TNPSC Thervupettagam

எம்.எஸ்.சுவாமிநாதன் விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாவலர்

October 3 , 2023 464 days 405 0
  • ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ என அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவையொட்டி, வேளாண் சமூகத்துக்கான அவரது அறிவியல் பங்களிப்பைப்பற்றிப் பெரும்பாலோர் நினைவுகூர்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மையப்படுத்திய பேராசிரியர் சுவாமிநாதனின் செயல்பாடுகள்அசாத்தியமானவை. அவர் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம், அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அவர் கொண்டுவந்த பெண் விவசாயிகள் உரிமைக்கான தனிநபர் மசோதா ஆகியவை மிகமிக முக்கியமானவை.

தேசிய விவசாயிகள் ஆணையம்

  • அகில இந்திய அளவில் நிலவிய வேளாண் நெருக்கடி, அதன் விளைவாகஅதிகரித்த விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றை நிவர்த்திசெய்ய அப்போதைய அரசு, 2004இல் சுவாமிநாதன் தலைமையில் தேசிய விவசாயிகள் ஆணையத்தை நிறுவியது. அந்த ஆணையத்தின் அறிக்கை, விவசாயிகளை மையப்படுத்திய அவரது அர்ப்பணிப்புமிக்க முன்னெடுப்புக்கு அத்தாட்சி என்றே சொல்லலாம்.
  • அந்த ஆணையத்தின் சுமார் இரண்டு ஆண்டு கால நடவடிக்கைகளாக மேகாலயா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், அறிவியல் அறிஞர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரிடம் 44 முறை அவர் ஆலோசனை நடத்தினர். இந்தக் குழுவின் அறிக்கைகளை இந்தியாவில் 9 இடங்களில் முன்வைத்துப் பல்வேறு குழுக்களிடம் பகிர்ந்துகொண்டு, அவர்களின் ஆலோசனைகளையும் சேர்த்து இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதார முன்னேற்றம் அறிவியல் முறை சார்ந்து உருவாக வேண்டும் என்ற தனது அவாவை சுவாமிநாதன் நிறைவேற்றினார்.
  • வேளாண் வளர்ச்சி என்பதை விவசாயிகளின் வருமானம் பெருகும் விதத்தை வைத்து அளவிட வேண்டும் என்று விவசாயிகள் ஆணைய அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் நான்கில் மூன்று பங்குக்கும் அதிகமாக சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். எனவே, விவசாயிகளின் வருமானப் பெருக்க விகிதம் அதிகரிக்க வேண்டும் எனில், அது சிறு-குறு விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதன் மூலமே சாத்தியமாகும். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி பார்க்கையில், வேளாண் வளர்ச்சி என்பது சிறு-குறு விவசாயிகளை மையப்படுத்தியதுதான்.
  • தற்போது, விவசாயக் குடும்பங்களின் சராசரி வருமானம் மாதம் ரூ.10,218 என தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது; தமிழ்நாட்டில் இது ரூ.11,924. வேளாண்மையின் முன்னேற்றத்தை விவசாயிகளின் வருமானத்தை வைத்துக் கணக்கிட வேண்டியது அவசியம் என்பதை எதற்காக சுவாமிநாதன் குழு மையமாக வைத்தது என்பதற்கான சாட்சியம் இது.

விவசாயிகளின் முக்கியத்துவம்

  • ஒவ்வொரு முறை வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளிவரும்போது, அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்காகவே செயல் படுபவர்கள் விவசாயிகள் என்கிற தவறான கருத்து பொதுவெளியில் நிலவுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், விவசாயிகள் ஆணையம், நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கான பாதுகாவலர்கள் விவசாயிகள்தாம் என்பதை வலியுறுத்துகிறது.
  • வேளாண் மாற்றங்களில் விவசாயிகளைப் பங்காளர்களாகவும், புத்தாக்கம் செய்பவர்களாகவும் கருதுவதன் மூலமே அவர்களின் அறிவியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதை விவசாயிகள் ஆணையம் வலியுறுத்துகிறது. தாவரவியல் பாதுகாப்பு - விவசாயிகள் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
  • இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் சுவாமிநாதனின் பங்களிப்பு அளப்பரியது. இதன் மூலம் விவசாயிகளால் உருவாக்கப்படும் விதை ரகங்களும் அங்கீகரிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அகில இந்திய விவசாயிகள் சங்கம், சுவாமிநாதனுக்கு வெளியிட்ட இரங்கல் செய்தியில் இந்தத் தகவல் நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

விவசாயிகளுக்கு நேரடி நன்மை

  • வேளாண் துறையில் விவசாயிகளின் நலன் பேண, சுவாமிநாதன் ஆணையம் கொடுத்த கட்டமைப்பு மிக முக்கியமானது. அங்கொன்றும் இங்கொன்றுமான நடவடிக்கைகளாக அல்லாமல் நிலம், நீர், உயிர்வளங்கள், கடன்-காப்பீடு, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், அறிவு மேலாண்மை என்று முழுக் கட்டமைப்பிலும் விவசாயிகளுக்கு நேரடியாக நன்மை பயக்கும் நடவடிக்கைகளை சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்தது.
  • குறைந்த வட்டி விகிதத்தில் வேளாண் கடன், பயிர்க் காப்பீடு, மண்வள அட்டை, மண்வளம் சார்ந்த உரமிடுதல், வேளாண் பொருள்களை மையப்படுத்திய இந்திய வர்த்தக நிறுவனம், கிராம அளவில் வேளாண் அறிவைப் பெருக்கும் விதத்தில் தகவல் தொழில்நுட்பத்தை உபயோகித்தல் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால், இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை; அத்துடன், நடைமுறையில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பான கிராம ஊராட்சி முதல் மாநிலம், மத்திய நிர்வாகம் என ஒவ்வொரு படிநிலையிலும் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தெளிவாக விவசாயிகள் ஆணையம் விளக்குகிறது.
  • உதாரணமாக, தக்காளி போன்ற ஒரு சில பகுதிகளில் விளைவிக்கப்படும் எளிதில் அழுகக்கூடிய பொருள்களுக்கு அந்தந்த ஊர்களிலேயே சிறிய அளவில் கிடங்குகள் அமைக்கப்படுவதன் அவசியத்தை சுவாமிநாதன் ஆணையம் விவரிக்கிறது. இதன் மூலம் சிறிய அளவில் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள்கூடத் தங்களது பொருள்களைச் சேமித்து, நல்ல விலை கிடைத்தவுடன் விற்பனையில் ஈடுபட முடியும். இதுதான் விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாவலராக சுவாமிநாதனை முன்னிலைப்படுத்தும் காரணியாக அமைகிறது.
  • ஆணையத்தின் கடைசி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனைத்து ஆலோசனைகளுக்கும் இன்றும் தேவை இருப்பதைக் காண்கையில், பேராசிரியரின் முன்னோக்கிய பார்வை புலனாகிறது. மத்திய-மாநில அரசுகள் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளைச் செயல்பாட்டில் கொண்டுவந்ததாகக் கூறிக்கொண்டாலும் அந்தப் பரிந்துரைகளின் தேவைகள் அப்படியே உள்ளன என்பதை மறுக்க முடியாது.

பெண் விவசாயிகளுக்கான முன்னெடுப்பு

  • பெண் விவசாயிகளுக்காக சுவாமிநாதன் முன்வைத்த, பரிந்துரைத்த நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை. முதலாவதாக, பெண் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் ‘பெண் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்ட’த்தை (Mahila Kisan Sasakthikaran Pariyojana - MKSP) விவசாயிகள் தற்கொலை அதிகம் நிகழ்ந்த மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதிகளில் 2007இல் சுவாமிநாதன் அறிமுகப்படுத்தினார்.
  • தற்கொலை செய்துகொண்ட ஆண் விவசாயிகளின் மனைவி அல்லது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு லாபகரமான விவசாயம் செய்வதற்கான வழிவகைகளை உருவாக்குவது, தங்களது கடன் தொந்தரவுகளில் இருந்து அவர்கள் வெளிவருவதோடு, வாழ்வாதாரம் மேம்பாடு அடைவதை உறுதிசெய்வது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள்.
  • பின்பு இத்திட்டம் அனைத்துப் பெண் விவசாயிகளுக்கும் அந்தந்தப் பகுதிகளில் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் செயல்பாட்டைப் பார்த்து, இந்திய அரசானது, இதை ஒரு தேசியத் திட்டமாக 2010-11இல் அறிமுகப்படுத்தியது. இன்று அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் எம்கேஎஸ்பி என்பது சுவாமிநாதனின் அறிவுக் குழந்தையாகும்.
  • எம்.எஸ்.சுவாமிநாதன் மாநிலங்களவை நியமன உறுப்பினராக இருந்தபோது, பெண் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் தனிநபர் மசோதாவை 2011இல் கொண்டுவந்தது அவரது மற்றுமொரு சாதனை. மிக முக்கியமாகப் பெண் விவசாயிகளையும் நிலத்தின் உரிமையாளராகச் சேர்க்க வேண்டும் என்கிற அவரின் கூற்று, வேளாண் துறையில் மட்டுமல்ல சமூகப் பொருளாதாரத்திலும் பெருமளவில் மாற்றத்தைத் தரக்கூடியது. ஆணோடு சேர்ந்து பெண்ணின் பெயரையும் நில உரிமையாளராகச் சேர்ப்பதன் மூலம், பெண் விவசாயிகளுக்கும் கடன் பெறும் உரிமை, ஏனைய வேளாண் நடவடிக்கைகளில் சமஉரிமை பெறுவதை இம்மசோதா உறுதிசெய்கிறது.
  • இதன் மூலம் கூலி வாங்காத குடும்ப வேலையாள் என்கிற நிலையிலிருந்து, சமஉரிமை பெற்ற விவசாயி என்ற படிநிலைக்குப் பெண் விவசாயியை உயர்த்துகிறது. இந்த மசோதா சட்டமாக்கப்படாதது அவரின் ஆதங்கமாகும். நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத்தருணத்தில், பேராசிரியர் சுவாமிநாதனின் கனவான பெண் விவசாயிகள் உரிமை மசோதாவும் நிறைவேற்றப்பட்டால் அதுவே அவருக்கு இந்நாடு செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலியாக அமையும்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories