TNPSC Thervupettagam

உ.வே.சா.வையும் தமிழையும் பிரிக்க இயலாது

February 25 , 2024 183 days 179 0
  • தமிழுக்கு இன்று உலகளாவிய போற்றுதலைப் பெற்றுத்தருவது சங்க இலக்கியமாகும். காலப்பழைமையும் கருத்துச்செழுமையும் சங்க இலக்கியத்தில் காணலாகும். "சங்கம் தழைக்கும் மதுரை' என்றும் தமிழையே "சங்கத்தமிழ்' என்றும் புலவர்கள் மொழிந்துள்ளனர். அத்தகைய சங்க இலக்கியங்கள் காலங்காலமாக, குறிப்பாக ஐரோப்பியர் வருகைக்கு முன்பு வரை பனை ஓலைகளால் செய்யப்பட்ட சுவடிகளில் எழுதப்பட்டுத் தேய்ந்தும், சிதைந்தும், ஒருபுறம் ஒடிந்தும் கட்டுக்கட்டாகக் கிடந்தன. அந்த எழுத்துகளை இன்று படிப்பது எளிதல்ல.
  • ஒரு நூலுக்கே இருபதுக்கும் மேற்பட்ட சுவடிகள் இருக்கும். ஒவ்வொன்றும் தம்முள் வேறுபட்டு நிற்கும். அத்தகைய பனையோலை ஏடுகளைத் தேடித்தேடிக் கால்களும் கைகளும் சோர்ந்து விழக் கலங்கிப் புலம்பி இடர்ப்பட்டு இன்னலுற்று ஆண்டுக்கணக்கில் தேடிப் படித்து மூலபாடம் கண்டு அச்சில் வெளியிட்ட அளப்பரும் பெருமை தமிழ்ப் பெருங்கடல் உ.வே.சா. அவர்கட்கே உரியது. அப்படிக் கடினமாக உழைத்து வெளியிட்ட இலக்கியச்செல்வங்கள் நமது பண்பாட்டுப் பேழைகளாகும்.
  • " ஏடுதேடி அலைந்த ஊர் தான் எத்தனை, எழுதி ஆய்ந்த குறிப்புரை எத்தனை, பாடுபட்ட பதப்பொருள் எத்தனை, பல்நெறிக்கண் பொருள் துணிபு எத்தனை, கூடிவந்தவர்க்கு ஆற்றினை எத்தனை கோதில்லாச் சாமிநாதன் தமிழுக்கு' என்று தமிழறிஞர் மு. இராகவையங்கார் நெகிழ்ந்து பாடினார்.
  • தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகில் உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் 19.2.1855-இல் வேங்கடசுப்பையருக்கும் சரசுவதி அம்மையாருக்கும் உ.வே.சா. புதல்வராகப் பிறந்தார்.
  • செந்தமிழ்த் திலகமாய்த் திகழ்ந்த அவரின் நினைவு நீங்காது நிற்க அவர் பணியாற்றிய சென்னை மாநிலக் கல்லூரியில் 7.3.1948-ஆம் நாளன்று உ.வே.சா.வின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டது. தமிழறிஞர்க்கென்று நிறுவிய முதல் சிலை இதுவேயாகும். அதில் அவர் வாழ்நாளில் பெற்ற பாராட்டுகள் யாவும் குறிக்கப்பட்டதுடன், மகாகவி பாரதியார், உ.வே.சா.மீது பாடிய வாழ்த்துப் பாடலின் இறுதியில் இடம்பெற்றுள்ள,

பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்

காலமெலாம் புலவோர் வாயில்

துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்

இறப்பின்றித் துலங்குவாயே

  • என்ற வரிகளும் குறிக்கப்பட்டது.
  • உற்றாரும் உறவினரும் இளஞ்சிறுவனான சாமிநாதனை வடமொழி கற்கச் சொன்னார்கள். தந்தையார் இசையறிவு மிக்கவர். ஓவியம் வரைவதோடு சித்திரக் கவிதைகளுக்கு, தானே படம் வரையும் திறமோடு திகழ்ந்தவர் உ.வே.சா. அவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்க விரும்பினார். தந்தையார் உ.வே.சா.வை மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் விட, அவரிடம் பணிந்து பாடம் கற்றார் உ.வே.சா.
  • உ.வே.சா.வுக்கு ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் இட்ட பெயர்தான் சாமிநாதன். தந்தையார் சூட்டிய பெயர் வேங்கடராமன். ஆனால், ஆசிரியர் அழைத்த பெயரே அவருக்குத் தமிழுலகில் நிலைத்துவிட்டது.
  • தனது ஆசிரியரான மகாவித்துவானின் வாழ்க்கை வரலாற்றை "மீனாட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரம்' என்ற பெயரில் எழுதினார் உ.வே.சா. அதன் முதல் தொகுதியை 1938-லும், இரண்டாம் தொகுதியை 1940-லும் வெளியிட்டார்.
  • அச்சரித்திரத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையைக் குறிப்பிடுமிடத்திலெல்லாம் "இவர்' என்றோ "ஆசிரியப்பிரான்' என்றோதான் உ.வே.சா. குறிப்பிட்டார். ஓரிடத்தில்கூடத் தம் ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடவில்லை. தவிர்க்கவே முடியாமல் ஒரு நிகழ்வில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று ஆசிரியர் பெயரைக் குறிப்பிட்டு, அடிக்குறிப்பாக "ஆசிரியப்பிரானை இவ்வாறு பெயர் குறித்தெழுத அஞ்சுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இஃது அவர் தனது ஆசிரியர் மீது கொண்டிருந்த கரைகாணாக் காதலால் கசிந்துருகும் தன்மையைக் காட்டுகிறது.
  • ஒரு சமயம், பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், உ.வே.சா. எழுதிய ஒரு நூலைப் பெறவேண்டி ஐயரை அணுகினார். அப்போது ஐயர் தம்மிடம் இரண்டு படிகளே உள்ளன என்றும் அவை இரண்டுமே அந்நூலை மறுபடியும் பதிப்பிக்கத் தேவைப்படுகின்றன என்றும் கூறிவிட்டார். தெ.பொ.மீ. ஏமாற்றத்தோடு திரும்ப, ஐயர் அவரின் பெயரைக் கேட்க, மீனாட்சிசுந்தரம் என்று தெ.பொ.மீ. கூற, ஐயர் "என் குருநாதர் பெயரை வைத்திருக்கிறீர்... சற்று பொறும்' என்று கூறிவிட்டு அந்நூலின் ஒரு படியை எடுத்துவந்து அவருக்குக் கொடுத்தார். இந்நிகழ்வை "சேக்கிழார் அடிப்பொடி' தி.ந. இராமச்சந்திரன் என் தந்தையாரிடம் குறிப்பிட, அதை என் தந்தையார் ஆசிரியர் நாள் விழா மேடைகளில் தவறாது குறிப்பிட்டுவந்தார்.
  • மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்று, கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் சி. தியாகராச செட்டியார். இவரின் உதவியால் உ.வே.சா. கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணி ஏற்றார். அன்றிலிருந்து அவருக்கு பொருட்கவலையற்ற வாழ்க்கை உருவானது. நன்றி மறவாத உ.வே.சா. தம் இல்லத்துக்குத் "தியாகராசர் விலாசம் ' எனப் பெயரிட்டார்.
  • உ.வே.சா., பத்துப்பாட்டு, எட்டுத்தொகையில் ஐந்து நூல்கள், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழந்தமிழ் நூல்களையும் பல்வகை சிற்றிலக்கியங்களையும் பதிப்பித்தார். தாம் பதிப்பித்த ஒவ்வொரு நூலிலும் தம் புலமை மாட்சியை முன்னுரையில் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார்.
  • பத்துப்பாட்டு வரிசையில் குறிஞ்சிப்பாட்டு நூலில் காணும் 99 மலர்கள் குறித்து வரும் வரிகளில் மூன்று தொடர்கள் ஏட்டில் காணாது உ.வே.சா. பெரிதும் இடர்ப்பட்டார். அவ்வரிகள் இடம்பெற்ற ஏடு கிடைக்காதா என்று பல ஊர்களிலும் தேடியலைந்தார். முடிவில் தருமபுர ஆதீனத்தில் அதனைக் கண்டுபிடித்தார். ஏடு கண்ட பின்னர்தான் குறிஞ்சிப்பாட்டின் 99 மலர்கள் வரிசை நிறைவுபெற்றது.
  • புறநானூற்றுக்கு பழைய உரையைக் கண்டு வெளியிட்ட உ.வே.சா.வின் பெரும்புலமை வியத்தற்குரியது. புறநானூற்றில் பொதிந்த பொருள்நயத்தை 57 வரிகளில் அடுக்கிக்காட்டியதற்கு நிகரில்லை. குறுந்தொகைக்கு நூறு பக்கத்தில் ஐயர் ஆராய்ச்சி முன்னுரை எழுதியிருப்பது அப்பதிப்பிற்கு அணிகலனாகத் திகழ்கிறது.
  • ஐயர் பதிப்பு நூல்களில் காணப்பெறும் முகவுரை, மூலப்படிகளின் நிலை, சொற்பொருள் விளக்கம், மேற்கோள் விளக்கம், சொற்பொருள் விவரம், அரும்பொருள் அகராதி, கிடைத்த படிகளின் நிரல்முறை, அச்சிட உதவியோர் விவரம் இவையெல்லாம், ஐயர் பதிப்பு ஆய்வுப்பதிப்போடு அறிவு ததும்பும் பதிப்புமாகும்.
  • உ.வே.சா. சிலப்பதிகாரத்தை 1889-ஆம் ஆண்டு வெளியிட்டார். அவ்வாறே மணிமேகலையை 1898-இல் வெளியிட்டார். இவர் சைவ சமயச் சார்புடையவர் எனினும், சமண நூலான சீவகசிந்தாமணியையும், பெüத்த நூலான மணிமேகலையையும் பதிப்பித்தார். அவற்றைச் செம்மையாகப் பதிப்பிக்க, அந்நூல்களில் இடம்பெற்றுள்ள சமய நுண்கருத்துகளை அறிந்தோரைத் தேடி வினவி ஆழமாக உணர்ந்து தேர்ந்தார்.
  • புராணம், பரணி, அந்தாதி, உலா, கோவை, தூது முதலான இலக்கிய நூல்களையும் இலக்கண நூல்களையும் பதிப்பித்தார் உ.வே.சா. 1935-ஆம் ஆண்டு, டாக்டர் உ.வே. சா.வுக்கு எண்பது வயது நிறைவுற்றது. அதனால் அவரின் சதாபிஷேக விழா, சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்குத் தலைமை வகித்தவர் சர் முகமது உஸ்மான் என்ற இசுலாமிய பெருந்தகையாவர்.
  • தன் இளமைக்காலம் தொட்டே, ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து வாழ்ந்தவர் ஐயர். அவருடைய ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே இனம் தமிழ்தான். அந்த விழாவில் தான், எழுத்தாளர் "கல்கி' கிருஷ்ணமூர்த்தி, "தமிழ்த் தாத்தா' என, உ.வே. சாமிநாத ஐயரை அழைத்தார். "தமிழுக்குப் பாட்டியாக ஒüவையார் இருப்பது போல், தமிழுக்குத் தாத்தா உ.வே.சா. இருக்கிறார்' என்றார்.
  • உ.வே.சா. குறுந்தொகைக்கு உரையெழுதிய பொழுது அவருக்கு வயது எண்பத்திரண்டு. 1878-ஆம் ஆண்டில் தொடங்கிய அவரின் இலக்கியப் பணி 1942 வரை வளர்ந்தது.
  • டாக்டர் உ.வே.சா. அவர்கள் எந்த நிலையிலும் தம் உள்ளம் உருகி எண்ணித் துதிக்கும் பாடல் வரிகள் "தமிழ்விடு தூது' நூலில் இடம்பெற்றுள்ள "இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்' என்ற வரிகளாகும். அவர் தமது தளர்ந்த முதுமையிலும் மேடையில் மெல்ல எழுந்து நின்று, இவ்வரிகளைப் பாடிவிட்டே உரையாற்றத் தொடங்குவார் என்பர்.
  • இவ்வரிகளைப் பாடிக்கொண்டே இருந்தது மட்டுமல்ல, இதன் பொருளையே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு இறுதி மூச்சு வரை வாழ்ந்தார் உ.வே.சா. அண்ணல் காந்தியடிகளும் வங்கக் கவியரசர் தாகூரும் உ.வே.சா.வின் திறனைக் கண்டு வியந்து, அகத்தியனே இவரெனப் போற்றிப் பாராட்டினர். ஒல்லும் வகையெல்லாம் தமிழுக்கு ஓயாது உழைத்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர், 28.4.1942-இல் தனது எண்பத்தேழாம் அகவையில் திருக்கழுக்குன்றத்தில் இவ்வுலக வாழ்வினின்றும் ஓய்வு பெற்றார்.
  • உ.வே.சா.வையும் தமிழையும் பிரித்துப் பார்ப்பதென்பது இயலாது.
  • (பிப்.19) டாக்டர் உ.வே.சா.பிறந்தநாள்.

நன்றி: தினமணி (25 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories