TNPSC Thervupettagam

ஊழிப் பெருந்தீ உணர்த்தும் உண்மைகள்

February 4 , 2020 1808 days 942 0
  • கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர்  1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை தென்கொரிய குடியரசு, இன்ச்சியான் மாகாணத்தில் நடைபெற்ற 48-ஆவது பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் பேச்சுவார்த்தைக்குப் பின் 1.5 செல்ஷியஸýக்கு மேல்  புவி வெப்ப அதிகரிப்பு பருவநிலையில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என எச்சரிக்கை விடப்பட்டது.
  • "இப்போது செயலாற்றுங்கள் அல்லது மோசமான பிரச்னையை எதிர்கொள்ளுங்கள்' என புவி வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் அப்போது எச்சரித்தனர். 
  • பருவநிலை மாற்றம் குறித்து பாரிஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி,  புவிவெப்ப அளவை 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவைவிடக் குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இன்றோ உலகம் 3 டிகிரி செல்ஷியஸ் அளவை நோக்கிச் செல்வதாக அவர்கள் அன்று அச்சம் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவில்

  • அந்த எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலியா செயல்பட்டதால் அங்கு காட்டுத் தீ பரவியுள்ளது; புவி வெப்பமயமும், 2017-ஆம் ஆண்டு முதல் அங்கு ஏற்பட்ட கடும் வறட்சியும்தான் இந்தக் காட்டுத் தீக்குக் காரணம். வறட்சிக் காலங்களில் அதிகளவு நீரை   ஒட்டகங்கள் அருந்துவதால், கழிவுகளிலிருந்து உருவாகும் ஒரு டன் கரியமில வாயுவுக்கு நிகரான மீத்தேன் வாயு, புவிவெப்பமயத்திற்கு முக்கியக் காரணமாக இருந்ததால் 10,000-த்துக்கும் அதிகமான ஒட்டகங்களைக் கொல்ல அந்த நாட்டு அரசு முடிவு செய்தது. புவி வெப்பமானால் இந்தியா உள்பட உலக நாடுகள் எதிர்காலத்தில் சந்திக்கவுள்ள தாக்கங்களின் ஒரு வெள்ளோட்டம்தான் இது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 
  • இயற்கையைத் தீண்டும், அத்துமீறிப் போன இந்த புவிவெப்பமயமாவதற்கு முழுமுதற் காரணம் மனிதர்களும், அவர்களின் செயல்பாடுகளும்தான்.
    ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு கடந்த டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சிலியில் நடைபெற்று உலக நாடுகளிடையே எந்த ஓர் ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளாமல் முடிவடைந்தது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ பிரச்னைக்கு தூபம் போடுவது போல் உள்ளது.
  • உலகின் 7 கண்டங்களில் ஒன்றான ஆஸ்திரேலியா, இன்று செந்நிற வானம் கொண்ட கருகும் கண்டமாக மாறி வருகிறது. அங்கு 35 சதவீத பகுதிகள் குறைவான மழைப் பொழிவையே பெறுவதுடன் 18 சதவீதம் பாலைவனங்களே உள்ளன. பசுமைக்குடில் வாயுக்களை அதிகமாக வெளியேற்றுவதாக ஆஸ்திரேலியாவை மற்ற நாடுகள் குற்றஞ்சாட்டியிருந்தன.
  • பாரிஸ் உடன்படிக்கையின்படி அதன் இலக்குகளைப் பூர்த்தி செய்ய கியோட்டோ ஒப்பந்தத்தின் மூலம் தனக்கு ஒதுக்கப்பட்ட கரியமில வாயு அளவுகளைப் பயன்படுத்த ஆஸ்திரேலியா விரும்பியது. ஆனால், உலக நாடுகளுக்கு அதிக அளவில் நிலக்கரியை ஏற்றுமதி செய்யும் ஆஸ்திரேலியா, அந்த நாட்டில் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க எந்தவிதமான புதிய நடவடிக்கையையும் எடுக்கவில்லை என இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடும் வறட்சி மற்றும் அதிக வெப்பம்

  • கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா கடும் வறட்சியையும், அதிக வெப்பத்தையும் சந்தித்துள்ளது. 1960-ஆம் ஆண்டிலிருந்து 1990-ஆம் ஆண்டு வரை அங்கு புவி வெப்ப அளவு 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவே இருந்த நிலையில், கடந்த மாதம் 49.9 டிகிரி செல்ஷியஸ் அளவு புவி வெப்பம்  எட்டியுள்ளது என அந்த நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாகாணங்களான விக்டோரியா நியு சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாண்ட் மாகாணங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காட்டுத் தீ பரவி வருகிறது. கட்டுக்கடங்காமல் எரியும் அந்தக் காட்டுத் தீயால் சுமார் 1.2 கோடி ஏக்கர் விளைநிலங்கள், 1,400-க்கும் அதிகமான வீடுகள் எரிந்து சாம்பலாயின. தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பெரும் பணியில் தீயணைப்புப் படையினரும், ராணுவத்தினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கோரமான காட்டுத் தீயில், 2.5 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்,  26 பேர் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமல்லாமல், விலங்குகள், பறவைகள் எனப் பல உயிரினங்கள் அழிவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன.

கனமழை

  • சில நாள்களுக்கு முன்பு காட்டுத் தீயின் வேகத்தைத் தணிக்கும் வகையில் கனமழை பெய்த நிலையில்,  இப்போது, சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கிடையே உள்ள ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெரா நகரத்திலும் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காட்டுத்தீயின் வேகம் கடந்த இரு தினங்களாக அதிகரித்துள்ளது. இதனால், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கான்பெராவின் தென்பகுதியில் 18500 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் சுற்றுப்புறத்தில் வாழும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், வீட்டை விட்டு உடனடியாக வெளியேறும்படியும்  அறிவுறுத்தப்பட்டனர்.
  • இந்தக் காட்டுத் தீயால் 125 கோடிக்கும் அதிகமான பறவைகளும், பல லட்சம் கோடி  பூச்சிகளும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்தக் காட்டுத் தீக்கு மொத்தமுள்ள கோலா கரடிகளில்  30 சதவீதம் இரையாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது.  இதனால், அழிந்துவரும் உயிரினமாக கோலா கரடிகளை அறிவிக்கும் நிலைக்கு ஆஸ்திரேலிய அரசு தள்ளப்பட்டுள்ளது. 250-க்கும் அதிகமான விலங்கினங்களுக்கு ஆஸ்திரேலியா புகலிடமாகயிருந்த காலம் இன்று மறைந்து விட்டது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பருவநிலை மாற்றம்

  • 2019-ஆம் ஆண்டு பருவ நிலை மாற்றம், காட்டுத் தீ குறித்து அந்த நாடு வெளியிட்டிருந்த சுருக்க அறிக்கையில் பருவநிலை மாற்றத்துக்கு மனிதர்கள்தான் காரணம். அதன் விளைவாக, அபாயகரமான காலநிலை ஏற்பட்டு, ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் புதர் காடுகள் கடந்த 10 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கின்றன எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
    மேலும், டென்மார்க் தலைநகர் கோபென்ஹாகென், தென்கிழக்கு மெக்ஸிகோ நாட்டிலுள்ள கேன்கன், ஜப்பானிலுள்ள கியாட்டோ ஆகிய நாடுகளில் நடைபெற்ற  பருவநிலை மாற்றம், அதன் விளைவுகள்,  உலகம் சந்திக்கப் போகும் பிரச்னைகள் குறித்த மாநாடுகளில் மேற்கொண்ட ஒப்பந்தங்களையும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் வளரும்  நாடுகள் அனைத்தும் மீறி உள்ளதாகவும், இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும், புவி வெப்ப அளவை 1.5 டிகிரி செல்ஷியûஸவிடக் குறைவாக வைத்துக்கொள்ள பல நாடுகள் தவறி விட்டன எனவும் விஞ்ஞானிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
  • இதே நிலை தொடருமேயானால், ஆஸ்திரேலியாவைப் போன்ற ஒரு நிலை இந்தியாவுக்கும் ஏற்படும் எனவும் அஞ்சப்படுகிறது. ஏனெனில், இந்த ஆண்டு  21 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் பூஜ்யத்தை எட்டும் என நீதி ஆயோக் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தவேளையில்  இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாநிலங்களிடையே தண்ணீர் பிரச்னை ஏற்பட்டு, விவசாயத்துக்கும்  நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டால் அது உணவு உற்பத்தியைப்  பாதிப்பதுடன் சுற்றுச்சூழல், சுகாதாரம், பொது மக்களின் உடல்நலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
    மேலும், 1901-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையுள்ள காலங்களில் 2010-19 ஆண்டுகள்தான் அதிக வெப்பமான ஆண்டுகள் என இந்திய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் வெப்பம் இதே அளவு தொடர்ந்தால் கடுமையான வறட்சி, காட்டுத் தீ, வெள்ளம் ஏற்படும், இதன் காரணமாகப் பெருமளவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு பலர் உயிரிழக்க நேரிடலாம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மின்சாதனப் பொருள்கள்

  • கூடுமான வரையில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். செல்லுமிடம் அருகிலிருந்தால் நடந்து செல்வதோ அல்லது மிதி வண்டியில் செல்வதோ நல்லது.  மின்சாரப் பயன்பாட்டை பெருமளவில் குறைக்க வேண்டும். அதாவது, மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தி நிறைவாக வேலை செய்யும் ஆற்றலைச் சேமிக்கும் மின்சாதனப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.  புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு (சூரிய மின்சக்தி) மாற வேண்டும்.   மாமிசம் உண்பதைக் குறைக்க வேண்டும்.  
  • தண்ணீர் அதிகம் உறிஞ்சும் பணப் பயிர்களை சாகுபடி செய்வதைக் குறைக்க வேண்டும்.  விவசாய விளைபொருள்களை எரிக்கக் கூடாது. பழைய பொருள்களை (தண்ணீர் உள்பட) மறுசுழற்சிக்கு உட்படுத்தாமல் இருப்பதும் புவிவெப்பமயமாதலைத் தவிர்ப்பதுடன், உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்காமல் சுற்றுச்சூழலைப்  பாதுகாக்கும் எனப் பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
    உலகில் காடுகளெல்லாம் வளர்ச்சி பெற்றால் நாடுகளெல்லாம் வளம் பெற்றிடும். இயற்கை கூறும் நெறிமுறைகள், இனிது வாழ வழி முறைகள் என்பதை உணர்ந்து, இந்தப் புவியின் எதிர்காலம் நம் கையில்தான் உள்ளது என்பதால் பஞ்ச பூதங்களையும் மாசடையச் செய்யாமல் காக்க வேண்டும் என்பதுதான் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள ஊழிப் பெருந்தீ உணர்த்தும் பேருண்மையாகும்.

நன்றி: தினமணி (04-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories