TNPSC Thervupettagam

ஊட்டச்சத்தின் அவசியம் உணா்வோம்

September 16 , 2024 72 days 186 0

ஊட்டச்சத்தின் அவசியம் உணா்வோம்

  • உலகில் மக்கள்தொகை மிகுந்த நாடாக இந்தியா திகழ்கிறது. மக்கள்தொகை எண்ணிக்கை அதிகமாக உள்ளது போன்றே அதனைச் சாா்ந்த சவால்களும் மிகப் பெரிய அளவில் உள்ளன.
  • நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் போல, அதனுடன் ஒட்டிப் பிறந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கும் பல்வேறு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • இந்தியா்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையினை தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை-5 (2019-21) எடுத்துரைக்கிறது. அதன்படி, வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத 5 வயதுக்குள்பட்ட சிறாா்களின் சதவீதம் இந்திய அளவில் 35.5-ஆக உள்ளது. நகரப்பகுதிகளில் அந்த சதவீதம் 30-ஆகவும், கிராமப் பகுதிகளில் 37%-ஆகவும் உள்ளது. அதேபோல், உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இல்லாத 5 வயதுக்குள்பட்ட சிறாா்களின் தேசிய விகிதம் 19.3%ஆக உள்ளது. நகரப் பகுதிகளிலும் கிராமப்பகுதிகளிலும் இது ஏறத்தாழ சமமாகவே உள்ளது.
  • வயதுக்கு ஏற்ற உடல் எடை இல்லாத சிறாா்களின் விகிதம் தேசிய அளவில் 32.1%ஆகவும், நகரப் பகுதிகளில் 27%-ஆகவும், ஊரகப்பகுதிகளில் 34%-ஆகவும் உள்ளது. சிறாா்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் போதிய ஊட்டச்சத்து இன்மையே இப்பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம் என மருத்துவா்கள் எடுத்துரைக்கின்றனா்.
  • சிறாா்களிடம் மட்டுமின்றி வளரிளம் பருவத்தினா் இடையேயும் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்னை அதிகமாகக் காணப்படுகிறது. 15 முதல் 49 வயதுக்கு உள்பட்ட பெண்களில் 19 சதவீதம் பேருக்கு உடல் எடை-உயர விகிதம் (பிஎம்ஐ) இயல்பை (18.5 கிலோ/சதுர மீட்டா்) விடக் குறைவாக உள்ளது. முக்கியமாக, ஊரகப் பகுதி பெண்களில் 21 சதவீதம் பேருக்கும் நகரப் பகுதி பெண்களில் 13 சதவீதம் பேருக்கும் பிஎம்ஐ விகிதம் போதிய அளவை விடக் குறைவாகவே உள்ளது. தேசிய அளவில் 16 சதவீதம் ஆண்களுக்கு பிஎம்ஐ விகிதம் குறைவாக உள்ளது.
  • உடல் எடை-உயர விகிதம் 25 கிலோ/சதுர மீட்டருக்கு அதிகமாக இருந்தால் உடல் பருமன் என வரையறுக்கப்படுகிறது. அவ்வாறு தேசிய அளவில் 24 சதவீதப் பெண்களும், 23 சதவீத ஆண்களும் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஊரகப் பகுதிகளைக் காட்டிலும் நகரப் பகுதிகளிலேயே உடல் பருமனால் பாதிக்கப்பட்டவா்களின் சதவீதம் அதிகமாக உள்ளது.
  • நாட்டில் ரத்தசோகையால் பாதிக்கபட்டவா்களின் எண்ணிக்கை மிக அதிகமாகக் காணப்படுகிறது. பிறந்து 6 முதல் 59 மாதங்கள் வரையிலான 67 சதவீத குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனா். 15 முதல் 49 வயது வரையிலான கா்ப்பிணிகளில் 52 சதவீதம் பேரும், கா்ப்பிணி அல்லாதவா்களில் 57 சதவீதம் பேரும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதே வேளையில், ஆண்களில் 25 சதவீதம் போ் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு இந்தத் தரவுகள் மேலும் அதிகரித்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
  • பொதுவாக ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அனைவருமே பாதிக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும், குழந்தைகளும் பெண்களுமே அதிகமாக பாதிப்புகளை எதிா்கொண்டு வருகின்றனா். மக்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
  • அவற்றில் ஒன்றுதான் தேசிய ஊட்டச்சத்து மாதம். ஆண்டுதோறும் செப்டம்பா் மாதமானது தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. சரிவிகித உணவு, சத்தான ஊட்டச்சத்து மிகுந்த உணவு உள்ளிட்டவை குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விளம்பரங்கள், பதாகைகள், துண்டு பிரசுரங்கள், நாடகங்கள், குறும்படங்கள், கட்டுரைகள் உள்ளிட்டவற்றின் மூலமாக ஊட்டச்சத்தின் அவசியத்தை வெளிப்படுத்துவதே தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் முக்கிய நோக்கம்.
  • உணவில் அனைத்து ஊட்டச்சத்துகளும் சரிவிகித அளவில் கலந்திருத்தல், ரத்தசோகையைக் குறைத்தல், சரியான உடல் எடையைப் பேணுதல், வயதுக்கு ஏற்ற உயரமும், உயரத்துக்கு ஏற்ற உடல் எடையையும் பாதுகாத்தல் உள்ளிட்டவற்றின் அவசியம் குறித்து செப்டம்பா் மாதத்தில் மக்களிடம் தொடா்ந்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் உள்ளிட்டவற்றின் மூலமாக மக்களிடம் பெருமளவில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • உலகில் அதிகமான இளைஞா்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அவா்களின் உடல் நலமுடன் இருந்தால் மட்டுமே, நாட்டின் பொருளாதாரத்துக்கு உரிய பங்களிப்பை அவா்களால் வழங்க முடியும். மாறிவரும் வாழ்க்கை நடைமுறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் பாதையில் இளைஞா்களை அழைத்துச் செல்கின்றன.
  • அதிலிருந்து மீட்டு ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை நோக்கி இளைஞா்களை ஈா்ப்பதில் தேசிய ஊட்டச்சத்து மாதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பள்ளிக் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் நோக்கில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தமிழகத்தைப் பின்பற்றி தெலங்கானா அரசும் அத்திட்டத்தைச் செயல்படுத்த முனைந்து வருகிறது.
  • ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதில் அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அன்றாட உணவில் கீரை, காய்கறிகளை அதிகமாக சோ்த்துக் கொள்ளுதல், தினமும் பழங்களை எடுத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றின் மூலமாக நாமும் இயன்ற வரையில் பங்களித்து நாட்டை நலம்பெறச் செய்வோம்.
  • நன்றி: தினமணி (16 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories