TNPSC Thervupettagam

ஊதிய இடைவெளி - தமிழ்நாட்டின் பாலின முரண்பாடு

August 14 , 2023 340 days 270 0
  • பொருளாதாரத்தில் பெண்களின் பங்கேற்பைப் பார்க்கும்போது தமிழ்நாடு குறித்த முரணான ஒரு சித்திரமே கிடைக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் பாதையில் பயணித்ததன் பலனாகக் கல்வி, வேலைப் பங்கேற்பு ஆகிய பொருளாதார அடிப்படை அளவுகோல்களில் தமிழ்நாட்டுப் பெண்கள் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட நிலையில் இருப்பது உண்மை.
  • அதே நேரம், உயர் கல்வியில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகள், தொழிலாளர் படையில் பெண்களை உள்ளடக்கியிருப்பது ஆகியவற்றுடன் தமிழ்நாட்டில் பெரும் ஊதிய இடைவெளி, முறைசாராத தன்மை, பணியிடங்களில் வேலைப் பாகுபாடு ஆகியவையும் நிகழ்ந்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. சாதி சார்ந்த கணக்குகளால் விதிக்கப்படும் விதிமுறைகளே பெண்களின் வாழ்க்கையை இன்றும் கட்டுப்படுத்துபவையாக உள்ளன.
  • மகளிர் நலன் சார்ந்த மாநில அரசின் தலையீடுகள் பெண்களுக்கு வேலை கிடைப்பதில் உள்ள தடைகளை அகற்றினாலும் உரிய ஊதியம் தரும் வேலைவாய்ப்புகள் இல்லைஎன்னும் முதன்மையான காரணத்தால், பெண்கள் வேலைக்குச் செல்ல விரும்புவது குறைந்துள்ளது. தொழிலாளர் படையில் பெண்களின் பங்கு குறைந்திருப்பதற்கு இதுவே முதன்மையான காரணம்.

பங்கேற்பும் ஊதியமும்

  • பொருளாதாரத்தில் பெண்களின் பங்கேற்பு குறித்த எந்த ஒரு விவாதமும் பங்கேற்பின் அளவு, மாற்றத்தின் விகிதம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டாக வேண்டும். பெண்களுடைய பங்கேற்பின் அளவு ஆண்களைவிட மிகவும் குறைந்ததாகவே இருந்துள்ளது.
  • தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகத்தின் 2020-21ஆம் ஆண்டுக்கான காலமுறைத் தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey) தமிழ்நாட்டில் வேலைகளில் பெண்களின் பங்கேற்பு 43% என்றும், தேசிய அளவில் இது 32.5% என்றும் கூறுகிறது. ஆனாலும் சர்வதேச நிலையுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் பெண்களின் பங்கேற்பு குறைவுதான்.
  • 1993-94இல் தமிழ்நாட்டுத் தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பு உச்சத்தைத் தொட்டது (54%). 2004-05இல் 51% ஆகக் குறைந்து, அப்போதிலிருந்து தொடர்ச்சியாகச் சரிந்துவருகிறது. 2017-18இல் மிகக் குறைவாக (34%) இருந்தது. 2020-21இல் 42%ஆக அதிகரித்தது.
  • அதே நேரம், இந்த அதிகரிப்பை நேர்மறையான வளர்ச்சியாகப் பார்க்க முடியாது. ஏனென்றால், இந்த அதிகரிப்பு தொழில் நிறுவனங்களில் இல்லாமல் முதன்மையாக வேளாண்மையில் நிகழ்ந்திருக்கவே சாத்தியம் உண்டு. மேலும், கரோனா பெருந்தொற்றால் விளைந்த அழுத்தத்தின் காரணமாக, குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்காக அதிக பெண்கள் வேலைக்குச் சென்றிருக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் சேவை  

  • உற்பத்தித் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்கேற்பு 58%. இது குஜராத்திலும் மகாராஷ்டிரத்திலும் 39%, இந்திய சராசரி 37%. தேசிய அளவில் வேளாண்மை வேலை வாய்ப்புகள் பெண் மையமாகிக்கொண்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் பெண் தொழிலாளர்கள் வேளாண்மையிலிருந்து பிற துறைகளுக்கு நகர்ந்தது முக்கியமானது.
  • இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையில் நிலையான பணியாளர்களாக (regular workers) உள்ள பெண்களில் 28% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். ஆனால், இதுவே தொழில்மய மாநிலங்களாக அறியப்படும் மகாராஷ்டிரம், குஜராத் ஆகியவற்றில் முறையே 13%, 11%தான். நிறுவனமயப்பட்ட உற்பத்தித் துறையை மட்டும் எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டுப் பெண்களின் பங்கேற்பு 43%. அதே போல், அரசு வேலைகளில் தமிழ்நாட்டில் 52% பேர் பெண்கள். தேசிய அளவில் இது 36%தான்.
  • ஊதியப் பாகுபாடு: எனினும், வேலைவாய்ப்புகளில் பெண்களின் நுழைவு மட்டுமே பெண்கள் முறையாக உள்ளடக்கப்படுவதை உறுதி செய்துவிடாது. ஊதியப் பாகுபாட்டைப் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். கல்வி நிலையங்களில் பெண்கள் சேர்வது, அந்தக் கல்விக்கு இணையான வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தந்துவிடுவதில்லை.
  • வேலைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக இருப்பதில்லை. ஏதேனும் ஒரு வேலைச் சந்தையில் நுழைந்துவிட்டாலும், வேலைசார்ந்த பாகுபாடு அல்லது ஊதியப் பாகுபாட்டை அவர்கள் எதிர்கொள்கின்றனர். பாலின ஊதிய இடைவெளி (பெண்களின் ஊதியத்துக்கும் ஆண்களின் ஊதியத்துக்கும் இடையிலான இடைவெளி) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம்.
  • எடுத்துக்காட்டாக, 2020-21இல் நிலையான வேலைகளில் பெண்கள் ஈட்டிய சராசரி மாத வருமானம் ரூ.12,969 என்றால், ஆண்கள் ஈட்டியது ரூ.17,476. நான்காண்டுகளின் (2018-21) சராசரியை எடுத்துக் கொண்டாலும், நிலையான ஊதியம் தரும் வேலைகளில் உள்ள பெண்கள் அதே வேலையில் ஈடுபடும் ஆண்கள் ஈட்டும் ஒரு ரூபாய்க்கு இணையாக 74 பைசாவை மட்டுமே ஈட்டுகின்றனர்.
  • இது மகாராஷ்டிரத்தில் 81 பைசா, குஜராத்தில் 85 பைசா, கேரளத்தில் 80 பைசாவாக உள்ளது. நிலையான ஊதியம் தரும் வேலையில் உள்ள சராசரி இந்தியப் பெண், ஆண் ஈட்டும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கு இணையாக 77 பைசாவை ஈட்டுகிறார். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களின் நிலையும் இதேதான். மனித மூலதனவேறுபாடுகள் இதற்குக் காரணமாக இருந்துவிட முடியாது.
  • ஏனென்றால், தமிழ்நாட்டில் பாலினங்களுக்கிடையிலான எழுத்தறிவு இடைவெளி வேறு பல மாநிலங்களைவிட மிகக் குறைவு. வேலைசார்ந்த பாகுபாடுகள் இந்த ஊதிய இடைவெளிக்குப் பகுதியளவு காரணமாக இருக்கலாம். உடலுழைப்பு அற்ற வேலைகளில் தமிழ்நாட்டில் பெண்களின் பங்கு 12%தான். பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் பகுதித் திறன் அல்லது தனிப்பட்ட திறன் எதுவும் தேவைப்படாத வேலைகளிலேயே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமூகம்-பண்பாடு சார் அழுத்தங்கள்

  • சமூக அந்தஸ்தும் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் பங்காற்றுவதாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலகட்டத்தில் ஆதிக்க சாதிப் பெண்களைவிட தலித் பெண்கள் நாட்டின் தொழிலாளர் படையில் 10% அதிகமாக உள்ளனர். இங்கும் நிலையான வருமானம் தரக்கூடிய வேலையில் உள்ள ஒரு தலித் பெண் ஈட்டும் சராசரித் தொகை ரூ.8,446. தலித் அல்லாத பெண்கள் ஈட்டுவது ரூ.13,095. பொருளாதார அழுத்தம் காரணமாகக் குறைந்த ஊதியம் தரும் வேலைகளைப் பெண்கள் ஏற்றுக்கொள்ளத் தூண்டப் படுவதாகத் தெரிகிறது.
  • பண்பாடு - சமூகப் பரப்புகளில் பெண்கள் இப்போதும் குறைத்து மதிப்பிடப்படுகிறார்கள். உழைக்கும் பெண்களைத் தாழ்வானவர்களாகவும் ஒழுக்க ரீதியாகச் சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் நடத்தப்பட பாலின அடிப்படையிலான சமூக விதிமுறைகள் வழிவகுத்துள்ளன. தமிழ்நாட்டில் பெண்களுடைய வேலை அவர்களது சாதி அல்லது சமூகத்தின் அபிலாஷைகளுடன் இணக்கமாக உள்ள துறைகளுக்குள் சுருங்கிவிடுகிறது.

வளர்ந்துவரும் சவால்கள்

  • நாட்டின் பிற பகுதி களுடன் தமிழ்நாட்டிலும் உற்பத்தித் துறை வேலைவாய்ப்பு களின் பங்கு சரிந்து வருகிறது. 2011-12இல் அது 20% என்னும் உச்ச நிலையிலிருந்தது (நாட்டிலேயே மிக அதிகம்). ஆனால், 2020-21இல் 16.8% ஆகச்சுருங்கியது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உற்பத்தித் துறையில் 7,00,000 வேலைகள் பறிபோயுள்ளன.
  • இது பெண்களுக்குத் தனித்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தேவைப்படும் தொழில் மயமாக்கலின் வளர்ச்சி கடந்த காலத்தில் பெண்களுக்கு உதவிகரமாக இருந்துள்ளது. ஆனால், இப்போது அது வேகமாக மறைந்து வருகிறது.
  • தமிழ்நாடு, தரம்சார் அணுகுமுறையைக் கைக் கொண்டு வியூகங்களை மாற்றியமைக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளை அதிகரிப்பது மட்டுமே தொடரும் பாலின சமத்துவமின்மையிலிருந்து விடுபட உதவாது. தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 மாதாந்திர உரிமைத்தொகை அளிக்கும் திட்டம், முறைசாராப் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களின் நிலையை நிச்சயமாக மேம்படுத்தும்.
  • அத்துடன் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவது, சேவைத் துறைப் பணிகளில் ஈடுபடுவதற்கு ஏற்ற வகையில் பெண்களின் திறன்களை வளர்ப்பது, உற்பத்தித்துறைக்கு வலுவூட்டுவது ஆகியவை இந்தப்பிரச்சினையைத் தவிர்ப்பதற்கான நீண்டகால வியூகங்களாக இருக்க முடியும்.

நன்றி:இந்து தமிழ் திசை (14– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories