- சென்னையைப் புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலின் விளைவாக, எண்ணெய்க் கசிவால் எண்ணூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் இரட்டைப் பேரிடரை எதிர்கொண்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. மிக்ஜாம் புயலின்போது பெய்த தொடர் மழையால், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனிலிருந்து (சிபிசிஎல்) கசிந்த எண்ணெய், எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்தது மிகப் பெரிய மாசுபாடு பிரச்சினையை உருவாக்கியிருக்கிறது. இதன் தாக்கம் எண்ணூர், எர்ணாவூர், பக்கிங்காம் கால்வாய் ஆகிய பகுதிகளுக்கு நீண்டது. எண்ணெய் கலந்த நீர் வெள்ளத்துடன் கலந்து, அருகே இருக்கும் வீடுகளுக்குள்ளும் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். பல வீடுகளில் எண்ணெய்ப் படலம் படிந்து, அதை அகற்ற முடியாமல் மக்கள் துன்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். வீட்டு உபயோகப் பொருள்களைக்கூடப் பயன்படுத்த முடியாத நிலையில் பலர் இருக்கிறார்கள்.
- தாழங்குப்பம், காட்டுக்குப்பம், நெட்டுக்குப்பம் போன்ற கடலோரப் பகுதிகளிலும் எண்ணெய்ப் படலம் மிதப்பதால், எட்டு மீனவக் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணெய்க் கசிவு பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கொசஸ்தலை ஆற்றில் கலந்ததால், அதில் உள்ள மீன்கள் உயிரிழந்தன. கடற்கரையோரத்திலும் முகத்துவாரத்திலும் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகளும் எண்ணெய்ப் படலத்தில் சிக்கியதால், அவற்றை இயக்க முடியாத நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், கடந்த 14 நாட்களாக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் துரித கதியில் செயல்பட்டிருக்க வேண்டிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மிகவும் தாமதமாகவே செயல்படத் தொடங்கியது.
- இப்பிரச்சினையைத் தென் மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட பிறகே மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கையைத் தொடங்கியது. சிபிசிஎல் மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புகார் கூறிய நிலையில், தங்கள் ஆலையிலிருந்து எண்ணெய் வெளியேறவில்லை என்று அந்நிறுவனம் விளக்கமளித்தது. இதுகுறித்து விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் எண்ணெய்ப் படலத்தை விரைந்து அகற்ற உத்தரவிட்டது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்களே எண்ணெய்ப் படலத்தை அகற்றுவதிலும் முன்னிற்கிறார்கள். முதலில் எண்ணெய் உறிஞ்சும் காகிதம், குவளை ஆகியவற்றைக் கொண்டே எண்ணெய்ப் படலம் அகற்றப்பட்டிருக்கிறது. பிறகே ‘ஆயில் ஸ்கிம்மர்’, ‘பொக்லைன்’, ‘டிப்பர்’ போன்ற இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. 2017இல் எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில் டன் கணக்கில் எண்ணெய் கடலில் கலந்தது. அப்போது வாளிகள் மூலம் எண்ணெய்ப் படலம் அகற்றப்பட்டது.
- இத்தனை ஆண்டுகள் ஆகியும் எதுவும் மாறவில்லை என்பதையே தற்போதைய நிகழ்வும் உணர்த்துகிறது. சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் நிலவும் எண்ணூர் போன்ற பகுதிகளில், பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் அதை உடனுக்குடன் தீர்ப்பது குறித்த வழிகாட்டும் நெறிமுறைகள் தேவை. தீவிரமான இந்தப் பிரச்சினையை, சிபிசில் கையாண்ட விதம் தவறு. எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிபிசில் உரிய இழப்பீடுகளைத் தர வேண்டும். எண்ணெய்க் கசிவு ஏற்பட்டால் நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் அது விரைவாக அகற்றப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும். பிரச்சினை வந்த பின்னர் விழித்துக்கொள்வதற்குப் பதிலாக, சுற்றுச்சூழல் சவால்கள் மிகுந்த இதுபோன்ற பகுதிகளைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இடைவிடாமல் கண்காணித்து வர வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 12 – 2023)