- மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள ‘இந்தியாவில் பெண்களும் ஆண்களும் 2022’ ஆய்வறிக்கை, இந்தியாவில் பணிக்குச் செல்லும் வயதில் உள்ளபெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதைக் கவனப்படுத்தியுள்ளது.
- தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு, தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் போன்றவற்றின் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை, ஆண்-பெண் பிறப்பு விகிதம், பெண் குழந்தை இறப்பு விகிதம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. பொருளாதாரத்தில் பங்களிப்பது பெண்களின் உரிமை மட்டுமல்ல, பாலினச் சமத்துவமும்கூட எனவும் இது குறிப்பிட்டுள்ளது.
- பெண்கள், குழந்தைகள்மீதான வன்முறை குறித்தும் இதில் கவனப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வயதுப் பெண்கள் மீதும் ஆண்களால் வன்முறை நிகழ்த்தப்பட்டாலும் குறிப்பாக 18–30 வயதுக்கு உள்பட்ட பெண்கள்மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை அதிகம். காரணம், இந்த வயதுக்கு உள்பட்டவர்கள்தான் ‘உழைப்பாளர்’ (Labour Force) என்கிற வரையறைக்குள் வருகிறார்கள்.
- இவர்கள் பணி நிமித்தம் பயணம் மேற்கொள்ளவோ பணியிடங்களிலும் வெளியூர்களிலும் தங்கவோ நேரிடுகிறது. பொது வெளியிலும் பணியிடங்களிலும் பாதுகாப்பற்ற இந்த நிலை அவர்களை எளிதாகப் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்குகிறது.
- இதுபோன்ற பாலியல் வன்முறைச் சம்பவங்கள் ‘வேலைக்குச் சென்று பொருளீட்டுவது’ என்கிற பெண்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது எனக் குறிப்பிடும் ஆய்வறிக்கை, பணியிடப் பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டங்களும் பெண்களுக்கான அவசர உதவி எண்களும் இருந்தபோதும் இதுபோன்ற குற்றங்களை அவை தடுத்துவிடவில்லை என்கிற அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளது.
- பாலியல் வன்முறைச் சம்பவங்கள், பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடுக்கும் முக்கியக் காரணியாக விளங்குவதால், இது குறித்த கூருணர்வை ஆண்கள் மத்தியில் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறுத்தியுள்ளது.
- பதிவுசெய்யப்பட்ட குற்றங்களைக் கணக்கில்வைத்து இது சொல்லப்பட்டாலும் பதிவுசெய்யப்படாத குற்றங்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்பதையும் கணித்துள்ளனர். குற்றவாளிகள் தண்டனைக்கு உட்படாத நிலை, குடும்பத்தினரின் அமைதி, சமூக அழுத்தம், இதுபோன்ற குற்றங்களை வெளியே சொல்வதில் இருக்கும் மனத்தடை, பாதிக்கப்படும் பெண்களின்மீது சுமத்தப்படும் களங்கம் போன்றவையே இந்தக் குற்றங்கள் அதிக எண்ணிக்கையில் நிகழக் காரணம். இதனால், பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பங்களிப்பது தடைபடுகிறது.
- பொதுவாகவே, குறிப்பிட்ட சில துறைகளும் இரவு நேரப் பணிகளும் பெண்களுக்கு உகந்தவை அல்ல எனக் கருதப்படும் சூழலில், பெண்கள்மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை பெண்களின் பணி வாழ்க்கையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பங்களிப்பதற்கு ஏற்ற வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதும், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் சரியான முறையில் அமலாக்கப்படுவதை உறுதிசெய்வதும், அனைத்துத் தரப்பிலும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அரசின் கடமை. இதுதான் பெண்களின் பொதுப் பங்களிப்பை அதிகரித்து, பாலினச் சமத்துவத்தை நிறுவுவதற்கான வழியாகவும் இருக்கும்.
நன்றி: தி இந்து (07 – 04 – 2023)