TNPSC Thervupettagam

என்ன செய்யலாம் ஹமாஸ் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

December 11 , 2023 382 days 212 0
  • அகதி முகாம்களில் இருப்போரையும் சேர்த்து, இன்றைய தேதியில் காஸாவில் வசிக்கும் மொத்த மக்களின் எண்ணிக்கை 23 லட்சம். இன்று நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தின் விளைவாக இறந்து கொண்டிருப்போரின்
  • எண்ணிக்கை இன்னும் சரியாகவெளியே வரவில்லை. 14 ஆயிரம் காஸாவாசிகள் இஸ்ரேலியத் தாக்குதலில் இறந்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும் இது மொத்த எண்ணிக்கையில் சரி பாதிக்கும் கீழாகவே இருக்க வாய்ப்பு அதிகம் என்று மத்தியக் கிழக்கு ஊடகங்கள் சொல்கின்றன. அனைவருமே குண்டடிப்பட்டு, ராக்கெட் தாக்குதலுக்கு ஆளாகி இறந்தோர் இல்லை. பசியால் இறந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்கள், தொற்று நோய்களால் இறந்தவர்களும் அதிகம். எண்ணம் சரியில்லாத தேசத்தில் எண்ணிக்கைகளின் துல்லியம் மட்டும் என்ன செய்துவிடும்?
  • விஷயம் அதுவல்ல. மேற்சொன்ன 23 லட்சம் பேரின் எதிர்காலமும் இன்றைக்கு ஹமாஸின் கையில் இருக்கிறது. எந்தமக்களின் விடுதலைக்காக முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களது விதியை எழுதுபவர்களாகவும் இன்று அவர்களே ஆகி நிற்கிறார்கள்.
  • இதுதான். இது ஒன்றுதான் மீதமிருக்கும் ஒரே வினா. சுற்றி வளைக்காமல் மிக நேரடியாக இதற்கு விடை சொல்ல வேண்டுமென்றால், நிபந்தனையின்றி, காலவரையறையின்றி அவர்கள் போர்நிறுத்தம் அறிவித்தாக வேண்டும். பாலஸ்தீனர்களுக்கு சுதந்திரம் முக்கியம்தான். அதை அனுபவிப்பதற்கு உயிருடன் இருப்பது அதனினும் முக்கியமல்லவா? லட்சம்பேர் வாழ்வதற்கு நூறு பேர், ஆயிரம் பேர் களப்பலியானால் அதன் பெயர் தியாகம். லட்சம் பேரையும் களப்பலியாக விடுவது அறத்தின்பாற்பட்டதல்ல.
  • சுற்றி நடப்பதைச் சிறிது கவனிக்க வேண்டும். ஹமாஸின் மீது பரிவு கொண்ட தேசங்கள் அதிகமில்லை. அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் ஒன்றிரண்டு தேசங்களும் வெளிப்படையாக எதையும் செய்ய முன்வருவதில்லை. மறுபுறம் ஹமாஸ் ஒரு முற்றுமுழுதான தீவிரவாத இயக்கம் என்றுஉலக மக்கள் மத்தியில் அழிக்க முடியாத எண்ணத்தை விதைக்கும் பணிகளை மேற்கு நாடுகள் மிகத் திறமையாகச் செய்து வருகின்றன. இந்நிலையில் போரை நிறுத்திவிட்டு, சிதைந்து போன மக்களின் வாழ்வை முடிந்தளவு சரி செய்யப் பார்ப்பதே, அவர்களது நம்பிக்கையைத் தக்க வைக்க அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி.
  • இந்தப் போருக்கு முன்னர் வரை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் - அரசுகளை விடுங்கள் - மக்கள் தரப்பிலேயே இஸ்ரேலிய ஆதரவு நிலைப்பாடுதான் அதிகம் இருக்கும். இஸ்ரேலுக்கு ஆதரவான பிரச்சாரங்கள்தாம் அதிகம் நடக்கும். பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆதரவான குரல் என்பது எங்கேயோ கேட்ட குரல் போலத்தான் மெலிந்து ஒலிக்கும். அபூர்வமாக இம்முறை காஸா மக்களின் கஷ்டங்கள் உலகத்துக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவிலேயே பாலஸ்தீன ஆதரவுப் பிரச்சாரங்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதல்களை மேற்குலக மக்கள் பகிரங்கமாகக் கண்டிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
  • இது ஒரு சாதகமான விஷயம். இந்தச் சூழ்நிலையில் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளுக்கு ஹமாஸ் முன்வருவது, அதன் மீதானநம்பிக்கையை வலுவாக்க உதவும். பேச்சுவார்த்தை என்ற ஒன்று இனி சாத்தியமா, பலன் ஏதாவது இருக்குமா என்பதல்ல விஷயம். போரைத் தொடங்கிய ஹமாஸ், அதை நிறுத்திவிட்டுப் பேச முன்வருமானால் இஸ்ரேல் அதற்கும் எதிர்வினை செய்தாக வேண்டி வரும்.முடியும் என்றோ, முடியாது என்றோ சொல்லத்தானே வேண்டும்?
  • யார் நிஜ வில்லன் என்பது அப்போது உலகுக்குத் தெளிவாகப் புரியும்.
  • இவற்றுக்கெல்லாம் அப்பால் இன்னொரு சங்கதி தீர்க்கப்பட வேண்டியுள்ளது. அது, ஹமாஸ் - ஃபத்தா பகை.
  • எண்ணிப் பாருங்கள். இரண்டு மாதங்களாக உலகம் இந்தப் போரைக் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் மேற்குக் கரை மம்மூத் அப்பாஸ் தரப்பு குறிப்பிடும்படியாக எதையாவது சொன்னதா? எங்கோ என்னவோநடந்தால் எனக்கென்ன என்று வேறு யாராவது இருக்கலாம். பாலஸ்தீனர்களே அப்படி இருப்பது இஸ்ரேலுக்கே சாதகமாகிப் போகும்.
  • பாலஸ்தீன பிரச்சினைக்கு சாத்தியமுள்ள ஒரே தீர்வு, இஸ்ரேல் - பாலஸ்தீனம் என்கிற இரு தனித்தனி நாடுகள் என்பது மட்டும்தான். ஆனால் இந்தத் தீர்வை எட்டுவதற்குப் பல தடைகளைக் கடந்தாக வேண்டும். மொத்த உலக நாடுகளும் ஒரு மனதாக இதனை ஏற்று, வலியுறுத்த வேண்டும். அமெரிக்கா உள்படமுரண்டு பிடிக்கும் தரப்புகள் அனைத்தையும் ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும்.
  • இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால் முதலில் பாலஸ்தீனர்களுக்குள் சமரசம் நிகழ வேண்டும். சகோதர சண்டையால் அழிந்த விடுதலை இயக்கங்கள் பலவற்றை நமக்குத் தெரியும். கைவிட்டுப் போன தனி நாட்டுக் கனவுகளை நாம் அறிவோம். எழுபத்தைந்து ஆண்டுகளாக வதைபட்டுக் கொண்டிருக்கும் பாலஸ்தீன முஸ்லிம்களும் அந்தப் பட்டியலில் இணைந்துவிடக் கூடாது என்று ஹமாஸ் உண்மையில் நினைக்குமானால் இதைத்தான் முதலில் செய்ய வேண்டும்.
  • லட்சியத்திலும் மக்கள் நல நோக்கத்திலும் இன்னும் பலவற்றிலும் குறை சொல்ல முடியாத ஓர் இயக்கம் தனதுபிடிவாதத்தினால் இதனைச் செய்யத்தவறுமானால் அது பல லட்சக்கணக்கான பாலஸ்தீனர்களின் நூற்றாண்டு கால விடுதலைக் கனவைத் தகர்த்ததாகிவிடும்.
  • ஏவிய கணைகளைத் திரும்பப் பெற இயலாது. இனி அவர்கள் எடுத்து வைக்கும் அடிகளில் இருக்கிறது, பாலஸ்தீனர்களின் மேலான சகவாழ்வு.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories