ஃபேஸ்புக்கு கணக்குகள் கண்காணிக்கப்படுகின்றன.
  • ராணுவத் தாக்குதல் என்பது நேருக்குநேர் துப்பாக்கிச் சண்டை நடத்தும் மரபிலிருந்து மாறிவிட்டது. ஆளற்ற சிறு விமானங்களான டிரோன்களும், சைபர் தாக்குதல்களும் நவீன ஆயுதங்களாகிவிட்டன.
  • எதிரியின் எல்லைக்குள் ஊடுருவுவது இப்போது செலவில்லாத, எளிமையான வேலையாகிவிட்டது. எதிரிகளின் கணினிகளை முடக்க விஷ வைரஸ்கள் மலிவாகக் கிடைக்கின்றன.
  • எனவே, விசைப் பலகைகளே ஆயுதங்களாக மாறுகின்றன. இத்தகைய ஆயுதங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தினாலும் எதிரிக்கு அதிக செலவில்லை. உயிருக்கு நேரடி ஆபத்தும் இல்லை. எனவே, இதற்குப் பதிலடி கொடுக்க இந்தியாவும் தயாராக வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories