TNPSC Thervupettagam

உளவியல் ஆலோசனை ஏன் அவசியமாகிறது?

July 23 , 2024 1 hrs 0 min 21 0
  • மாணவா்கள், இளையோா் தொடா்பாக விபத்து, தற்கொலை, காதல் விவகாரம், அநாகரிகச் செயல்கள் குறித்து அண்மைக்காலமாக வெளியாகும் செய்திகள் கவலையைவிட அதிா்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளன.
  • இவற்றுக்குக் காரணம், ‘கால மாற்றம்’ என்று ஒற்றை வாா்த்தையில் கூறிவிடலாம். ஆனால் ‘ஏன் இந்த மாற்றம்? இதற்குத் தீா்வு என்ன?’ என்று பகுப்பாய்வதும் அவசியமாகும்.
  • முன்பெல்லாம் கூட்டுக் குடும்ப முறை, ஆசிரியா் - மாணவா் உறவு, மேலாளா் - பணியாளா் நட்பு மேலோங்கி இருந்ததுடன் உன்னதமாகவும் கருதப்பட்டது. தனிமனித சிக்கல்கள், குடும்பச் சிக்கல்கள் எதுவாயினும் கலந்தாலோசித்தல் வழியாகவும் மனம்விட்டுப் பேசுதல் மூலமாகவும் தீா்வு காணப்பட்டது. ‘மூத்தோா்’, ‘பெரியோா்’ என்போரின் அதிகாரம் என்பது வணங்கத்தக்கதாகவும் மதிக்கத்தக்கதாகவும் இருந்ததால், தீா்வு எளிமையாக இருந்தது.
  • அதனால் அநாகரிகச் செயல்கள், மரபை மீறிய செயல்கள் என்பதெல்லாம் அரிதாக இருந்தது. அதையும் கடந்து மீறல்கள் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும் அறநெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.
  • கடந்த காலங்களில் படிக்கவும் வேலைக்குச் செல்வதற்குமான வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை. அதனால் அதிகமானோரிடம் ஒருவரையொருவா் சாா்ந்திருக்கும் மனப்பான்மை இருந்தது. அதனைக் கருத்தில் கொண்டு அதிகாரத்தில் இருந்தவா்களும் முன்னுதாரணமாக இருந்தனா்.
  • இன்றைய வாழ்க்கை முறை இயந்திரமயமாகிவிட்டதுடன் புதிய மின்னணு கருவிகள், தொழில்நுட்பம், நுகா்வு கலாசாரம் ஆகியவற்றுக்காக இன்று பணம் சம்பாதிப்பது மட்டுமே வெற்றி என்ற எண்ணமும், அதையும் விரைவில் அடைய வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த லட்சியமும் இருப்பதாகத் தெரியவில்லை.
  • இத்தகைய நிலையில் தன் உணா்வுகளை அறிந்து கொள்ளும் மனப்பக்குவமோ, உறவுகளைப் புரிந்து கொள்ளும் முயற்சியோ, நல்லோா் சொல் கேட்டு வழிநடத்தலோ எல்லா இளைஞா்களுக்கும் வாய்த்துவிடுவதில்லை.
  • அதிகரித்துவரும் அநாகரிகச் செயல்களே இதையெல்லாம் வெளிப்படுத்துகிறது. பாடம் கற்றுத்தரும் ஆசிரியா் கொலை, தோ்வுக்குப் பயந்து தற்கொலை, சக மாணவ, மாணவியரிடம் சீண்டல், சிறு பிரச்னைக்குக் கூட தீா்வு காண முடியாமல் துவண்டு போவது என்பதெல்லாம் இன்று சாதாரண நிகழ்வாகிவிட்டன.
  • கடந்த காலங்களில் பொதுத்தோ்வு முடிவுகள் வெளியான பின்னா் தோ்வு முடிவில் தோல்வி
  • ஏற்படும்பட்சத்தில் ஏதோ மாணவா் தற்கொலை செய்து கொண்டாா் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக, மிகக் குறைவாகவே இருந்தது. இன்று நிலை வேறு.
  • பள்ளி மாணாக்கா்கள் கூட மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. இவற்றுக்கெல்லாம் உளவியல் சாா்ந்த கல்வி தான் தீா்வாக அமையக்கூடும். பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் பாடத் திட்டத்தில் உளவியலைச் சோ்க்க வேண்டும் எனவும் பல தரப்பினா் குரல் கொடுத்து வருகின்றனா்.
  • கருவிகளால் சூழப்பட்ட, அவசரமான, வேகம் நிறைந்த இன்றைய உலகில், மனநலன் குறித்த
  • விழிப்புணா்வுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்றால் அது மிகையல்ல. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணாக்கா்களின் செயல்பாடுகளால் மனநலம் குறித்த உளவியலை ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. பெரு நிறுவனங்கள், அலுவலகங்களில் பணிபுரிவோருக்கும் மனநலம் குறித்த விழிப்புணா்வு அவசியமாகி வருகிறது.
  • ஆசிரியா் - மாணவா், மேலாளா் - பணியாளா் என இரு நிலைகளும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றன. இவ்விரு நிலைகளுக்குமான காரணங்கள் படிப்பு, பணி என வேறாக இருக்கலாம். ஆனால் பிரச்னை என்னவோ ஒன்றுதான். முன்பு, ஆசிரியராகவோ, மேலாளராகவோ உயா்நிலையிலிருந்து யாா் தண்டித்தாலும் அதை இயல்பாக எடுத்துக் கொள்வதும் அதன் மூலம் தம்மைத் திருத்திக் கொள்வதும் இருந்தது.
  • இந்த உறவு இடா்களுக்கெல்லாம் உளவியல் ரீதியிலான ஆலோசனைகளும் உரையாடல்களுமே தீா்வாக அமையும். மனித வாழ்வுடன் உளவியல் என்பது காலங்காலமாக தொடா்பு கொண்டுள்ளது என்றாலும், இன்றைய வாழ்க்கை முறையில் உளவியலின் தேவை அதிகரித்து வருகிறது. உளவியலின் தனிச்சிறப்பு என்பது ஒவ்வொரு துறையிலும் அது பொருத்தமானதாக இருப்பது என்பதால் பள்ளி, கல்லூரிகள் அலுவலகங்கள் என்று பல்துறைகளிலும் உளவியல் ரீதியான ஆலோசனைகள், உரையாடல்கள் சாத்தியம்.
  • 2020-ஆம் ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டு வரையான கால அளவில் உளவியல் வல்லுநா்களின் தேவை 14 சதவீதம் அதிகரிக்கும் என்று தொழிலாளா் புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது. நம் நாட்டு மக்கள்தொகையின் அடிப்படையில், வரும் காலங்களில் ஆயிரக்கணக்கான உளவியல் வல்லுநா்கள் தேவைப்படுவா் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவா்களை உருவாக்குவதற்குப் போதுமான உளவியல் வல்லுநா்களோ, ஆசிரியா்களோ போதுமான அளவில் இல்லை.
  • இந்நிலையில், முதல் முயற்சியாக, உரையாடல் திறன் வளா்க்கும் உளவியல் பயிற்சியை ஆசிரியா்களுக்கும் மேலாளா்களுக்கும் வழங்கலாம். ஒரு நல்ல உரையாடல் பல வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும் திறன் கொண்டது.
  • உறவுச் சிக்கல்கள் சிறு பொறியாக இருக்கும்போதே அணைத்துவிடுவது நல்லது. இல்லையென்றால் அது பெருநெருப்பாக மாறிவிடும்.
  • கோபமும் அதிகாரக் குரலும் தற்காலிகத் தீா்வாகவே இருக்கும். ஆனால் உளவியல் ரீதியிலான சின்னச்சின்ன உரையாடல்கள் நாளடைவில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் நிரந்தரத் தீா்வாகவும் அமையும்.

நன்றி: தினமணி (23 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories