TNPSC Thervupettagam

உளைச்சல் இல்லா மனம் வேண்டும்!

May 6 , 2024 251 days 232 0
  • ‘‘காணி நிலம் வேண்டும்" என்று கேட்ட அந்த மகாகவி பாரதி, இன்று இருந்திருந்தால் "உளைச்சல் இல்லா மனம் வேண்டும்" என்று கேட்டிருப்பார்.
  • ஆம்! தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான நோய்களுக்கு மன உளைச்சலே காரணம் என்று மருத்துவர்களும், உளவியலாளர்களும் சொல்கிறார்கள்.
  • தொழில் முனைவோர் சிறப்பாகச் செயல்பட ஆரோக்கியமான உடல் நலம் அவசியம். ஆரோக்கியமான உடல் நலத்திற்கு அடிப்படை, உளைச்சல் இல்லாத மனம்தான்.

இது எப்படி சாத்தியப்படும்?

  • ஒரு உளவியல் பேராசிரியர், வகுப்பறையில் மாணவர்களிடம், தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு கண்ணாடி டம்ளரைக் காட்டி, "இதன் எடை 300 கிராம்... இதை உங்களால் எவ்வளவு நேரம் தூக்கி வைத்திருக்க முடியும்" என்று கேட்டார். ஒரு மாணவன், "நான் ஒரு நாள் முழுவதும் கூட, கையில் தூக்கி வைத்திருப்பேன்" என்றான். "முயற்சித்துப் பார்!" என்று கண்ணாடி டம்ளரை அந்த மாணவன் கையில் கொடுத்தார், பேராசிரியர்.
  • அவனும், கண்ணாடி டம்ளரைக் கையில் பிடிக்கத் தொடங்கினான். எடையை மட்டுமே கணக்கில்கொண்டு தான் எடுத்த முடிவு எவ்வளவு தவறானது என்பதை, அடுத்த 10 நிமிடங்களிலேயே உணரத் தொடங்கினான்.
  • எடை குறைவாக இருந்தாலும், அவனால் தொடர்ந்து அதைப் பிடித்துக் கொண்டே நிற்க முடியவில்லை. கை வலித்தது. நேரம் செல்லச் செல்ல ஒரே நிலையில் கையை வைத்திருந்த காரணத்தால், கை நமநமக்கத் தொடங்கியது. அரை மணி நேரத்திலேயே, தன் தோல்வியை ஒப்புக்கொண்டு அமர்ந்து விட்டான்.
  • சிரித்துக் கொண்டே பேராசிரியர் சொன்னார்... "கண்ணாடி டம்ளரை சுமப்பதிலேயே இவ்வளவு சிரமங்கள் இருக்கிறது என்றால், நாம் இதைப் போல் நாள்தோறும், பலவிதமான கசடுகளை, வெறுப்புகளை, கவலைகளை மனதில் சுமந்துகொண்டே இருக்கிறோம். இவை அனைத்தையும், எப்போதாவது ஒருமுறை நாம் நினைக்க நேர்ந்தால் மனதுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. அவற்றையே தொடர்ந்து எண்ணி, சுமந்து கொண்டே இருந்தால், கை வலிப்பது போல மனதும் வலிக்கத் தொடங்கிவிடும். எனவே வெறுப்பையும், கவலையையும் மனதில் சுமந்து கொண்டே இருக்காதீர்கள். அதற்கான தீர்வை உடனே கண்டு பிடித்து விடுங்கள். அல்லது மனதை பாசிட்டிவாக சிந்திக்கப் பழக்குங்கள்" என்றார்.
  • நம்மைச் சுற்றி நடக்கும் புற நிகழ்வை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் அதை நாம் எடுத்துக் கொள்கிற விதத்தை மாற்றிக் கொள்ள முடியும். ஆம்! பிரச்சினைகளைக் கண்டு அழுது புலம்பி மன உளைச்சலை ஏற்படுத்திக் கொள்ளப் போகிறீர்களா அல்லது ஒரு புன்னகையோடு அதைக் கடந்துசெல்லப் போகிறீர்களா ? என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories