TNPSC Thervupettagam

உழவுத் தொழில் படும் காயங்கள்

February 26 , 2025 6 hrs 0 min 19 0

உழவுத் தொழில் படும் காயங்கள்

  • ஒவ்வொரு சூரிய உதயத்தின்போதும் அல்லது வானம் கறுத்த பொழுதுகளிலும் அவர்கள் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதோ மனித வாழ்வு முடியப்போகிறது என்று அச்சுறுத்தல் நிலவிய கோவிட் நோய்த்தொற்று பரவிய காலத்திலும் வெட்டவெளிகளில் அவர்கள் உழைத்துக்கொண்டிருந்தார்கள்.
  • 2020 மே மாதத்தின் 25 நாள்களில் 91 லட்சம் தொழிலாளர்கள் ஆரல் மீன் புரளும் வயல்கள் நிறைந்த சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பினர். 1,000 ஆண்டுகளுக்கு முன் குஷானர்களின் சிற்பங்களில் பதிவுசெய்யப்பட்ட ஏரும் உழவனும் இப்போதும் வாழ்கின்றனர். ஆனால், அவர்களின் உழைப்பும் விளைச்சலும்தான் இப்போது சிறுமையையும் அவமானத்தையும் சந்திக்கின்றன. ஏன் இந்த நிலை?

அரிசி என்னும் அமிழ்தம்:

  • 1974வாக்கில் 60 கிலோ எடையுள்ள மூன்று நெல் மூட்டைகளை விற்றால் ஒரு பவுன் தங்கம் வாங்க முடிந்தது (அதற்கு முன்னோ இன்னும் மலிவு). இப்போது அதே நகையை வாங்க ஒரு விவசாயி ஏறக்குறைய 80 மூட்டை நெல்லை விற்க வேண்டும். அப்போது வளத்தின் குறியீடே நெல்தான். ‘நெல் பல பொலிக’, ‘பொன் பெரிது சிறக்க’ என்ற வாழ்த்​தொலிகள் கேட்டன.
  • அறுவடையான நெற்க​திர்கள் தங்கத்தால் செய்யப்பட்ட கதிருக்குச் சமம் என்று கம்பர் போற்றி​னார். உழவர்​களின் பொருளைப் பெற அவர்கள் முன்னால் நாட்டின் அரசர்கள் நின்றனர். உழவடையான பொதிகளைக் கொண்டுதான் மன்னர்​களின் கோட்டைகள் நிலைத்தன. இதனால்தான் உழவுச் சிறப்புடன் ‘உழவர் குடியைப் பாதுகாத்தால் பகைவர் நினக்கு அடிபணிவர்’ என உழவர்கள் கொண்டாடப்​பட்​டனர்.
  • செந்நெல், வெண்நெல், மூங்கில் நெல் எனச் சங்க இலக்கி​யங்​களில் 102 இடங்களில் நெல் மொழியப்​பட்​டிருக்​கிறது. நெல்லின் பெருமை உலகையே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்​கிறது. 140 நாடுகளுக்கு இந்தியா அரிசி ஏற்றுமதி செய்கிறது. உலகின் மக்கள்தொகை 806 கோடி என்றால், அதில் ஏறக்குறைய 300 கோடி பேரின் தலையாய உணவு அரிசி​தான். ஏற்றும​திக்குத் தடை விதித்தால் அமெரிக்கா தொடங்கி ஆப்ரிக்கா, துருக்கி, ஐரோப்பா வரை நெருக்கடி ஏற்படு​கிறது.

உழலும் உழவர்கள்:

  • உரலுக்கு ஒரு பக்கம் என்றால், மத்தளத்​துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல உழவர்கள் பல்வேறு இன்னல்​களைச் சந்திக்​கின்​றனர். குறைந்தபட்ச விலை நிர்ண​யத்தில் தன் வாக்குறு​திப்படி எம்.எஸ்​.சு​வாமி​நாதன் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு நடைமுறைப்​படுத்​தவில்லை. வேளாண்​மையைச் சந்தைப்​படுத்​துதல் குறித்த தேசியக் கொள்கைக் கட்டமைப்பு (National Policy Framework) என்கிற திட்டத்தைச் சட்டமாக்கவே அரசு முயல்​கிறது. இது, விவசா​யிகளின் போராட்​டத்தால் திரும்பப் பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்​களின் வேறு வடிவம் என்றே பார்க்​கப்​படு​கிறது. வேளாண்​மையில் தமிழகத்​துக்கு இரண்டு முகங்கள் உள்ளன.
  • நெல் கொள்முதல் விலையை நிர்ண​யிப்​பதில் தேர்தல் உறுதி​மொழியை திமுக அரசு காப்பாற்​ற​வில்லை. தேர்தல் முடிந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. குவிண்​டாலுக்கு ரூ.2,500 என்ற விலையை 2025 செப்டம்பர் முதல் வழங்கப்​போவ​தாகத் தமிழக அரசு அறிவித்​திருக்​கிறது.
  • நெல் கொள்முதலில் முந்தைய திமுக அரசின் பெருமிதமான தமிழ்நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகம் என்பதற்குப் பதிலாக, இப்போது மத்திய அரசின் ஆதரவு​பெற்ற தேசிய நுகர்வோர் கூட்டுறவு நிலையம் என்கிற தனியார் அமைப்பை அரசு ஈடுபடுத்து​கிறது. காவிரிப்​படுகை மாவட்​டங்​களைத் தவிர இதர, மாவட்​டங்​களில் இதுவே நிலை.

கோட்டை​விட்ட தமிழக அரசு:

  • மறுபுறம் இயற்கை, செயற்கைப் பேரிடர்​களுக்கு மத்தியில் தமிழக உழவர்கள் சாதனைகளை நிகழ்த்து​கின்​றனர். 2024-2025 சாகுபடிக்கு மேட்டூரில் தண்ணீர் திறப்பது ஜூன் 12க்குப் பதில் ஜூலை 28 என்று தள்ளிப்​போனது. குறுவை சாகுபடி குறைந்தது. சம்பா, தாளடி இலக்கு 3,42,000 ஏக்கர். தண்ணீர் போதாமையால் சாகுபடி நடந்தது 3,25,000 ஏக்கர் மட்டுமே. இதிலும் வடகிழக்குப் பருவமழையால் 32,190 ஏக்கர் சாகுபடி நாசமானது. இந்தக் கட்டமைப்​புக்​குள்தான் தமிழக உழவர்கள் சாதனை படைத்​தனர்.
  • 2023–2024இல் சாகுபடிப் பருவத்தில் 7.02.2024 வரை 8,47,692 டன் கொள்முதலானது. இதே அவகாசத்​தில், நடப்பு ஆண்டு சாகுபடியில் 3,50,321 டன் கூடுதலாக 11,98,043 டன் நெல் கொள்முதல் ஆகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, ரோபாட்​டிக்ஸ் என வேளாண்மை நவீனமா​னாலும் தமிழக உழவர்கள் சணல், சாக்கு, படுதா பிரச்சினையால் தெருவில் நிற்கின்​றனர். தேங்கி அழியும் நெல் மூட்டைகள் அரசின் அலட்சி​யத்தைப் படம்பிடித்​துக்​காட்டுகின்றன. திருவாரூர் மாவட்​டத்தில் சுமார் 25 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதலுக்​காகத் தேங்கிக்​கிடக்​கின்றன. தஞ்சை மாவட்​டத்​திலும் லட்சக்​கணக்கான நெல் மூட்டைகள் துயருடன் கண்துஞ்​சுகின்றன.
  • காவிரிப் படுகையின் 10 மாவட்​டங்கள் மட்டும் 80 சதவீதம் நெல்லைக் கொள்முதல் செய்கின்றன. இப்பகு​தியில் முன்த​யாரிப்புப் பணிகளில் தமிழக அரசு கோட்டை​விட்டது. காவிரிப் படுகையின் உழவர்கள் காலந்​தோறும் இயற்கைப் பேரிடர்களை எதிர்​கொள்​பவர்​கள்​தாம். நிஷா, ஜல், தானே, நீலம், மடி, வர்தா, ஒக்கி, கஜா, நிவர், மாண்டஸ், மிக்ஜாம், ஃபெஞ்சல் ஆகிய புயல்​களில் குளித்துத் தலை துவட்​டிய​வர்​கள்​தாம். பார்வையிட வந்த மத்தியக் குழுவோ விருந்துண்டு மொய் நிவாரணம் செய்யாமலே திரும்​பு​கிறது.
  • தமிழக உழவர்கள் சந்திக்கும் செயற்கைப் பேரிடர் நெல் கொள்முதலில் நிலவும் ஊழல். ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் இதனைக் கண்டித்​துள்ளது. ஆயினும், நோய் நாடி, நோய்முதல் நாடி அரசு இதற்குத் தீர்வு காணவில்லை. உதாரண​மாகக் கொள்முதல் நிலையங்​களில் கண்காணிப்பு கேமரா அமைப்​பதால் ஊழல் குறைய​லாம். அதுவே தீர்வு அல்ல. கேமரா லென்ஸுகளில் சிக்காமல் ஊழல் பரிவர்த்​தனைகள் நடக்கின்றன. ஒவ்வொரு நிலையத்​திலும் சுமை தூக்கும் தொழிலாளி, காவலாளி, உதவியாளர், பில் எழுதுபவர் எனப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுடைய பணி நிரந்​தர​மானது அல்ல.

கவனத்​துக்கு வராத முறைகேடுகள்:

  • வழங்கப்​படும் ஊதியமோ மூட்டை தூக்குபவருக்கு மூட்டைக்கு ரூ.10 ஆகும். அதிகபட்சச் சம்பளமாக பில் எழுதுவோர் ரூ.11,140 ஊதியம் பெறுகின்​றனர். பணி நிரந்​தர​மும், நியாயமான ஊதியமும் இல்லாமையால் அவர்கள் முறைகேட்டில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்​படு​கிறார்கள். ஊழலின் மற்றோர் ஊற்றுக்கண், கொள்முதலில் நெல்லை லோடு ஏற்றும் போக்கு​வரத்தில் நடக்கிறது.
  • சேமிப்புக் கிடங்கு​களுக்கோ, அரவை மில்களுக்கோ நெல்லைக் கொண்டு​செல்​வதில் லாரிகளின் மாமூல் தண்டம் அதிகமானது. தாமதமாக லோடைக் கொண்டு​செல்​வதால் காய்ச்​சலால் நெல் மூட்டைகள் எடை குறைவைச் சந்திக்​கின்றன. மூட்டைக்கு ரூ.40 என்கிற மாமூலுடன் எடை குறைவுக்காக மூட்டைக்கு இரண்டு கிலோ நெல்லையும் விவசாயி பறிகொடுக்​கிறார்.
  • மின்னணு முறை பணப் பட்டு​வா​டாவில் ரசீது வழங்கு​வதில் ஊழல் நடக்கிறது. சேமிக்கப் போதிய திறந்​தவெளிக் கிடங்கு​களும் இல்லை. அதேவேளை, சில தனியார் வியாபாரிகள் ஈரப்பதம் போன்ற நிபந்​தனைகள் ஏதுமின்றி நடமாடும் நெல் கொள்முதல் நிலையமாக இயங்கு​கின்​றனர்.
  • உடனே பணப் பட்டுவாடா நடக்கிறது. இதனை ஏன் அரசு செய்ய முடியாது? லோடு போக்கு​வரத்தில் கூடுதல் லாரிகளையும் சரக்கு ரயில்​களையும் அரசு பயன்படுத்த வேண்டும். மழையிலும் வெயிலிலும் நெல் மணிகள் உலர்ந்து, நனைந்து, சுருண்டு, நிறம் மாறுகின்றன. கண் முன்னே தம் உழைப்பும், வாழ்வா​தா​ரமும் நிலைகுலைவதை உழவன் கண்ணீர் மல்கப் பார்க்​கிறான். கண்ணீரைத் துடைக்கக் கரங்கள் நீளுமா?

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories