TNPSC Thervupettagam

என்ன நினைக்கிறது உலகம்? - நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆபத்து

December 2 , 2019 1873 days 1025 0
  • அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ‘நோய் எதிர்ப்பு சக்தி தடுப்புத் திறன்’ (antibiotics resistance) குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 2013-ல் அது வெளியிட்ட சிறப்பு மிக்க ஆய்வுக்குப் பிறகு வெளியான அறிக்கை இது. நோய் எதிர்ப்பு சக்தி தடுப்புத் திறன் என்பது நோயுயிர்முறி மருந்துகளை (antibiotic drugs) எதிர்க்கக்கூடிய திறனை பாக்டீரியாவும் பூஞ்சைகளும் பெற்றிருப்பதாகும்.
  • இதனால், சில தொற்றுக்களைக் குணப்படுத்துவது கடினமாகிவிடுகிறது. மேலும், சில தொற்றுக்களைக் குணப்படுத்தவே முடியாமல் ஆகிவிடும். இன்றைய உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அபாயம் இது. எனினும், அந்த நோய்க்கிருமிகளின் தடுப்புத் திறனை மட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கையையும் அந்த அறிக்கை தருகிறது.
  • அதே நேரத்தில், கிருமிகளின் நோய் எதிர்ப்பு சக்தி தடுப்புத் திறனால் ஏற்படும் ஆபத்துகளையும் அந்த அறிக்கை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்படாத புதிய நோய்க்கிருமி ஒன்றையும் அந்த அறிக்கை கண்டறிந்திருக்கிறது.

நோயுயிர் முறிகள்

  • நோயுயிர் முறிகள் என்பவை 20-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டவை. நவீன மருத்துவத்தில் இந்தக் கண்டுபிடிப்பு பெரும் புரட்சியையே ஏற்படுத்தியது. எடுத்துக்காட்டாக, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை நோயுயிர் முறிகள் சாத்தியப்படுத்தின.
  • ஏராளமானவர்களை மரணத்திலிருந்தும் நோயிடமிருந்தும் அவை காப்பாற்றியிருக்கின்றன. ஆரம்ப காலத்தில் இந்த மருந்துகளுக்கு எதிரான திறனை பாக்டீரியாக்கள் வளர்த்துக்கொண்டபோது, புது நோயுயிர்முறிகள் உடனே உருவாக்கப்பட்டன.
  • ஆனால், சமீப காலமாக நோயுயிர்முறிகளின் தயாரிப்பு குறைந்துகொண்டே வருவதால் சிகிச்சை அளிக்க முடியாத நோய்கள் பெருகி நோயாளிகளை வாட்டிவதைக்க ஆரம்பித்திருக்கின்றன.
  • அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 2013-ல் வெளிட்ட அறிக்கையின்படி, அந்த ஆண்டில் 20 லட்சம் அமெரிக்கர்கள் நோய் எதிர்ப்பு சக்தி தடுப்புத் திறனைக் கொண்ட கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர், இவர்களில் 23,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், முறையான தரவுகளை அலசி ஆராய்ந்த பிறகு, அந்த ஆண்டில் 26 லட்சம் பேருக்கு இந்த நோய்த் தொற்று இருந்ததாகவும், மொத்தம் 44 ஆயிரம் பேர் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
  • தற்போது 28 லட்சம் பேருக்கு அந்த நோய்த் தொற்று அமெரிக்காவில் இருப்பதாகவும் இவர்களில் ஆண்டுக்கு 35 ஆயிரம் பேர் மரணமடைவதாகவும் அந்த மையம் கூறுகிறது. இறப்பு விகிதம் 18% குறைந்திருப்பதற்கு மருத்துவமனைகள் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்ததே காரணம்.

நோய்த் தொற்று நோய்கள்

  • ஆனாலும், நாம் கவலை கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. மருத்துவமனைகள் முன்னேற்றம் அடைந்துவரும் அதே சூழலில், பெரும்பாலான நோய்த் தொற்று மருத்துவமனைகளுக்கு வெளியே ஏற்படுகின்றன. இந்த நோய்த் தொற்றுப் பிரச்சினை புதிய புதிய வடிவங்களை எடுப்பதுதான் சிக்கல். பழைய பிரச்சினைகளைச் சரிசெய்வதற்குள் புதிய பிரச்சினைகள் தலையெடுக்கின்றன.
  • எடுத்துக்காட்டாக, கேண்டிடா ஔரிஸ் என்ற பூஞ்சை ஊடுருவித் தொற்றுவதோடு மரணத்தையும் ஏற்படுத்துகிறது. இந்தப் பூஞ்சையின் சில வகைகள், தற்போது பயன்பாட்டில் இருக்கும் மூன்று நோயுயிர்முறிகளுக்கும் கட்டுப்படுவதில்லை. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 2013-ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இடம்பெறாத இந்தப் பூஞ்சை 2015, 2017 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2018-ல் அமெரிக்காவில் 318% அதிகரித்திருக்கிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தித் தடுப்பானது மனிதர்கள், விலங்குகள் உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றோடு தொடர்பு படுத்தப்பட்டு, ஒரு மருத்துவப் பிரச்சினையாகப் பார்க்கப்பட வேண்டியது என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வலியுறுத்தியிருக்கிறது. பெரும் சவால்கள் இன்னும் இருக்கின்றன.
  • அவற்றுள் நோயுயிர்முறிகளை அதிகமாகப் பயன்படுத்துவதைக் கண்காணிப்பதும் புதிய நோயுயிர்முறிகளை உருவாக்குவதும் அடங்கும். இந்தப் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு எந்த சாக்குப்போக்கும் தேவையில்லை. ஏனெனில், இந்தப் பிரச்சினை விடுக்கும் அச்சுறுத்தல்கள் உண்மையானவை, தொடர்ந்து நீடித்திருப்பவை.

நன்றி: இந்து தமிழ் திசை (02-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories