TNPSC Thervupettagam

எப்படி இருந்தது இந்திய அறிவியல் வளர்ச்சி?

December 17 , 2024 26 days 81 0

எப்படி இருந்தது இந்திய அறிவியல் வளர்ச்சி?

  • மிக முக்கியமான விண்வெளிச் சாதனையுடன்தான் இந்தியாவில் 2024ஆம் ஆண்டின் முதல் நாள் பிறந்தது. எக்ஸ்ரே போலரிமீட்டர் செயற்கைக்கோள் (XPOSAT) என்னும் அதிநவீன விண்வெளி எக்ஸ் கதிர் தொலைநோக்கி, ஜனவரி 1 அன்று விண்ணில் ஏவப்பட்டது.
  • கருந்துளை, நியூட்ரான் விண்மீன் போன்ற பொருள்கள் பிரபஞ்சத்தில் எக்ஸ் கதிர்களை வெளியிடும். இவற்றை இந்தத் தொலைநோக்கி ஆய்வு செய்யும். ஆகஸ்ட் மாதம் ‘எஸ்எஸ்எல்வி-டி3’ (SSLV-D3) ஏவூர்தி மூலம் ‘இஓஎஸ்-08’ (EOS-08) என்னும் புவி கண்காணிப்பு மைக்ரோசாட் விண்கலத்தையும், பிப்ரவரி மாதம் ஜிஎஸ்எல்வி-எஃப்14 (GSLV-F14) ஏவூர்தி மூலம் ‘இன்சாட்-3டிஎஸ்’ (INSAT-3DS) விண்கலத்தையும் விண்ணில் ஏவியுள்ளது இஸ்ரோ.
  • ​முழு சூரிய கிரகணம் நடைபெறும் சில நொடிகள் மட்டுமே சூரியனின் மேற்​புறத்தில் உள்ள ‘கரோனா’ எனும் சூரிய வளிமண்டலம் தென்​படும். இரண்டு செயற்​கைக்​கோள்களை விண்​ணுக்கு அனுப்பி, ஒன்றின் முன்னே மற்றொரு விண்​கலத்தைத் துல்​லியமாக நிலைநிறுத்​தி​னால், முதல் விண்கலம் சரியாகச் சூரியனை மறைத்து - கிரகணம் செய்ய - இரண்​டாவது விண்​கலத்​திலிருந்து செயற்கைச் சூரிய கிரகணத்தைக் காணலாம்.
  • இந்த வியப்பான அமைப்புதான் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கட்டமைத்​துள்ள ‘புரோ​பா-3’ சூரிய ஆய்வு விண்​கலம். கடந்த டிசம்பர் 5 அன்று இஸ்ரோவின் ‘பிஎஸ்​எல்வி - எக்ஸ்.எல் சி-59’ (PSLV-XL C-59) ஏவூர்தி மூலம் விண்ணில் செலுத்​தப்​பட்​டுள்ளது. இரண்டு ரயில் பெட்டியை இணைப்பது போல டிசம்பர் 20 அன்று ‘ஸ்பேடெக்ஸ்’ (SPADEX) என்னும் திட்டம் மூலம் இரண்டு விண்கலங்களை விண்வெளியில் பிணைக்கும் சாதனையை இஸ்ரோ சாதிக்க உள்ளது.
  • 400 கிலோ எடை கொண்ட தொடர்ந்துசெல்லும் விண்கலம், இலக்கு விண்கலம் என்கிற இரண்டு செயற்கைகோள்கள் ஒருசேர விண்ணில் ஏவப்பட உள்ளன. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இப்படியான சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்னும் பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். டிசம்பர் 31 அன்று என்விஎஸ்-2 என்ஏ​விஐசி (NVS-2 NavIC) செயற்​கைக்கோளை ஜிஎஸ்​எல்வி ஏவூர்தி மூலம் செலுத்தி, இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ். அமைப்​புக்கு வலுசேர்க்கத் திட்​ட​மிடப்​பட்​டிருக்​கிறது.

மருத்​துவத் துறை​யில்...

  • காசநோயை உருவாக்கும் மைக்​கோ​பாக்​டீரியம் டியூபர்​குலோசிஸ் என்னும் கிருமி, எப்படி நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஏய்த்துப் பாதிப்பை ஏற்படுத்து​கிறது என்பதை ஹைதராபாத் சிஎஸ்ஐஆர் - செல் - மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டு​பிடித்​துள்ளனர்.
  • இந்த ஆய்வு வழியே மேலும் திறன் மிகுந்த காசநோய் மருந்​துகளைத் தயாரிக்க முடி​யும். இந்தியாவின் மூன்று கட்ட அணு ஆற்றல் உற்பத்தித் திட்​டத்தின் மிக முக்​கியக் கண்ணியான ஈனுலை அணுமின் நிலையம் தொடங்​கப்​பட்​டிருக்​கிறது.
  • பெங்​களூருவில் உள்ள ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறு​வனத்தின் (The Institute for Stem Cell Science and Regenerative Medicine) சுனில் லக்ஷ்மண் தலைமையிலான ஆராய்ச்​சி​யாளர்கள், ஆற்றல் பற்றாக்​குறையை எதிர்​கொள்​வதில் செல்கள் பயன்​படுத்தும் முன்னுரிமை உத்தி​களுக்கான கட்டமைப்பை இனம் கண்டுள்​ளனர்.
  • சென்னை ஐஐடி இயற்​பியல் துறை ஆய்வாளர் சுந்தர ராமபிரபு தலைமையிலான ஆய்வுக் குழு​வினர் நானோகேடலிஸ்ட்களை உருவாக்கிக் கடல் நீரை மின்​பகுப்பு செய்து, பசுமை ஹைட்​ரஜனைப் பிரித்​தெடுக்கும் தொழில்​நுட்​பத்தை உருவாக்கி​யுள்​ளனர். மாற்று எரிசக்தித் துறையில் இது பெரும்பயன் தரும்.
  • ஹைதரா​பாதில் உள்ள மிதவறட்சி வெப்​பமண்டல சர்வ​தேசப் பயிர் ஆராய்ச்சி நிறு​வனத்தின் (ICRISAT) சுவாமிக்​கண்ணு நெடு​மாறன் உள்பட சர்வதேச ஆய்வாளர்கள் பெண்​களுக்குப் பணம், குடும்ப வருவாய் போன்ற முடிவு​களில் முடி​வெடுக்கும் அதிகாரம் அதிகரிக்​கும்​போதும், குடும்ப ஊட்டச்​சத்து நிலை மேலும் மெச்​சத்​தகுந்த நிலையை அடைகிறது எனக் கண்டறிந்​துள்ளனர்.
  • கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த வேதி​யியல் பேராசிரியரான சந்தீப் வர்மா தலைமையிலான ஆராய்ச்​சி​யாளர்கள், அதிக வெப்​பநிலை​யிலும் நிலையாக இருக்கும் இன்சுலின் ஒப்பு மருந்து ஒன்றைத் தயாரித்​துள்ளனர். தொலை​தூரப் பகுதிக்​கும், மின்​சாரம் இல்லாத நிலை​யிலும் மனித இன்சுலின் மருந்தைப் பயன்​படுத்த இது வழிவகை செய்​யும்.

இன்னும் பல சாதனைகள்:

  • பெட்​ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு மாற்றாக வேதி ஆற்றலை நேரடியாக மின்​னாற்றலாக மாற்​றக்​கூடிய மின்​வே​தி​யியல் எரிபொருள் மின்கலம் (Fuel cell) முன்னணியில் உள்ளது. இந்தத் தொழில்​நுட்​பத்தின் மிகப் பெரிய சிக்கல், இதில் பயன்​படுத்​தப்​படும் வினை​வேக​மாற்றி வேதிப்​பொருள்​கள்​தாம்.
  • புணேயில் உள்ள இந்திய அறிவியல் கல்வி - ஆராய்ச்சி நிறு​வனத்தின் (IISER) வேதி​யியல் இணைப் பேராசிரியரான முஸ்தபா ஒட்டகம்​தொட்​டியில் (Musthafa OttakamThotiyl) தலைமையிலான ஆராய்ச்​சி​யாளர்கள் திறன் மிக்க கோபால்ட் அடிப்​படையிலான மூலக்கூறு வினையூக்​கிகளை வடிவ​மைக்க முடியும் என நிறு​வி​யுள்​ளனர்.
  • சென்னை ஐஐடி வேதி​யியல் துறையின் பேராசிரியர் தாளப்பில் பிரதீப் தலைமையிலான ஆய்வுக் குழு, மைக்ரோ உளிகளால் மைக்​ரோ மீட்டர் அளவிலான கனிமத் துகள்களை உடைத்து, நானோ பொருள்களை உருவாக்க முடியும் என நிறு​வி​யுள்ளது. நோயாளியின் படுக்கை அருகிலேயே பரிசோதனை முடிவு​களைக் கண்டறிய மைக்​ரோபபிள் லித்​தோ கிராபி எனப்​படும் முறையைப் பயன்​படுத்தி, புதிய நுட்​பத்தை இந்திய அறிவியல் கல்வி - ஆராய்ச்சி நிறு​வனத்தைச் (IISER) சேர்ந்த அயன் பானர்ஜி தலைமையிலான ஆய்வுக் குழு​வினர் கண்டு​பிடித்​துள்ளனர்.
  • ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர்கள் பி.வெங்​கடேஷம், எஸ்.சூர்​யகுமார் தலைமையிலான குழு​வினர் தேனீ கூட்​டிலிருந்து ஒலி ஆற்றலைச் சிதறடிக்கும் திறன் கொண்ட புதிய பொருள்களை உருவாக்கி​யுள்​ளனர். காகிதத் தேன்​கூடு, பாலிமர் தேன்கூடு மூலம் புனையப்பட்ட இத்தகைய தாள்கள் இரைச்சல் கட்டுப்​பாட்டுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள்.
  • மகாராஷ்டிர வனத் துறை​யுடன் இணைந்து, அசோகா சுற்றுச்​சூழல் அறக்​கட்டளை (ATREE) ஆராய்ச்​சி​யாளர்​களின் சமீபத்திய ஆய்வு, பூர்விகப் புற்களை நடுவதன் மூலம் சுற்றுச்​சூழலை மறுசீரமைத்து, மூன்று ஆண்டு​களில் மண்ணின் கரிமக் கார்பனை 50% வரை அதிகரிக்க முடியும் என்பதைக் காட்டு​கிறது. இதன் மூலம் வளிமண்டல கார்பன் மாசை அகற்றி புவி வெப்பமடைதலைக் கட்டுப்​படுத்த முடி​யும்.
  • இந்தியா, அமெரிக்​காவில் செயல்​படும் புராஜெக்ட் பிரகாஷின் (Project Prakash) ஆராய்ச்​சி​யாளர்கள், ‘மூளை வளர்ச்​சியின் தொடக்கக் காலத்தில் சிறு குழந்​தையால் நிறங்​களைக் காண முடி​யாது; வெறும் ஒளியின் பிரகாச வேறு​பாட்டைக் கறுப்பு வெள்​ளை​யாகத்தான் குழந்தை உணரும்; படிப்​படி​யாகத்தான் நிறக்​காட்சி ஏற்படு​கிறது’ எனக் கண்டறிந்​துள்ளனர்.
  • மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் - தொழில்​நுட்ப நிறு​வனத்தின் (INST) தீபா கோஷ் தலைமையிலான ஆய்வுக் குழு, நாள்பட்ட காயங்​களுக்குப் புது​மையான சுய-இ​யங்கும் காயக்​கட்டை உருவாக்கி​யுள்ளது. நீரிழிவு பாதப் புண்கள் உள்ள நபர்​களுக்கு இது வரப்​பிர​சாதமாக அமையக்​கூடும். மூளை செல்களான நியூ​ரான்​களின் தொடர்​புக்கு மிக அவசியமான சினாப்டிக் வெசிகல் (எஸ்வி) புரதங்கள், தாம் உருவாகும் இடத்​திலிருந்து சென்​றுசேர வேண்டிய இடத்தை எப்படி அடைகின்றன என்பது மர்மமாக இருந்​து​வந்தது.
  • மும்​பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தின் இணைப் பேராசிரியை சந்தியா பி.கௌஷிகா தலைமையிலான ஆய்வுக் குழு​வினர், கெய்​னோ​ராப்​டிடிஸ் எலிகன்ஸ் எனும் உருண்டைப் புழுவின் மூளை நியூரான் செல்களை ஆய்வுசெய்து இந்தப் போக்கு​வரத்தை ஒழுங்​குசெய்யும் மூன்று முக்​கியப் புரதங்​களைக் கண்டு​பிடித்​துள்ளனர். இந்த ஆய்வு மூளை சம்பந்தமான நோய்​களைப் புரிந்​து​கொள்ள உதவும்.
  • இப்படிப் பல்வேறு சாதனைகள் இருந்​தாலும் முதன் ​முறையாக அறி​வியல் ​விருதுகளில் அரசியல் தலையீடு இருந்ததாக எழுந்த ​விமர்​சனங்​களும் பெரும் பேசுபொருளாகின. அறி​வியல் ஆய்​வு​களுக்கான நி​தியும் குறைக்​கப்​பட்டு​வரு​கிறது. 2025ஆம் ஆண்டில் இந்தக் குறைகள் களை​யப்​பட்டு, இந்திய அறி​வியல் இன்​னும் பல படிகள் முன்​னேறட்​டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories