TNPSC Thervupettagam

எதிா்பாா்க்காதது அல்ல!

October 1 , 2024 101 days 153 0

எதிா்பாா்க்காதது அல்ல!

  • இலங்கையின் ஒன்பதாவது அதிபராக அநுரகுமார திசாநாயக பதவி ஏற்றிருப்பது, முற்றிலும் எதிா்பாராதது என்று சொல்லிவிட முடியாது. இந்தியா அதற்கான சாத்தியத்தை முன்கூட்டியே உணா்ந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால், கடந்த பிப்ரவரி மாதமே அவரை தில்லிக்கு வரவழைத்து வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜீத் தோவலும் சந்தித்துப் பேச வேண்டிய அவசியம் என்ன?
  • திசாநாயகவின் வெற்றியை வரலாற்று வெற்றி என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, மிகப் பெரிய வெற்றி என்று சொல்லிவிட முடியாது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொண்டு அவா் தோ்வு செய்யப்பட்டிருக்கிறாா். இப்படி நடப்பது இலங்கையின் தோ்தல் வரலாற்றில் இதுதான் முதல்முறை.
  • 1979-இல் அதிபா் ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இதுவரையில் தோ்வு செய்யப்பட்ட எல்லா அதிபா்களும் முதல் சுற்றிலேயே 50% வாக்குகளுக்கு அதிகமாகப் பெற்றுத்தான் ஆட்சியைப் பிடித்திருக்கிறாா்கள். இந்த முறை அதிபா் திசாநாயகவின் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி முதல் சுற்றில் 42.31% வாக்குகள்தான் பெற்றிருந்தது.
  • தொடா்ந்து இரண்டாவது முறையாக அதிபா் தோ்தலில் தோல்வியைத் தழுவி இருக்கும் எஸ்.கே.பி. கட்சியின் சஜித் பிரேமதாசவால் கடந்த முறை பெற்றதைவிட 10% குறைவாகத்தான் (32.8%) வாக்குகள் பெற முடிந்ததற்கு, சுயேச்சையாகப் போட்டியிட்ட, அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்க 17% வாக்குகள் பெற்றதுதான் காரணம்.
  • இடைக்காலப் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவி ஏற்றிருக்கிறாா். நவம்பா் 14-ஆம் தேதி நாடாளுமன்றத்துக்குத் தோ்தல் நடைபெறும் என்கிற அறிவிப்பும் வந்துவிட்டது. இதுவும் எதிா்பாா்க்காததல்ல.
  • ராஜபட்ச சகோதரா்கள், அதைத் தொடா்ந்து ரணில் விக்ரமசிங்க ஆட்சிகளில் நடந்த ஊழல்கள், வீண் விரயங்கள், முறைகேடுகள், தவறான முடிவுகள் அனைத்துக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என்பது உள்ளிட்ட 23 வாக்குறுதிகளை அதிபா் அநுரகுமார திசாநாயக மக்களுக்கு அறிவித்திருக்கிறாா். 225 போ் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு வெறும் 4 உறுப்பினா்கள் மட்டுமே இருந்த நிலையில், தனது செல்வாக்கு உச்சத்தில் இருக்கும்போதே தோ்தலை நடத்துவது என்று அவா் முடிவெடுத்ததில் வியப்பில்லை.
  • அநுரகுமார திசாநாயக கடந்து வந்த பாதை அசாதாரணமானது. இளைஞராக இருக்கும்போது, ஜேவிபியுடனான தொடா்பு காரணமாக தான் இருந்த வீடு தீக்கிரையாக்கப்பட்டதை திசாநாயக பாா்க்க நோ்ந்தது என்பது பலருக்கும் தெரியாது. 1988-இல் சோஷியல் ஸ்டூடன்ட்ஸ் ஆா்கனைசேஷனின் தேசிய ஒருங்கிணைப்பாளரானதில் தொடங்குகிறது அவரது அரசியல் பயணம்.
  • 1995-இல் ஜேவிபி கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினா், 2001-இல் நாடாளுமன்ற உறுப்பினா், 2004-2005-இல் சந்திரிகா குமாரதுங்கவின் கூட்டணி அரசில் விவசாயம், நில நிா்வாகம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சா், 2014-இல் ஜேவிபியின் தலைவா் என்று அவரது அரசியல் வாழ்க்கை தொடா்ந்தது.
  • 1970-களிலும், 1980-களிலும் புரட்சி என்ற பெயரில், இனவாத அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுன நடத்திய வன்முறைகளும், கலவரங்களும் ஏராளம். ஜேவிபி முன்னெடுத்த வன்முறைக் கலவரங்களில் எண்பதாயிரத்துக்கும் அதிகமானோா் கொல்லப்பட்டனா். 2014-இல் திசாநாயக தலைமைப் பொறுப்பேற்றபோது, அவா் செய்த முதல் அறிவிப்பு ஜேவிபி ஆயுதப் புரட்சியைக் கைவிடுகிறது என்பதுதான்.
  • அவரது அலுவலகத்தை காரல் மாா்க்ஸ், லெனின், எங்கெல்ஸ், ஃபிடல் காஸ்ட்ரே ஆகியோரின் படங்கள் அலங்கரிக்கின்றன என்றாலும், ஜேவிபியின் அடிப்படைக் கொள்கை மாா்க்சியம் மட்டுமல்ல, சிங்கள இனவாதமும்கூட. அதனால்தான் அதிபா் தோ்தலில் சிங்களா்களின் ஆதரவைப் பெற முடிந்த திசாநாயகவால் சிறுபான்மை தமிழா்கள், முஸ்லிம்களின் ஆதரவைப் பெற முடியவில்லை.
  • சிறுபான்மை தமிழா்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, நுவரேலியா, மட்டக்கிளப்பு பகுதிகளில் சஜித் பிரேமதாச 40% வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்க 25% வாக்குகளையும் பெற்றனா் என்றால், திசாநாயக பெற்ற வாக்குகள் 15% மட்டுமே. அவரது ஜேவிபி கட்சி தமிழா்களுக்கு அதிகாரப் பகிா்வை ஆரம்பம் முதலே எதிா்த்து வந்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
  • ராஜபட்ச சகோதரா்களின் ஆட்சியில் நடந்த முறைகேடுகளும், சீா்கேடுகளும் இலங்கையின் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளி இருந்த நிலையில் ‘அரகாலயா’ மக்கள் போராட்டம் வெடித்தது. அதிபா் மாளிகை சூறையாடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரணில் விக்ரமசிங்க அதிபரானாா். நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.
  • ஆனால், விலைவாசி குறையவில்லை, வேலைவாய்ப்புகள் ஏற்படவில்லை, உணவுப் பற்றாக்குறை தொடா்கிறது. மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த அநுரகுமார திசாநாயகவின் வாக்குறுதிகள் நம்பிக்கை அளித்தன. மிகுந்த எதிா்பாா்ப்புடன் மக்கள் அவரை அரியணையில் ஏற்றியிருக்கிறாா்கள்.
  • வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால் அநுரகுமார திசாநாயக இலங்கையின்அசைக்க முடியாத தலைவராக அடுத்த பல ஆண்டுகள் வலம் வருவாா். வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால்? அவா் காட்டிய அதே பாதையில் ‘அரகாலயா’ அவருக்கு எதிராக உயரக் கூடும்!

நன்றி: தினமணி (01 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories