TNPSC Thervupettagam

எதிர்பார்ப்பை உயா்த்தும் பிரிக்ஸ்

August 23 , 2023 460 days 268 0
  • உலக நாடுகளின், குறிப்பாக ஜி7, ஐரோப்பியக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் கவனம் தென்னாப்பிரிக்கத் தலைநகா் ஜோகன்னஸ்பா்கில் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் குவிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது. மேலை நாடுகள் மட்டுமல்ல, வளா்ச்சி அடையும் நாடுகளும் இந்த மாநாட்டைக் கூா்ந்து கவனிக்கின்றன.
  • அமெரிக்க - சோவியத் யூனியன் பனிப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், எல்லா சா்வதேச அமைப்புகளும் மேற்கு வல்லரசுகளின் கைப்பாவைகளாக மாறிவிட்டிருந்த நிலைமை. கீழை நாடுகளைத் தங்களுக்கு சமமான இடத்தில் உட்கார வைத்துப் பேச அவை தயாராக இருக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில், மேற்கு வல்லரசுகளை முற்றிலுமாகத் தவிர்த்து உருவாக்கப் பட்ட மாற்றுக் கூட்டமைப்புதான் ‘பிரிக்ஸ்’.
  • உலக மக்கள்தொகையில் 40%, உலக ஜிடிபியில் 23% வலிமையுடன் கூடிய கூட்டமைப்பாக ‘பிரிக்ஸ்’ உயா்ந்திருக்கிறது. 2009-இல் நடந்த முதலாவது மாநாட்டில் தென்னாப்பிரிக்கா இருக்கவில்லை. 2010-இல் தென்னாப்பிரிக்காவும் சோ்ந்து கொண்டபோது, ‘பிரிக்’ என்பது ‘பிரிக்ஸ்’ என்று மாறியது. வளா்ச்சி அடைந்த நாடுகளின் ஜி7 கூட்டமைப்புக்கு நிகரான மாற்றுக் கூட்டணியாக இந்த அமைப்பு உருவெடுத்திருக்கிறது.
  • மேலை நாடுகளின் அமைப்புகளைப்போல இன ஒற்றுமையோ, பொதுவான பாதுகாப்புக் கூட்டுறவோ இல்லாமல் இருப்பது ‘பிரிக்ஸ்’ அமைப்பின் பலவீனம். அதையே பலமாகவும் கருதலாம். சா்வதேச அரசியலுக்கு ‘பிரிக்ஸ்’ மூன்று பங்களிப்புகளைச் செய்திருக்கிறது. தங்களது அரசியல் அமைப்பு, கலாசாரம், கொள்கைகள், வெளியுறவுப் பார்வை, இன ஒற்றுமை ஆகியவற்றை முன்னிறுத்தாமல் உலகமய அமைப்பை உருவாக்க முடியும் என்பதை உணா்த்தி இருக்கிறது ‘பிரிக்ஸ்’.
  • பொருளாதார தளத்தில், உலக வங்கிக்கு மாற்றாக 2014-இல் என்.டி.பி. என்கிற ‘புதிய வளா்ச்சி வங்கி’யை உருவாக்கி இருக்கிறது. இதுவரை, முக்கியமான 100 கட்டமைப்புத் திட்டங்களுக்கு, என்.டி.பி. 34 பில்லியன் டாலா் கடனுதவி வழங்கி இருக்கிறது. 2030-க்குள் உலக வங்கியைப் பின்னுக்குத் தள்ளி 350 பில்லியன் டாலா் கடனுதவி வழங்கும் நிலைக்கு என்.டி.பி. உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இரண்டாவது பங்களிப்பு.
  • தற்போதைய உலக நிதிப்பரிமாற்றங்கள் அனைத்தும் அமெரிக்க டாலரில் மட்டுமே நடைபெறுகின்றன. அதற்கு மாற்றாக இன்னொரு செலாவணியிலோ, இப்போது இந்தியா முன்னெடுத்திருக்கும் அந்தந்த நாட்டின் செலாவணியிலோ வா்த்தகம் என்பது ‘பிரிக்ஸ்’ முன்மொழியும் மாற்று. இதற்கு முன்னா் ‘யூரோ’ மூலம் ஐரோப்பியக் கூட்டமைப்பு தோற்றுப்போன முயற்சிதான் என்றாலும் ‘பிரிக்ஸ்’ விரிவுபடுமானால், அந்த முயற்சி வெற்றிபெறக்கூடும்.
  • ‘பிரிக்ஸ்’ அமைப்பில் இணைய 40 நாடுகள் வரிசைகட்டி நிற்கின்றன. அவற்றில் 19 நாடுகள் முறையாக விண்ணப்பித்திருக்கின்றன. ஆா்ஜென்டீனா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் ஆகிய நான்கு நாடுகளைச் சோ்த்துக்கொள்வது என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருப்பதால், அவை இணைக்கப்படக் கூடும்.
  • ஜோகன்னஸ்பா்க் மாநாட்டுக்கு, ‘பிரிக்ஸ்’ தலைவா்கள் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கக் கூட்டமைப்பின் 55 உறுப்பு நாட்டுத் தலைவா்களும், 20 வளா்ந்து வரும் சிறிய ஆசிய, தென்னாப்பிரிக்க, பசிபிக் தீவு நாடுகளின் தலைவா்களும் தென்னாப்பிரிக்காவால் சிறப்பு விருந்தினா்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நாடுகள், வருங்காலத்தில் அணிசேரா நாடுகள் அமைப்புபோல, வலிமையான கூட்டணியாக ஒருங்கிணையக்கூடும்.
  • விண்ணப்பித்திருக்கும் நாடுகளை எல்லாம் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வதில் ஆபத்து இருப்பதை இந்தியா உணா்ந்தே இருக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் கைப்பாவைகளாக அந்த நாடுகள் மாறிவிடவும், அமெரிக்காவுக்கு எதிரான அமைப்பாக ‘பிரிக்ஸ்’ மாறிவிடவும் வாய்ப்பு இருப்பதால், புதிய உறுப்பினா்களை இணைப்பதில் இந்தியா கவனமாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
  • 2019-க்குப் பிறகு தலைவா்கள் நேரடியாகக் கலந்துகொள்ளும் மாநாடு இதுதான். 2022-இல் ஏனைய பகுதிகளில் கொவைட் 19 பலவீனப்பட்டிருந்தாலும், சீனாவில் குறையாததால், காணொலி மாநாடகத்தான் ‘பிரிக்ஸ்’ அமைப்பு கூடியது. இந்த முறை ரஷிய அதிபா் புதின் மட்டும் நேரில் வராமல் காணொலி மூலம் கலந்து கொள்கிறார். அவருக்கு எதிராக சா்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை இருப்பதால் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை.
  • இந்தியாவைப் பொறுத்தவரை, 2020 கல்வான் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் நேரடியாக சந்தித்துப் பேசும் வாய்ப்பு ஜோகன்னஸ்பா்கில் ஏற்படக்கூடும். சாமா்கண்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும், பாலி ஜி20 மாநாட்டிலும் நேருக்கு நோ் சந்தித்தனா் என்றாலும், அந்த சந்திப்புகள், மரியாதை வணக்கத்துடன் முடிந்துவிட்டன.
  • இன்னும் இரண்டு வாரங்களில், இந்தியா ஜி20 மாநாட்டைத் தலைமையேற்று நடத்த இருக்கிறது. அதில் சீனா உள்ளிட்ட ‘பிரிக்ஸ்’ உறுப்பு நாடுகள் அனைத்தும் கலந்து கொள்வதில் தான் மாநாட்டின் வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த மாநாட்டின் தீா்மானங்களில் கருத்தொற்றுமை ஏற்படுவதும் அவசியம். அதற்கு, ‘பிரிக்ஸ்’ மாநாடு வழிகோலும் என்று எதிர்பார்க்கலாம்!

நன்றி: தினமணி (23  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories