- புதிய கண்டுபிடிப்புகள், நூதனமான வழிமுறைகள், வினோதமான செயல்பாடுகள் எல்லாமே அந்தந்த நேரத்து நெருக்கடிகளில்தான் பிறக்கின்றன. காஸாவின் சுரங்க வழிப் பாதைகள் குறித்து இந்நாட்களில் அதிகம் கேள்விப்
- படுகிறோம்.
- மொத்த காஸாவின் நீள அகலங்களைக் காட்டிலும் பல நூறு மடங்கு அதிகமுள்ள சுரங்கங்கள் காஸாவில் இருப்பதாகப் படிக்கிறோம். சுரங்கங்களைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல்களைப் பார்க்கிறோம். பிடிபட்ட இஸ்ரேலியர்களை ஹமாஸ் சுரங்கங்களில்தான் தங்க வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சுரங்க வழித் தடங்களின் இரு பக்கச் சுவர்களிலும் ராக்கெட்டுகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். முற்றிலும் புதிதாக ஒரு பாதாள உலகத்தை உருவாக்கி, ஹமாஸ் அங்கே இருந்து கொண்டு மட்டுமே போர் புரிவதான ஒரு தோற்றம் எப்படியோ உருவாகிவிட்டது.
- இருக்கட்டும். ஆனால் காஸாவின் சுரங்கங்களுக்குப் பெரிய வரலாறு உண்டு. ஹமாஸ் என்கிற இயக்கம் உருவாவதற்கு முன்பே அங்கே சுரங்கப் பாதைகள் உருவாகத் தொடங்கிவிட்டன. முன் சொன்னது போல எல்லாமே இருப்பியல் நெருக்கடிகளின் விளைவு.
- காஸா மக்களுக்கு எந்த ஒரு பொருள் வேண்டுமென்றாலும் அது எகிப்தில் இருந்து மட்டும்தான் வந்தாக வேண்டும். காய்கறிகள், இறைச்சி, மருந்துப் பொருட்கள், உடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், பேப்பர், பேனா, டைப் ரைட்டர் தொடங்கி பெட்ரோல், டீசல் - அவ்வளவு ஏன். ஒருமொபைல் சார்ஜர் வேண்டுமென்றால்கூட எகிப்துதான் அவர்களுக்கு ஒரே போக்கிடம். இந்தப் பக்கம் இஸ்ரேல் மிக அருகில்தான் இருக்கிறது. ஆனால் அங்கிருந்து ஒரு குண்டூசி கூட வராது.
- என்ன செய்யலாம்? நடந்து போய் எகிப்தில் கொள்முதல் செய்து வந்துவிடலாம்தான். ஆனால் ரஃபா எல்லையை மூடிவிட்டார்கள். இதர எல்லைகளிலும் இஸ்ரேல் ராணுவம் நிற்கும்.போனால் வர முடியாது. மாட்டினால் உயிரோடே இருக்க முடியாது. இதனால்தான் எகிப்து எல்லையோர காஸாவின் கிராமப் புறங்களில் வசித்த மக்கள் தத்தமது வீடுகளுக்கு உள்ளேயே சுரங்கம் தோண்டத் தொடங்கினார்கள்.
- இந்த வீட்டுச் சுரங்கங்களை நமது கிராமப்புற வீடுகளில் இருக்கும் கிணறுகளுடன் ஒப்பிடலாம். பதினைந்தில் இருந்து இருபத்தைந்தடி ஆழம் வரைவீட்டுக்குள் தோண்டுவார்கள். உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்க எலி வளைத் தொழிலாளர்கள் என்றொரு கைவேலை விற்பன்னர்களைப் பயன்படுத்தினார்களே, அதுவேதான். காஸாவில் வசிக்கும் அத்தனை பேருமே எலிவளைத் தொழிலாளர்கள்தாம். வெறும் மண்வெட்டி, கடப்பாறைகளைக் கொண்டுதினம் கொஞ்சமாக, வீட்டு உறுப்பினர்கள் ஆளுக்குக் கொஞ்சமாகத் தோண்டிவிட்டுப் படுத்துவிடுவார்கள். இப்படி நாள் கணக்கில், மாதக் கணக்கில் கிணறு தோண்டி, அதன் ஆழத்தில் இருந்துஎகிப்து நோக்கி அதேமுறையில் தோண்டிக் கொண்டே செல்வார்கள்.பெரிய அகல உயரங்களெல்லாம் கிடையாது. ஓர்ஆள்படுத்துத் தவழ்ந்து செல்லும்படியான சுரங்கங்கள்தாம். எல்லைக் காவல் ஆபத்துகள் இல்லாத தொலைவு வரை கணக்கிட்டுத் தோண்டியதும் மறுபுறம் அங்குள்ள அவர்களது தொடர்புகளின் உதவியுடன் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் திரும்பி வந்துவிடுவார்கள்.
- கவனியுங்கள். இது அரசாங்கம் செய்ததல்ல. அமைப்புகள் செய்ததல்ல. மக்கள் தத்தமது தேவைக்காகத் தாமே தங்கள் வீடுகளுக்குள் இருந்தபடியே தோண்டிக் கொண்ட சுரங்கங்கள். ஒன்றல்ல இரண்டல்ல. பல நூற்றுக் கணக்கான இத்தகு கிணற்றுச் சுரங்கங்கள் காஸாவில் உண்டு.
- இதைத்தான் பெரிய அளவில் விஸ்தரித்துச் செய்ய ஹமாஸ் முடிவுசெய்தது. ஹமாஸுக்குத் தேவையானவற்றை வரவழைப்பது முதல், அரசு செயல்படத் தேவையானவற்றைக் கொண்டு வருவது வரை அனைத்துக்கும் சுரங்க வழித் தடங்கள். இதன் மூலம் காஸாவில் ஒரே சமயத்தில் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரவும் ஒரு வாய்ப்பு. வசதி என்னவென்றால், தொழில் தெரிந்தவர்களைத் தேடிச் செல்ல அவசியமில்லை. காஸாவில் சுரங்கம் தோண்டத் தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை.
- இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்று இஸ்மாயில் ஹனியா உத்தரவளித்தார். மறு கணமே காஸா முழுவதும் வீடு வீடாகச் சென்று ஹமாஸ்போராளிகள் தகவல் தெரிவித்துவிட்டு வந்தார்கள். இப்படி ஒரு பணி நடக்கிறது என்பதை மட்டும் பகிரங்கமாக ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள வேண்டாம் என்று பொதுவில் சொல்லப்பட்டது. ஹமாஸின் பொறியியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் வரைபடத்தை வைத்துக் கொண்டு சுரங்கப் பாதைகள் எந்தெந்தத் தடங்களில் அமையலாம் என்று வகுத்துக் கொடுத்தார்கள்.
- தூரங்களைக் கணக்கிட்டு, அந்தந்த வழியில்வசிக்கும் மக்கள் தத்தமது பிராந்தியங்களில் சுரங்கம் அமைத்துக் கொடுத்துவிட்டார்கள். அவரவர் எல்லை வரைவேலை முடிந்ததும் அமைதியாகிவிடுவார்கள். அடுத்த வீதியில் அடுத்தபடியாக வேலை நடக்கும். அது முடிந்ததும் அதற்கடுத்த வீதி. இப்படி ஊர்கூடிக் குடைந்த பூமி அது.
நன்றி: தி இந்து (07 – 12 – 2023)