TNPSC Thervupettagam

எங்கு இருக்கிறது ‘பிரமாதமான’ யோசனை?

October 14 , 2024 96 days 166 0

எங்கு இருக்கிறது ‘பிரமாதமான’ யோசனை?

  • வெற்றிகரமான தொழில் முனைவோருக்கும் புத்தொழில் முனைவோருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை கவனித்திருக்கிறீர்களா? ஒரு குழந்தையும் பெற்றோரும் பேசிக்கொள்வதைப்போல அவ்வளவு அழகாக இருக்கும். ஒரு வணிக இதழாளராக இயங்குவதால் எனக்குப் பலமுறை இதனைக் கண்டுமகிழும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அண்மையில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அமைப்பு, மதுரையில் நடத்திய ‘ஸ்டார்ட் அப் திருவிழா’வில் கலந்துகொண்டபோதும் அதை நன்றாகவே உணர்ந்தேன்.
  • இதுபோன்ற உரையாடல்களின்போது ஒருவர் இருப்புநிலைக்குறிப்பை (Balance Sheet) தயாரிப்பதில் தனக்கு ஏற்பட்ட ஐயத்தையும் கேட்பார். இன்னொரு குழந்தை “ நான் பள்ளி மாணவி. என் வயதில் நான் தொழில் தொடங்க முடியுமா?” என்று கேட்கும். ஏற்கனவே தொழில் துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அவற்றுக்குப் பொறுமையாக விடையளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
  • இதுபோன்ற நிகழ்வுகளின்போது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி என்னவாக இருக்கும் தெரியுமா? “ஒரு தொழில் தொடங்க/முதலீடு பெற/அடுத்த கட்டத்துக்கு நகர என்னதான் தேவை?” என்பதுதான். அதற்கு வணிகத்தலைவர்களின் விடையும் எப்போதும் ஒரே மாதிரியானதுதான்.
  • “ஒரு பிரமாதமான யோசனையைக் கொண்டு வாருங்கள். அவ்வளவுதான்” என்பதே அவ்விடை. தொழில் உலகம் இவ்வளவு வளர்ந்தபிறகும் நாம் ஏன் ஒரு அடிப்படையான கேள்வியை மூளையில் சுமந்துகொண்டே அலைகிறோம்? ஏனென்றால் ஒரு ‘பிரமாதமான யோசனை’ என்பது என்னவென்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை என்பதுதான். அப்படியென்றால் அதன் முக்கியத்துவம் என்ன? அதனை எப்படிப் புரிந்துகொள்வது?

ஈட்டி முனையில் ஓட்டை:

  • நீங்கள் எம்.எஸ். உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ நூலைப் படித்திருக்கிறீர்களா? இதுவரை இல்லாவிட்டாலும் இனியாவது படித்துவிடுங்கள். அதில் ஒரு சம்பவத்தை அவர் விவரித்திருப்பார். “கையால் ஊசி கொண்டு துணிகளைத் தைத்த காலம் அது. ஒவ்வொரு முறையும் துணியின் மேற்பரப்பில் ஊசியை நுழைத்து, துணியின் அடுத்தபக்கத்திலிருந்து ஊசியை வாங்கி, அங்கிருந்து திரும்பவும் நுழைக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் கைக்கு இரண்டு வேலைகள்.
  • கைக்குட்டையைத் தைப்பது கொஞ்சம் எளிதுதான். பெரிய, நீளமான துணிகளை? ரொம்பவே கஷ்டம்தான் இல்லையா… இதனை யோசித்துக்கொண்டே ஒரு கண்டுபிடிப்பாளர் தூங்கிவிட்டார். அவருக்கு ஒரு கனவு. அவரை நாகரீக வாசனையற்ற ஒரு கொலைவெறி பிடித்த காட்டுவாசிக் கூட்டம் ஒன்று சிறைபிடித்துவிடுகிறது. எல்லோர் கண்களிலும் ரத்த வெறி. பயந்து நடுங்குகிறார். அவரைச் சுற்றி நிற்போரின் கைகளில் ஈட்டிகள். எல்லா ஈட்டியின் முனைகளிலும் துளைகள் இடப்பட்டிருந்தன.
  • ஆஹா வென்று எழுந்தார் கனவிலிருந்து. அதன் பிறகுதான் ஊசியின் முன்பக்கத்தில் துளையிட்டு துணி தைக்கும் தையல் ஊசி பிறந்தது” என்று எழுதியிருப்பார் உதயமூர்த்தி. இந்த எடுத்துக்காட்டில் நிகழ்ந்தது என்ன? அந்த விஞ்ஞானி/கண்டுபிடிப்பாளர் இரவு பகலாக தையல் ஊசிக்கான தீர்வை நினைத்துக்கொண்டே இருப்பார்.
  • அவர் தூங்கினாலும் அவரது ஆழ்மனது தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தது. அவருக்கான தீர்வை அது கண்டுபிடித்துக்கொடுத்தது. உண்மைதான். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் சொன்னதுபோல உங்களை உறங்கவிடாமல் செய்வதுதான் உங்கள் லட்சியக் கனவு. அதுதான் தீர்வுகளை நோக்கி உங்களை உந்தித்தள்ளுகிறது.

துல்லியம் முக்கியம்:

  • ஒரு சாதாரண யோசனைக்கும் ‘பிரமாதமான’ யோசனைக்கும் என்ன வேறுபாடு? துல்லியத்தன்மைதான். அங்கு இங்கு பராக்கு பார்க்காமல் உங்கள் மூளை, துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதைப்போலப் பார்க்கும் கூர்மைதான். துணிக்கடைக்குப் போய், “ஏதாவது ஒரு சேலையைக் கொடுங்கள்” என்றா கேட்கிறோம்? இல்லையே…மாறாக, முதலில் ஒரு கடையைத் தேர்ந்தெடுத்து நமக்கான பிரிவைத் தேர்ந்தெடுக்கிறோம். அதன்பிறகு, நமது கையிருப்புக்கு ஏற்ப எங்கு துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று பார்க்கிறோம். அதன்பிறகு “இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள சேலைகளைக் காட்டுங்கள்” என்கிறோம்.
  • பின்னர் வண்ணத்தின் அடர்த்தியைக்கொண்டு சிலவற்றைக் கழிக்கிறோம். பூ வேலைப்பாடுகளைப் பார்க்கிறோம். அப்படியே ஓரக்கண்ணால் நமக்குப் பக்கத்தில் நிற்கும் பெண்மணி தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் சேலைகளையும் நோட்டம் விட்டு ஒப்பிட்டுக் கொள்கிறோம். பின்னர் விலை கட்டுப்படியானால் நாம் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் சேலையை வாங்குகிறோம். ஆக, உள்ளுக்குள் ஏதோ ஒன்று, ‘நமக்கு இதுதான் வேண்டும்’ ஒரு ‘குறித்த’ இலக்கை நோக்கித் தள்ளுகிறது அல்லவா… அதுதான் உங்கள் வணிக யோசனையிலும் இருக்கவேண்டும்.
  • இதுவரை யாருமே சிந்தித்திராத விஷயமாகவும் அது இருக்கலாம் (ஏன் மனிதன் வானத்தில் பறக்கக்கூடாது என்று சிந்தித்த ரைட் சகோதரர்களைப்போல!) அல்லது ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வடைகளை சுடும் இயந்திரங்களைக் கண்டுபிடித்த பொறியியல் நிறுவனத் தலைவர்களின் யோசனையாகவும் இருக்கலாம். இவ்விஷயத்தில் பொன் விதி ஒன்று இருக்கிறது.
  • அதுதான், பிரச்சினையைக் கண்டுபிடிப்பது, அதற்கான தேவை உள்ளோரிடம் பேசுவது, பிரச்சினைக்கான தீர்வைத் தொழில்நுட்பம் கொண்டு தீர்க்க முயல்வது, சந்தையில் அது பிழைக்க வாய்ப்பிருக்கிறதா என்பதை அலசுவது, உங்கள் தீர்வு அளந்து பார்க்கவும், வளரவும் (scalability) வாய்ப்பைக் கொண்டிருப்பதாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்வது. இவற்றையெல்லாம் உள்ளடக்கியதாக உங்கள் வணிக யோசனை இருந்தால் அது நிச்சயம் ‘பிரமாதமான’ யோசனைதான்!

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories