ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு 2025: மீண்டும் முதலிடம் பெற்ற ஈரோடு எலத்தூர் குளம்!
- ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு ( Great Backyard Bird Count - GBBC) உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் நான்கு நாட்கள் நடைபெறும். இந்த நிகழ்வில் உலக முழுவதும் பலர் தங்கள் பகுதியில் உள்ள பறவைகளை ஆவணப்படுத்தி மக்கள் அறிவியல் தளமான ebird-ல் பதிவேற்றுவர்.
- இக்கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தரவுகளை கொண்டு பறவை இனங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் பாதிப்புகள் போன்வற்றை அறிந்து, அவற்றை பாதுகாக்கும் முயற்சிகள் எடுக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரை உலகளாவிய ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்ந்தது. இதில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பெரியகுளத்தில், 138 பறவை இனங்கள் வாழ்வதாக எலத்தூர் பல்லுயிர் மேலாண்மை குழுவினர், பறவை ஆர்வலர்கள் மற்றும் சூழல் அறிவோம் குழுவினர் ஆவணப்படுத்தி உள்ளனர்.
- இவ்வாண்டிற்கான ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் அதிக பறவை இனங்கள் வசிக்கும் வாழ்விடங்களில் தமிழ்நாட்டில் மீண்டும் முதலிடத்தை இரண்டாவது ஆண்டாக ஈரோடு மாவட்டம் எலத்தூர் குளம் பெற்றுள்ளது.
- இந்திய அளவில் இது 22 வது இடம். கடந்த 2024 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பிலும் தமிழ்நாட்டில் முதலிடத்தை எலத்தூர் பெரியகுளம் பெற்றது குறிப்பிடத்தக்கது. நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழைநீர் மற்றும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தால் கிடைக்கும் பவானி ஆற்று நீரால் எலத்தூர் குளம் இந்த ஆண்டு நிரம்பி உள்ளது.
- பாறைப் பகுதிகள் நிறைந்த நீர்வழித்தடம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் பல வகையான தாவரங்களை உள்ளடக்கிய முட்புதர்க்காடு, கரைக்காடு, வறல் புல்வெளி, சதுப்பு நிலம், ஆழமான நீர் நிலைப்பகுதி, மண் திட்டுகள், ஏரிக்கரைக்காடு, புதர்கள் போன்ற பல வாழ்விட அமைப்புக்களை (Habitat diversity) பெற்றுள்ளது எலத்தூர் குளம்.
- இவை அனைத்தும் இணைந்து தனித்துவமான வாழ்விடமாக விளங்குகிறது எலத்தூர் குளம். இத்துடன் இதன் அருகே உயிரிப்பன்மயம் நிறைந்த குன்றான நாகமலை காடும் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த வாழ்விடத்தில் அதிக வகையான பல்லுயிர்களும் பறவைகளும் வாழ்வதாக சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஆற்று ஆலா, சாம்பல் தலை ஆள்காட்டி:
- இந்த ஆண்டு அழிவின் விளிம்பில் இருக்கும் பறவையான ஆற்று ஆலா, நெடுந்தூரம் பயணிக்கும் கருவால் மூக்கன், ஈரோடு மாவட்டத்திற்கு முதன்முறையாக கிழக்கு ஆசிய பகுதியிலிருந்து வலசை வந்துள்ள சாம்பல் தலை ஆள்காட்டி, அரிதாக தமிழ்நாட்டிற்கு வலசை வரும் கூம்பலகன், அரிதாக காணக்கூடிய சிவப்பு காணாங்கோழி, நீர்க் கோழி, செங்குருகு, கருங்குருகு போன்ற பல பறவை இனங்கள் குளத்திற்கு வருகை தந்துள்ளன.
- இரவு நேரங்களில் இமயமலை பகுதியிலிருந்து வந்திருக்கும் ஆயிரக்கணக்கான நீலவால் பஞ்சுருட்டான், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து வந்திருக்கும் ஆயிரக்கணக்கான சூறைக் குருவிகள், உள்ளூர் பறவைகளான அன்றில்கள், கொக்குகள் வாத்துகள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு தங்குகின்றன.
- இத்துடன் தமிழ்நாட்டில் அரிதாக இனப்பெருக்கம் செய்யும் கம்பி வால் தகைவிலான் உள்ளிட்ட 64 வகையான உள்ளூர் பறவைகள் இங்கு இனப்பெருக்கம் செய்து வாழ்கிறது.
- இதுவரை 568 வகையான உயிரினங்கள் எலத்தூர் குளத்தில் வாழ்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 202 பறவைகள், 173 பூச்சி இனங்கள், 110 தாவர வகைகள், 16 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 7 பாலூட்டிகள், 22 இதர பல்லுயிர்கள் உள்ளடங்கும்.
- மிகச் சிறப்பான உயிர்ச்சூழலுடன் பல வகையான பறவைகளுக்கும் பிற பல்லுயிர்களுக்கும் உணவளித்து வாழ்விடமாக விளங்கும் எலத்தூர் குளத்தையும் அருகில் உள்ள நாகமலை குன்றையும் அரசு விரைவாக பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவித்து பாதுகாத்திட வேண்டும் என எலத்தூர் பல்லுயிர் மேலாண்மை குழுவினர் மற்றும் சூழலியல் செயல்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 03 – 2025)