TNPSC Thervupettagam

உள்ளாட்சிகளும் அரசுகள் தானே?

June 4 , 2024 221 days 193 0
  • அண்மையில் ஹைதராபாத்தில் அறிவார்ந்தவர்கள் கூடிய ஒரு சிறு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், சில ஓய்வுபெற்ற மத்திய அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். அரசமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் புதிய உள்ளாட்சி அமைப்புகள் அரசாங்கமாகப் பிரகடனம் செய்யப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவை இன்றைக்கு அரசாங்கம்போல் செயல்படுகின்றனவா என்பது குறித்து அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டேன்.
  • அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர் கேரளத்தில் உள்ளாட்சியை வலுவாக்கி, இந்தியாவுக்கே வழிகாட்டும் சூழலுக்குக் கொண்டுவர நீண்ட நாள் உள்ளாட்சிச் செயலராகப் பணியாற்றியவர். மற்றொருவர், அவருக்கும் மூத்தவர்.
  • அவர் இந்த 73ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை 1992இல் நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்ய பிரதமர் அலுவலகத்தில் - அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் இணைச் செயலாளராகப் பணியாற்றி - தயாரித்துத் தந்தவர்.
  • புதிய உள்ளாட்சி அரசாங்கத்தை வலுப்படுத்தப் பணியாற்றும் பொதுக் கருத்தாளர்கள் அனைவருக்கும் இவர்களைத் தெரியாமல் இருக்காது. பணி ஓய்வுக்குப் பின்னர் உள்ளாட்சியை வலுப்படுத்த இந்தியா முழுவதும் பயணம் செய்யும் முக்கியமான ஆளுமைகள் இவர்கள்.
  • மக்களாட்சியை வலுப்படுத்துவதற்கும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் உதவும் அமைப்பு உள்ளாட்சிதான் என்கிற ஆழ்ந்த நம்பிக்கையுடன் செயல்பட்டவர்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்களிடம் அந்தக் கேள்விகளை முன்வைத்தேன்.

கேள்விகள்: என் முதல் கேள்வி:

  • இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி உள்ளாட்சியை மூன்றாவது அரசாங்கமாக உருவாக்கியது மத்திய அரசு மட்டுமல்ல; மாநில அரசுகளும்தான். இதற்குப் பிறகும் உள்ளாட்சி என்பது மாநிலப் பட்டியலில் இருக்கிறது என்று வலிந்து விவாதிப்பது, உள்ளாட்சியை மாநில அரசாங்கத்தின் முகவராக்க முயல்வதுதானே? உள்ளாட்சி என்பது ஓர் அரசாங்கம்தான் என்று உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
  • இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்த அப்போதைய பிரதமரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான நரசிம்ம ராவ், உள்ளாட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதம் மூலம் இதையே உறுதிப்படுத்தியுள்ளார்.
  • அப்படியிருந்தும் மாநில அரசுகள் தொடர்ந்து உள்ளாட்சியை வலுப்படுத்துவதற்குப் பதிலாக வலுவிழக்கச் செய்யும் சூழலைத்தான் உருவாக்கி வருகின்றன. உள்ளாட்சிகளுக்குக் குறித்த நேரத்தில் முறையாகத் தேர்தல் நடத்த மாநிலத் தேர்தல் ஆணையத்துடன் மாநில அரசுகள் ஒத்துழைப்பதில்லை.
  • தேர்தல் நடத்துவதற்கே உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று ஆணை வாங்கிவந்து, உள்ளாட்சிக்கான தேர்தலை நடத்த வேண்டியுள்ளதே? அடுத்து, மாநிலத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையம் உருவாக்கி, அதனிடமிருந்து அறிக்கை பெற்று, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநில அரசும் உள்ளாட்சி அரசாங்கங்களும் அவற்றைச் செயல்படுத்த வேண்டும்.
  • இன்றுவரை பல மாநிலங்கள் இதைச் செய்வதில்லையே? இது அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பது ஆகாதா? 15ஆவது மத்திய நிதிக்குழு, மாநில நிதிக்குழு அமைக்காத மாநிலங்களுக்கு நிதியைப் பெறக் கட்டுப்பாடுகள் விதித்தவுடன்தான் ஒருசில மாநிலங்கள் மாநில நிதி ஆணையத்தையே உருவாக்குகின்றன. மேற்கூறிய விவாதங்கள் கூறும் செய்தி என்ன?

இரண்டாவது கேள்வி:

  • இன்றைக்கு மூன்று அரசாங்கங்கள் உள்ளன. ஒன்று - மத்திய அரசு, இரண்டாவது - மாநில அரசு, மூன்றாவது - உள்ளாட்சி அரசு. ஒன்றிய அரசுக்குத் தனிப் பட்டியல், மாநில அரசுக்கு மாநிலப் பட்டியல், இரண்டும் சேர்த்து ஒத்திசைவுப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சிக்கு எங்கே பட்டியல்? பட்டியலுக்குப் பதிலாக 11ஆவது அட்டவணை, 12வது அட்டவணை என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய / மாநில அரசுகள்போல் உள்ளாட்சிக்கான பட்டியல் ஏன் கொண்டுவரப்படவில்லை?

மூன்றாவது கேள்வி:

  • உள்ளாட்சிகளும் ஓர் அரசாங்கமே என்று உறுதியாகக் கூறும் நிலையில், மத்திய நிதிக் குழுவின் நிதிப் பங்கீட்டில் மத்திய / மாநில அரசுகளுக்குக் கொடுப்பதுபோல் உள்ளாட்சிக்கும் ஏன் பங்காகக் கொடுப்பதில்லை? மாறாக, மானியமாகக் (Grant) கொடுக்கிறார்கள். மேல்நிலை அரசாங்கங்கள் மத்திய நிதிக் குழுவின் மூலம் நிதியை உரிமையோடு பங்கீடு செய்துகொள்கின்றன.
  • மத்திய நிதிக் குழுதான் 10ஆவது மத்திய நிதிக் குழுவிலிருந்து 15வது நிதிக் குழு வரையில் அதிக நிதியை, உள்ளாட்சியை வலுப்படுத்தப் பரிந்துரை செய்து, அதன் அடிப்படையில் உள்ளாட்சிகளுக்கு அதிக நிதியைத் தந்துள்ளது. இருந்தபோதும் அதை ஒரு கொடையாக அல்லது மானியமாக அல்லாமல் உள்ளாட்சியின் பங்காக மற்ற அரசுகள்போல் ஏன் உள்ளாட்சிக்கும் செய்யக் கூடாது?

நான்காவது கேள்வி:

  • ஜிஎஸ்டி வரியில் மத்திய அரசும் மாநில அரசுகளும் பங்கு போட்டுக்கொள்கின்றன. 58:42 என்ற அடிப்படையில் நிதி பிரிக்கப்படுகிறது. இந்த ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தும்போது உள்ளாட்சிக்கான பல வரி இனங்கள் உள்ளாட்சியிலிருந்து எடுக்கப்பட்டு, ஜிஎஸ்டிக்குள் கொண்டுசெல்லப்பட்டுவிட்டது என்பதை நிதி ஆயோக் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
  • அப்படி இருக்கும்போது, ஜிஎஸ்டியில் ஏன் உள்ளாட்சிக்குப் பங்கு தரவில்லை? இதை ஏன் பொது விவாதத்துக்குக் கொண்டுவரவில்லை? உள்ளாட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் உள்ளாட்சி ஆர்வலர்களும் இது குறித்துக் கேட்கவில்லை. ஊடகங்களும் விவாதிக்க மறுக்கின்றன. இவற்றுக்கெல்லாம் யாரிடம் விளக்கம் கேட்டுப்பெறுவது?

தீர்வு கிடைப்பது எப்போது?

  • இந்தக் கேள்விகளை நான் முன்வைத்தபோது, “உள்ளாட்சியை நிலைத்தவையாகக் கொண்டுவரவே 30 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. 73ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டுவரும்போது, அதில் பல பலவீனங்கள் இருந்ததை அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவும் உணர்ந்திருந்தார்.
  • அந்தக் குறைகளைச் சுட்டிக்காட்டியபோது, ‘73 முறை நம் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. இன்னொரு முறை, ஏன் திருத்த முடியாது? வருங்காலத்தில் செய்துகொள்ளலாம்’ என்று எங்களிடம் கூறினார்” என்று இந்திய ஆட்சிப்பணி முன்னாள் அதிகாரி பதிலளித்தார்.
  • மேலும், என் கேள்விகள் நியாயமானவை என ஒப்புக்கொண்ட இருவரும், இந்தக் கோரிக்கைகளை வேறு ஓர் இடத்துக்குக் கொண்டுசென்றால் நீதி கிடைக்கும் என்றனர். உச்ச நீதிமன்றத்தில் அரசமைப்புச் சட்ட அமர்வுக்குப் பொதுநல வழக்காக யாராவது எடுத்துச் சென்றால், நிச்சயம் இதற்கான விளக்கம் கிடைக்க வாய்ப்புண்டு. அதுவரை நம் உள்ளாட்சிகளைத் தள்ளாட வைத்துத்தான் பார்ப்பார்கள்.
  • இத்துடன் தொடர்புடைய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதிகாரப் பரவல் என்பது மாநில அரசிடமிருந்து உள்ளாட்சிக்குத் தருவது மட்டும் அல்ல. மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கும், மாநில அரசுகளிடமிருந்து உள்ளாட்சிகளுக்கும் அதிகாரங்கள் செல்ல வேண்டும். அதுதான் உண்மையான அதிகாரப் பரவல். ஜிஎஸ்டி என்பது மாநில அரசை உள்ளாட்சிபோல் ஆக்கிவிட்டது.
  • இதைத் துணிவாக எதிர்த்துக் குரல் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாதான். அவர் அதற்காகத் தயார் செய்து டெல்லியில் ஆற்றிய உரை (அவருக்குப் பதிலாக மற்றொருவர் வாசித்தார்) என்றும் நினைவுகூரத்தக்கது. எனவே, இதனையும் சேர்த்தே உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு உற்று நோக்குமேயானால், இன்றுள்ள பல ஆளுகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இதுதான் கீழ்நிலை அரசாங்கங்களை வலுவாக்க நடைபெறும் அடுத்த கட்ட நகர்வாக அமைய வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories