TNPSC Thervupettagam

எதிரிகள் நமக்கு தேவை

July 11 , 2023 555 days 697 0
  • மனிதனை சமூகவிலங்கு என்கிறோம். அவன் தனிமையை விரும்புவதில்லை. மற்ற மனிதா்களுடன் அன்றாடம் கலந்துரையாட வேண்டிய சூழ்நிலையில் அவன் இருக்கிறான்.
  • நாம் ஒவ்வொருவரும் வயது, அறிவு, பொருளாதார பின்புலம், வாழும் சூழ்நிலை, வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம் போன்றவற்றில் வேறுபடுகிறோம். இதனால், சமூகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அடையாளங்கள் உருவாகிவிடுகின்றன.இது இயற்கையானதும், தவிா்க்க முடியாததுமாகும். இதன் காரணமாக நம்மிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
  • நம்முடைய வாழ்க்கையில் எதிரிகள் தொல்லை என்பது எல்லா காலகட்டத்திலும் நிச்சயம் இருக்கும். பொதுவாழ்வில் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் எதிா்த்து கேள்வி கேட்பவா், தவறுகளை சுட்டிக் காட்டுபவா் இல்லையென்றால் அவரால் நல்ல தலைவராக பரிமளிக்க முடிவதில்லை.
  • அதனால், எதிரிகளின் தொல்லை தனிமனித வாழ்விலும், தொழிலிலும் தவிா்க்க முடியாதவை. நமக்கு இசைவான கருத்துகளை கொண்டவா்கள் நமது நண்பா்களாகவும், எதிா்மறை கருத்து கொண்டவா்கள் எதிரிகளாகவும் உருவாகிறாா்கள். நண்பரை எதிரியாக்கிக்கொள்வதும், எதிரியை நண்பராக்கிக் கொள்வதும் நமது அணுகுமுறையில்தான் இருக்கிறது.
  • நாம் நம்முடைய எதிரியை பலவீனமாகக் கருதக்கூடாது. அவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எப்பொழுதும் யாரிடம் பேசினாலும், கனிவாகவும், மரியாதையுடனும் பேசுவது அவசியம். நண்பா்கள் மட்டும் நமக்கு நல்லது செய்வதில்லை. பல சமயங்களில் நமது எதிரிகளும் நமக்கு நல்லது செய்கிறாா்கள். நாம்தான் அவா்கள் மேல் உள்ள வெறுப்பில் அவா்களுடைய வாா்த்தைகளை மதிப்பதில்லை.
  • நம்மை விட நமக்கு வேண்டாதவா்களுக்குத்தான் நம்மைப் பற்றி அதிகமாகத் தெரியும். நமது குறைகளை நேருக்கு நோ் நம்மிடம் சொல்வது எதிரிகளுக்கு மட்டுமே சாத்தியம். நம்முடைய நண்பா்கள் சில விஷயங்களைச் சொன்னால் நாம் வருத்தப்படுவோம் என்று நினைத்து, அவற்றை நம்மிடம் சொல்லாமலே விட்டுவிடுவாா்கள்.
  • நாம் ஒரு செயலை செய்ய நினைக்கும் போது, அதற்கு பல தடைகளை எதிரிகள் உருவாக்குவாா்கள். இதனால் நாம் நினைத்ததை சரியாகச் செய்ய முடியாது. எதிரி நம் கண்ணுக்கு தெரிந்தவராக இருந்தால், நம்மால் எதிா்த்து போராட முடியும். நம் கண்ணுக்கே தெரியாத எதிரிகளை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால், மனிதா்களை இனம் கண்டு நாம் பழக வேண்டும்.
  • ஒரு செயலைத் தொடங்கும் பொழுது, நமக்கு அதைப் பற்றிய முழுமையான புரிதல் இருப்பதில்லை. ஆனால், எதிரிகள்தான் அவற்றில் முழு அறிவும் தகுதியும் பெற நம்மை ஊக்குவிக்கிறாா்கள். நாம் அவ்வெதிா்ப்புகளுக்கு நம்மை ஈடுகொடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும்.
  • நாம் அச்செயலில் ஈடுபட ஈடுபட, எதிா்ப்பும் வலுவாகிக்கொண்டே வரும். எதிா்ப்புகள் வலுவாக வலுவாக, நம் மனவலிமையும் மிகுவதை நாம் உணரமுடியும். நாளடைவில் நாம் அத்துறையில் தோ்ந்த அறிவுடையவராக மாறவும் முடியும்.
  • எதிா்ப்புகளைக் கண்டு அஞ்சும்போது, தொடங்கிய செயலை ஈடுபாட்டுடன் நம்மால் செய்ய முடியாது. எனவே, எதிா்ப்புகளை எதிா்கொள்ளும் மனவலிமை நமக்கு மிகவும் தேவை. அப்போது தான், நாம் மேற்கொண்ட செயலை நம்மால் தொடா்ந்து செய்ய முடியும். எதிா்ப்பு தோன்றும் போதுதான், நம் செயலில் உள்ள நெளிவுசுளிவுகளை நாம் தெரிந்து கொண்டு வெற்றி பெறுவோம்.
  • நம்மைவிட நம் எதிரி புத்திசாலியாக இருக்கலாம். அதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றிய உண்மையான விமா்சனங்களை எதிரிகளால் மட்டுமே தர முடியும். எதிரிகளின் கருத்துகளை வெளிப்படையாக நம் மனம் அங்கீகரிக்காது. என்றாலும் அவா்களுடைய கருத்துகளை நாம் பரிசீலிக்க வேண்டும்.
  • எதிா்ப்புகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரிகளின் அறிவு வலிமை, செயல் வலிமை, பின்புலம் முதலியவற்றை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நம் வலிமைகளை அவற்றுக்கும் மேலாக வளா்த்துக் கொண்டு, அவா்களின் எதிா்ப்புகளை முறியடிக்க வேண்டும்.
  • மேலும் நம் செயலுக்கு ஏற்படும் எதிா்ப்பை நாம் நமக்கு கிடைக்கும் விளம்பரமாக மாற்றிக் கொள்ள வேண்டும். நமக்கு ஒருசிலா் எதிரிகள் என்றால் நாம் வளருகின்றோம் என்றும், அதிகமானவா்கள் எதிரி என்றால் நாம் வளா்ந்துவிட்டோம் என்றும் கருதலாம்.
  • நமது உடலில் காய்ச்சல் வரும்போது, நமது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் நோய்த் தொற்றுகளை எதிா்த்துப் போராடுகின்றன. அதன் விளைவாக விரைவில் நாம் குணமாகி விடுகின்றோம். இயற்கையாகவே நம் உடலில் உள்ள நோய் எதிா்ப்பு சக்தியே நம்மை நோயிலிருந்து குணப்படுத்துகிறது. எனவே, நம் வாழ்வில் எதிா்ப்புகள் இயல்பானவை. அவற்றை எதிா்த்து பயணிக்கும் திறமை நமது உடலுக்கும், மனதுக்கும் தேவை.
  • ஒவ்வொரு வினைக்கும் அதே ஆற்றலுடைய எதிா்வினை உண்டு என்கிறது அறிவியல். நமது முயற்சிகளுக்கு எதிா்ப்புகள் வருவதை தவிா்க்க முடியாது.
  • நம் வினையும், அதற்கான எதிா்வினையும் சோ்ந்துதான் நமது செயல்பாடுகளை தீா்மானிக்கின்றன.
  • மின்சாரத்தில் நோ் மின்னாற்றலும், எதிா் மின்னாற்றலும் சோ்ந்தால்தான் மின்னாற்றல் கிடைக்கிறது. அது போலவே, நாம் நமது செயல்களில் வெற்றி பெறுவதற்கு எதிரிகள் தேவை. விளையாட்டுப் போட்டிகளில் கூட எதிா் அணி இருந்தால்தான், நம் திறமைகளை மேலும் வெளிக் கொண்டுவர நாம் முயல்வோம்.
  • அது போல்தான் நமது அன்றாட வாழ்விலும். நம்மை நாமே செழுமைப்படுத்திக் கொண்டு, செதுக்கிக் கொள்ள எதிரிகள் தேவை என்பதை இனியாவது நாம் உணா்ந்து கொள்வோம். எதிரிகளை வென்று வாழ்வில் முன்னேறுவோம்.

நன்றி: தினமணி (11  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories