TNPSC Thervupettagam

உள்ளூர்த் தயாரிப்புகளை ஆதரிக்க வேண்டிய நேரமிது

October 29 , 2021 1003 days 588 0
  • பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்திய ‘மனதின் குரல்’ உரையில், தீபாவளி உள்ளிட்ட விழா நாட்களையொட்டி உள்ளூர்த் தயாரிப்புகளை வாங்கி கைவினைஞர்களையும் நெசவாளர்களையும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
  • அரசியல் கொள்கை வேறுபாடுகளைத் தாண்டி, இந்தியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய அறிவுரை இது.
  • கரோனா பெருந்தொற்றின் காரணமாக உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடி உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
  • சுதந்திரப் போராட்டக் காலத்தில் வங்கப் பிரிவினையின்போது உருவான சுதேசி இயக்கத்தைப் போல மீண்டும் ஒரு சுதேசி இயக்கத்தைக் கையிலெடுக்க வேண்டிய கால நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறோம். அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, உள்ளூர்த் தயாரிப்புகளை ஆதரிப்பதும் அமையட்டும்.
  • தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகியவற்றின் வருகைக்குப் பிறகு, நவீனத் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய மின்சாதனங்கள் பலவற்றையும் குறைவான விலையில் வாங்கக்கூடிய சூழலைப் பெற்றிருக்கிறோம். கட்டற்ற சந்தை அமைப்பால் கிடைத்திருக்கும் வாய்ப்பு அது.
  • உலகின் எங்கோ ஒரு மூலையில் உற்பத்தியாகும் பொருட்கள் நம்முடைய தினசரி புழங்கு பொருட்களாகி விட்டன.
  • இன்னொரு பக்கம், இந்தியாவின் உற்பத்தித் தொழில்துறையின் முதலீட்டுப் பற்றாக்குறைகள் அந்நிய நேரடி முதலீடுகளாலேயே ஈடுகட்டப்பட்டுவருகின்றன. இந்திய முதலீடு என்பதைக் காட்டிலும், இந்தியத் தயாரிப்பு என்பதற்கே நாம் பெரும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.
  • இந்நிலையில், பெருந்தொற்றின் பொருளாதாரப் பாதிப்புகள், தற்சார்பு நிலையை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.
  • காலம்காலமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டுவரும் சமயம் சார்ந்த விழாக்கள் அனைத்துமே உள்ளூர் அளவில் கைவினைக் கலைஞர்களிடம் பண்டமாற்றுகளையும் பரிவர்த்தனைகளையும் செய்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. எந்தவொரு விழாவிலும் அவர்களே முதன்மை நிலையை வகித்தார்கள்.
  • நவீன வாழ்க்கையின் அதிவேகப் போக்கு, அந்த மரபான வழக்கங்களில் சில இடைவெளிகளை உருவாக்கிவிட்டது. உணவு, உடை என எதிலும் தன்விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கிவிட்டோம்.
  • பொது முடக்கத்திலும் பகுதி முடக்கத்திலுமாகக் கடந்து வந்த ஒன்றரை ஆண்டு, தன்விருப்பங்களைக் காட்டிலும் உள்ளூர் அளவிலான பொருளியல் தற்சார்பு நிலையின் முக்கியத்துவத்தைப் புரியவைத்திருக்கிறது.
  • கடந்த ஜூலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துறைசார் ஆய்வுக்கூட்டம் ஒன்றில், அரசு ஊழியர்கள் வாரம் இரு நாட்கள் கைத்தறி அணிவதற்கான நடைமுறைகளை உருவாக்குமாறு அறிவுறுத்தினார்.
  • இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை. அதே கூட்டத்தில், சந்தையில் தரமான பனைவெல்லம் கிடைக்கும் வகையில் மாவட்டம்தோறும் பொதுப் பயன்பாட்டு மையங்களை நிறுவிடவும் அறிவுறுத்தினார்.
  • தற்போது ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பதற்கு அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோரை ஆதரிப்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, அனைவரது கடமையும்கூட.
  • இந்தியப் பிரதமரும் அதைத்தான் தனது உரையில் வலியுறுத்தியிருக்கிறார்.

நன்றி: இந்து தமிழ் திசை (29 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories