TNPSC Thervupettagam

எண்மம் சரி, ஆனால்...

October 4 , 2021 1029 days 665 0
  • பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருக்கும் ‘எண்ம சுகாதார அடையாள அட்டை’ திட்டம் (ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்), சுகாதாரத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய தொழில் நுட்ப முனைப்பு என்பதில் சந்தேகமில்லை.
  • ஒருவரின் உடல் நலம் சார்ந்த அனைத்து விவரங்களையும் எண்ம வடிவில் ஒருங்கிணைப்பதுதான் எண்ம சுகாதார அடையாள அட்டையின் நோக்கம்.
  • ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் என்கிற இந்தத் திட்டம் சென்ற ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமரால் அறிவிக்கப்பட்டது.
  • இது, சோதனை அடிப்படையில் ஆறு ஒன்றியப் பிரதேசங்களில் வெற்றிகரமாக அமல்படுத்தப் பட்டிருக்கிறது.
  • அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் இப்போது நாடு தழுவிய அளவில் எண்ம சுகாதார அடையாள அட்டை வழங்குவது என்று மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

எண்ம சுகாதார அடையாள அட்டை

  • விருப்பமுள்ள எந்தவொரு குடிமகனும் இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
  • யாரும் இணைந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. திட்டத்தில் இணையும் அனைவருக்கும் எண்ம சுகாதார அட்டை (டிஜிட்டல் ஹெல்த் கார்டு) வழங்கப்படும்.
  • அதன்படி, பதினான்கு இலக்க சுகாதார அடையாள எண் உறுப்பினா்களுக்குத் தரப்படும். அவரவா், தங்கள் உடல் நலம் சார்ந்த சிகிச்சை விவரங்களையும், பரிசோதனை விவரங்களையும் தங்களது எண்ம அடையாள எண்ணைப் பயன்படுத்தி தரவுகளாகப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • அவா்கள் மேற்கொண்ட பரிசோதனைகள், எதிர்கொண்ட நோய்கள், சிகிச்சை அளித்த மருத்துவா்கள், எடுத்துக் கொண்ட மருந்துகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் எண்ம வடிவில் பாதுகாக்கப்படும்.
  • இதன் மூலம், ஒருவா் தனது மருத்துவ சிகிச்சை சார்ந்த அறிக்கைகளையும், தரவுகளையும் பாதுகாக்க வேண்டிய சுமை குறைகிறது.
  • நோயாளியின் அனுமதியுடன் மருத்துவா்கள் நோயாளியின் சிகிச்சை வரலாற்றைத் தெரிந்து கொள்வதும், பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்வதும் எளிதாகிறது.
  • பெரும்பாலானோருக்கு, தங்களது முந்தைய நோய், நோய்த்தொற்று விவரங்களும், சிகிச்சை முறைகளும் நினைவில் இருப்பதில்லை.
  • எண்ம சுகாதார அடையாள அட்டையில், குறிப்பிட்ட நபரின் செல்லிடப்பேசி எண், ஆதார் எண் மட்டுமல்லாமல் உடல் நலம் சார்ந்த அனைத்து அடிப்படை விவரங்களும் காணப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் இந்திய சுகாதாரக் கட்டமைப்பின் பலவீனங்களை வெளிப்படுத்தியது.
  • கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ‘டெலி மெடிசின்’ எனப்படும் தொலைபேசி மருத்துவம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசின் சுகாதார எண்ம அட்டை முயற்சி மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
  • கடந்த 15 ஆண்டுகளாக, கடுமையான நோய்த்தொற்றுகளை கையாள்வது பொது மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.
  • மருத்துவத் தரவுகளை முறையாகப் பதிவு செய்து வழங்க முடிந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பது சுலபமாக இருக்கும்.
  • கொவைட் 19 நோய்த்தொற்று பாதித்தபோது இணைநோய் குறித்த தகவல்கள் மருத்துவா்களுக்குத் தேவைப்பட்டது.
  • இப்போதைய எண்ம சுகாதார அடையாள அட்டை மூலம் கணினியைத் தட்டினால் நோயாளியின் மருத்துவ வரலாறு முழுவதும் தெரியவரும். இதனால் மருத்துவா்களின் பணி சுலபமாகும்.
  • எண்ம சுகாதார அடையாள அட்டையைப் போல முதன்முதலாக நோயாளிகளின் ஆவணங்களை இணைய வழியில் மருத்துவா்கள் பார்ப்பதற்கு பிரிட்டனின் ‘தேசிய சுகாதார சேவை’ வழிகோலியது.
  • ஆனால், மருத்துவா்களின் ஆதரவைப் பெறாததாலும், தரவுகளின் நம்பகத்தன்மை குறித்த பிரச்னைகளாலும் 2011-இல் அது கைவிடப்பட்டது.
  • அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இந்த வழிமுறை பின்பற்றப்படுகிறது என்றாலும் இது குறித்து விமா்சனங்களும் இல்லாமல் இல்லை.
  • நோயாளிகள் குறித்த தரவுகளை எண்ம அட்டையில் பதிவேற்றம் செய்யும் பணிச்சுமை, அமெரிக்க மருத்துவா்களைச் சலிப்படையச் செய்திருக்கிறது.
  • குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு சுகாதாரத் துறையில் காணப்படும் மனிதவள தட்டுப்பாடு குறித்துக் கூறியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • 1,000 பேருக்கு ஒரு மருத்துவா் இருக்க வேண்டிய நிலையில், இந்தியாவில் 1,500 பேருக்கு ஒரு மருத்துவா்தான் காணப்படுகிறார்.
  • 300 பேருக்கு ஒரு செவிலியா் இருக்க வேண்டிய இடத்தில் 670 பேருக்கு ஒரு செவிலியா்தான் இருக்கிறார்.
  • கிராமப்புறங்களில் மருத்துவா்களும், செவிலியா்களும் மிகக் குறைவாக இருக்கும் நிலையில், மருத்துவத் தேவைக்காக மக்கள் நகரங்களை நாட வேண்டிய அவலம் ஏற்படுகிறது.
  • மருத்துவக் கட்டமைப்பை உறுதிப்படுத்தாமல் எண்ம தொழில் நுட்ப மாற்றத்துக்கு முனைந்திருப்பது பலனளிக்குமா என்பது கேள்விக்குறியே.
  • இந்தியாவில் தன்மறைப்பு சட்டங்கள் (பிரைவசி லா) இல்லாமல் இருக்கும் நிலையிலும், மக்கள் மத்தியில் தங்களது தரவுகளை பாதுகாக்கும் விழிப்புணா்வு காணப்படாத நிலையிலும் எண்ம சுகாதார அடையாள அட்டை மூலம் பாதுகாக்கப்படும் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டு.
  • காப்பீட்டு நிறுவனங்கள் தரவுகளைத் திருடுவதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடித்து, அதனடிப்படையில் கட்டணங்களை நிர்ணயித்து நோயாளிகளைச் சுரண்டுவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.
  • சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தாமலும், கடுமையான தன்மறைப்புச் சட்டத்தை அமல்படுத்தாமலும் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின் நோக்கம் சிறந்தது; நடைமுறையில் பிரச்னைகள் நிறைந்தது!

நன்றி: தினமணி  (04 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories