- மத்திய அரசின் கரோனா நிவாரணத் திட்டங்களில், விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் ரூ.2,000 உதவித்தொகை முன்கூட்டியே கொடுக்கப்படும் என்றும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கொடுக்கப்படும் தினக் கூலியானது ரூ.182-லிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கூட்டுறவு நிறுவனங்களில் பெற்ற பயிர்க்கடன் தவணைத் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- இவற்றைத் தவிர மற்ற அறிவிப்புகளானது விவசாயிகள் தற்போது சந்தித்துவரும் பிரச்சினைகளைக் குறைப்பதாகவும், அவர்களின் வருமான இழப்பை ஈடுகட்டுவதாகவும் தெரியவில்லை.
- தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியானது தற்போதைய உணவு தானிய உற்பத்தியான 28.5 கோடி டன்களைத் தாண்டி 30 கோடி டன்களுக்கும் மேலாக உள்ளது.
- ஆனால், பெரும்பாலான தோட்டக்கலைப் பயிர்கள் குறிப்பிட்ட காலத்தில் அறுவடை செய்யாவிட்டால் கெட்டு அழுகிப் போய்விடும்.
- கரோனா அச்சத்தால் உணவு விடுதிகள் மூடப்பட்டுவிட்டன. திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளும் சுருக்கப்பட்டுவிட்டன.
- கோயில்களில் திருவிழாக்கள் தற்போது நடக்கவில்லை. சந்தைத் தேவைகள் குறைந்ததால், தோட்டக்கலைப் பயிர்களை அறுவடை செய்ய முடியாமலும், அறுவடை செய்த பொருட்களைச் சந்தையில் குறிப்பிட்ட விலையில் விற்க முடியாமலும் விவசாயிகள் பெரும் சிரமத்தில் உள்ளார்கள்.
- இந்த இழப்புகளை ஈடுகட்டும் விதமாக எந்த அறிவிப்பும் அரசுகளால் அறிவிக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
இடைத்தரகர்களின் ஆதிக்கம்
- இந்த நெருக்கடியான நேரத்தில் விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பதற்குப் போர்க்கால அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
- முதலில், பயிர்களை அறுவடை செய்வதற்கும், அறுவடை செய்த பொருட்களைச் சந்தையில் வாகனங்கள் மூலமாக எடுத்துச் சென்று விவசாயிகள் விற்பனை செய்வதற்கும் எந்தத் தடையும் இல்லாமல் செய்ய வேண்டும்.
- காய்கறி, கீரை, பூக்கள் சாகுபடி செய்பவர்கள் பெரும்பாலும் சிறு-குறு விவசாயிகளாக இருப்பதால், அறுவடை செய்யும் பொருட்களை நகரச் சந்தைக்குக் கொண்டுசெல்ல சிறப்புப் போக்குவரத்து வசதிகளைக் குறைந்த செலவில் செய்து கொடுக்க வேண்டும்.
- கரோனா காரணத்தைச் சொல்லி, இடைத்தரகர்கள் சந்தையில் பொருட்களுக்குக் குறைந்த விலையை நிர்ணயித்து விவசாயிகளைச் சுரண்டக்கூடும். எனவே, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
- அரசால் மேலாண்மை செய்யப்படும் கொள்முதல் நிலையங்கள் மூலமாக மட்டும்தான் இந்தச் சோதனையான காலகட்டத்தில் விவசாயிகளைக் காப்பாற்ற முடியும்.
- நெல் மற்றும் கோதுமைப் பயிர்கள் தவிர, மற்ற பயிர்கள் இந்தியாவில் அதிக அளவில் அரசால் கொள்முதல் செய்யப்படுவதில்லை. உதாரணமாக, 2018-19-ல் மொத்த உற்பத்தியில் வெறும் 1.65% துவரையும், 2.96% பச்சைப்பயறும், 4.24% உளுந்தும், 1.98% சோயாபீன்ஸும், நிலக்கடலையில் 7.17% மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
- தோட்டக்கலைப் பயிர்களை அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்வது கிடையாது. ஆனால், இந்த நெருக்கடியான நேரத்தில் இதை மாற்றி, தோட்டக்கலைப் பயிர்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வேளாண் கூட்டு நிறுவனமான ‘என்ஏஎஃப்இடி’ மூலமாக அரசே கொள்முதல் செய்து, நுகர்வோர்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உழவர் சந்தைகளை வலுப்படுத்துங்கள்
- தற்போது நடைமுறையிலுள்ள உழவர் சந்தைகளை வலுப்படுத்துவதுடன், நடமாடும் உழவர் சந்தைகளை அனைத்து மாநிலங்களிலும் அரசின் உதவியுடன் தொடங்கி விவசாயப் பொருட்களைத் தங்குதடையின்றி விற்பனை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தற்போதுள்ள சூழலில் விவசாயிகளால் பயிர்ச் சாகுபடிக்காக வாங்கப்பட்ட வங்கிக் கடன்களைத் திரும்பச் செலுத்துவதில் கடுமையான சிரமங்கள் ஏற்படும். எனவே, பயிர்க்கடன் தவணைத் தொகையைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வட்டியில்லாமல் ஓர் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும். மேலும், புதிய பயிர்க் கடன்களை வட்டியில்லாமல் குறைந்தது ஆறு மாதங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்தத் துயரமான காலகட்டத்தில், பயிர்ச் சாகுபடியில் வருமானம் குறைந்த காரணத்தால் சாகுபடிக்காக அமர்த்தப்படும் வேலை ஆட்களுக்குக் கூலி கொடுப்பது சிரமம். இதைச் சரிசெய்யும் வகையில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தை மஹாராஷ்டிர மாநிலத்தில் செய்ததுபோல விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்த உடனடி முயற்சிகள் எடுக்க வேண்டும்.
- தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள், இந்த ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் சிறு-குறு விவசாயிகள். இவர்களின் இழப்பை ஈடுகட்ட சிறப்புத் திட்டங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் குளிரூட்டப்பட்ட கிட்டங்கிகளை அமைத்து இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் தோட்டக்கலைப் பயிர்களை சேமித்துவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ரூ.5,000 உதவித்தொகை
- ஒருவேளை வரும் நாட்களில் கரோனாவின் தாக்கம் அதிகரித்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். இதிலிருந்து காப்பாற்றும் விதமாக, ஒவ்வொரு சிறு-குறு விவசாயக் குடும்பத்துக்கும் நிவாரணமாக தலா ரூ.5,000 ஒவ்வொரு மாதமும் கொடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- விவசாயச் சந்தையில் அரசால் கொண்டுவரப்பட்ட தேவையற்ற கட்டுப்பாடுகளால் 2000-01-லிருந்து 2016-17 வரையிலான, 17 ஆண்டுகளில் ரூ.45 லட்சம் கோடிகளை இந்திய விவசாயிகள் இழந்துள்ளதாக வேளாண் பொருளியல் அறிஞர் அசோக் குலாத்தி மதிப்பிட்டுள்ளார்.
- தற்போது விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளார்கள்; இந்நிலையில், அவர்களிடமிருந்து எடுத்ததை அவர்களுக்குத் திருப்பிக்கொடுப்பது நம் கடமை அல்லவா!
நன்றி: தி இந்து (16-04-2020)