- சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வெளியிட்டிருக்கும் தேசிய புலிகள் கணக்கெடுப்பு அறிக்கை மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. 2018-ஆம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, தற்போது இந்தியாவில் 2,977 புலிகள் இருப்பதாகத் தெரிகிறது. 2014-இல் 2,226-ஆக இருந்த எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 33% அதிகரித்திருப்பது மிகப் பெரிய வெற்றி.
மனித ஆக்கிரமிப்புகள்
- ஒரு காலத்தில் ஆசியாவில் மட்டுமே லட்சக்கணக்கில் புலிகள் உலவி வந்ததுபோய், தங்களது உறைவிடங்கள் மனித ஆக்கிரமிப்புக்கு உள்ளானதாலும், வேட்டையாடல்களாலும் புலிகள் அழிவை நோக்கி நகரத் தொடங்கின. 1968-இல் புலிகள் வேட்டைக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. 1973-இல் புலிகள் அதிகமாகக் காணப்படும் எட்டு வனப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அவை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, இப்போது இந்தியாவில் 50 புலிகள் சரணாலயம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
- ஐம்பது புலிகள் சரணாலயம் மட்டுமல்லாமல், புலிகள் அதற்கு வெளியே உள்ள காடுகளிலும் புலிகள் இந்தியாவில் காணப்படுகின்றன. தாங்கள் உலவும் பகுதிகள் மீது புலிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. புலிகளுக்குத் தேவையான உணவு, தண்ணீர், மறைவிடம் ஆகியவற்றைச் சார்ந்து அவை உலவும் உறைவிடப் பகுதியின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. புலிகளுக்கு இடையேகூட தங்களது ஆளுமைப் பகுதிகள் குறித்த போட்டியும், சண்டையும் நடைபெறுவதுண்டு. இதனால், பலம் குறைந்த புலிகள் கொல்லப்படுவதுமுண்டு.
இடம் பெயர்வு
- பெரிய புலிகளின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் பலவீனமான அல்லது இளம் வயதுப் புலிகள் தங்களுக்கென்று உறைவிடங்களை ஏற்படுத்திக்கொள்ள வேறு இடம் தேடி நகர்வதும் உண்டு. சில வேளைகளில் 300 கி.மீ. தூரம் வரை புலிகள் இடம் பெயரும் என்று தெரிகிறது.
- வனப் பகுதிகள் அழிக்கப்படுவதாலும், ஆக்கிமிரப்புக்கு உள்ளாவதாலும் விவசாய நிலங்களையும் காபி, தேயிலைத் தோட்டங்களையும் தங்கள் உறைவிடங்கள் ஆக்கிக் கொள்ள நேருகிறது. அதன் விளைவாக, மனித இனத்துடன் மோதல் போக்கைக் கையாள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
புலிகள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு இடம்பெயருவதற்கு வசதியாக அவற்றுக்கான வழித்தடங்கள் உருவாக்கப்படுவது மிகவும் அவசியம். சரணாலயங்களுக்கு வெளியே இருக்கும் புலிகளுக்கும் போதிய கவனமும் பாதுகாப்பும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- புலிகள் என்கிற விலங்கினம் அழிந்துவிட்டால் மனித இனமும் அதனால் பாதிக்கப்படும் என்பதை பலரும் உணர்வதில்லை. வனப் பகுதிகள் ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் இருப்பதற்கும், அதன் மூலம் நதிகள் பாதுகாக்கப்படுவதற்கும் புலிகள் உதவுகின்றன. அதிக அளவில் புலிகளின் நடமாட்டம் இருக்கும் வனப் பகுதிகளின் பல்லுயிர்ப் பெருக்கம் உலகில் உயிர்கள் வாழ்வதற்கு மிகவும் அவசியம். உணவு பாதுகாப்புக்கும், நதி நீர் பாதுகாப்புக்கும் புலிகள் பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும்.
புலிகள் கணக்கெடுப்பு
- நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திவரும் புலிகள் கணக்கெடுப்பு என்பது மிகவும் கடினமான உழைப்பின் அடிப்படையில் நடைபெறுகிறது. 2018 அறிக்கையைத் தயாரிப்பதற்காக புலிகளின் நடமாட்டமுள்ள 20 மாநிலங்களில் 3,81,400 கி.மீ. வனப் பகுதிகளை 44,000 ஊழியர்கள் சல்லடை போட்டு ஆய்வு செய்து புள்ளிவிவரம் சேகரித்தனர். 26,838 இடங்களில் காமிராக்கள் பொறுத்தப்பட்டன. அதன் மூலம் 76,651 புலிகள், 51,777 சிறுத்தைகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் பெறப்பட்டன. அந்த புகைப்படங்களை ஒன்றோடு ஒன்று பொருத்தி சரிபார்ப்பது என்பதே கூட மிகப் பெரிய பணி.
- தற்போதைய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் நூற்றுக்கும் அதிகமான புலிகள் காணப்படும் மாநிலங்கள் மத்தியப் பிரதேசம் (526), கர்நாடகம் (524), உத்தரகண்ட் (442), மகாராஷ்டிரம் (312), தமிழ்நாடு (264) கேரளம் (190), அஸ்ஸாம் (190) உத்தரப் பிரதேசம் (173). கடந்த நான்கு ஆண்டுகளில் கேரளத்தில் புலிகளின் எண்ணிக்கை 313% அதிகரித்திருக்கிறது என்றால், தமிழகத்தில் 247% அதிகரித்திருக்கிறது.
ஒடிஸாவிலும் சத்தீஸ்கரிலும் புலிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. புலிகள் பாதுகாப்பில் சிறந்த மேளாண்மைக்கான விருது சத்தியமங்களம் புலிகள் காப்பகத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
புள்ளிவிவரம்
- அரசின் புள்ளிவிவரப்படி, புலிகள் தங்களது 20% உறைவிடங்களை இழந்திருக்கின்றன. இது நல்ல அறிகுறி அல்ல. புலிகள் வேட்டையாடப்படுவதும், புலிகளின் உறுப்புகள் விற்பனை செய்யப்படுவதும் தடை செய்யப்பட்டிருந்தாலும், புலிகள் கொல்லப்படுவது தொடர்கிறது என்பதை நாம் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தில் புலிகளின் உறுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. உலக அளவில் ஆண்டொன்றுக்கு 19 பில்லியன் டாலர் (ரூ.1,30,883 கோடி) அளவில் புலிகளின் உறுப்புகள் விற்கப்படுகின்றன.
- அதனால் புலிகளைக் காப்பாற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, மனித இனத்துக்கே இருக்கிறது.
- புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டபோது, மக்களுக்கு வீடுகள் வழங்குவதுபோல மிருகங்களுக்கும் அவை சுதந்திரமாக உலவித் திரியும் உறைவிடத்துக்கான சூழலை ஏற்படுத்துவோம் என்றும், வளர்ச்சிப் பணிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்தும் என்றும் பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவரது வார்த்தைகள் செயல் வடிவம் பெற வேண்டுமென்று புலிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
நன்றி: தினமணி(31-07-2019)