TNPSC Thervupettagam

எரிசக்தி துறைக்கு ஒரேயொரு அமைச்சகம் போதும்!

January 18 , 2020 1825 days 983 0
  • இந்தியாவின் மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி உற்பத்தி ஐந்து வெவ்வேறு துறைகளாலும் ஏராளமான நெறியாளர்களாலும் கையாளப்படுகிறது. பெட்ரோலியம் - இயற்கை நிலவாயு, நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், அணுசக்தி ஆகியவை தனி அமைச்சகங்கள், துறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இவை போக எரிசக்தித் துறைக்கு என்று அமைச்சகம் இருக்கிறது. மாநிலங்களில் மின்சார விநியோகத்துக்கு வெவ்வேறு நிறுவனங்கள் உள்ளன. எரிபொருள் மற்றும் மின் துறைக்கு இப்படி வெவ்வேறு அமைச்சகங்களும் துறைகளும் இருப்பது இத்துறை தொடர்பான தொழில் துறைக்குக் குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்துகிறது.
  • தரவுகளைப் பெறுவதிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. எந்த ஒரு முகமையும் உற்பத்தியாகும் மொத்த எரிசக்தி ஆற்றல் அளவு எவ்வளவு என்று கணக்கிட்டுத் தெரிவிப்பதில்லை. எவ்வளவு எரிசக்தி நுகரப்படுகிறது என்ற தரவு பெயரளவுக்குத்தான் இருக்கிறது.
  • எவ்வளவு எரிசக்தி எந்தெந்த வழிகளில் விநியோகிக்கப்படுகிறது என்ற தரவு தனித்தனியாகத்தான் அந்தந்த அமைச்சகம் அல்லது துறையில் இருக்கிறது. எனவே மொத்த உற்பத்தி, மொத்தத் தேவை எவ்வளவு என்பது ஒரே நோக்கில் தெரிந்துகொள்ள வழியில்லை. புள்ளிவிவரம் - திட்ட அமல் துறை வெவ்வேறு அமைச்சகங்களிடமிருந்து தரவுகளைப் பெற்று கூட்டிச்சொல்கிறது.

பிற நாடுகளில் எப்படி?

  • வெளிநாடுகளுக்கும் நமக்கும் இதில்தான் அப்பட்டமான வேற்றுமை நிலவுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் துடிப்பான, பல்வேறுதரப்பட்ட, செழிப்பான எரிசக்திப் பிரிவுகள் ஒரே அமைச்சகம் அல்லது துறை மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. வளர்ந்த நாடுகளில் அத்துறையானது சுற்றுச்சூழல், பருவநிலை மாறுதல், சுரங்கம் - தொழில் துறை ஆகியவற்றுடனும் கூட சேர்த்தே நிர்வகிக்கப்படுகிறது. பிரிட்டனில் இத்துறை ‘வர்த்தகம், ஆற்றல், தொழில் திட்டமிடல்’ துறை என்று அழைக்கப்படுகிறது. பிரான்சில் ‘சுற்றுச்சூழல், ஆற்றல், கடல்வள’ துறை என்று பெயர் பெற்றுள்ளது. பிரேசில் நாட்டில் ‘சுரங்கம், ஆற்றல்’ அமைச்சகம் என்று அறியப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இதற்கு ‘சுற்றுச்சூழல், ஆற்றல் அமைச்சகம்’ என்று பெயர். இதிலிருந்து எரிசக்தித் துறையை தனித் துறையாக நிர்வகிக்காமல் பிற துறைகளுடன் சேர்த்து நிர்வகிப்பதன் தேவை தெரிகிறது.
  • நம்முடைய தேவைகளுக்காகக் கச்சா பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு போன்றவற்றுக்காகப் பிற நாடுகளை நம்பியிருப்பதை 2030-க்குள் குறைப்பதற்கான திட்டத்தை ‘கேல்கர் குழு’ (2013) அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. தேசிய மின்னாற்றல் கொள்கை என்ற அறிக்கையைத் தயாரித்த நிதி ஆயோக், எரிசக்தித் துறைக்கென்று ஐக்கிய அமைச்சகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
  • பெட்ரோலியம் - இயற்கை எரிவாயுத் துறை, நிலக்கரித் துறை, புதிய – புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அணு ஆற்றல் துறை மட்டும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதில் சேர்க்கப்படவில்லை. புதிய அமைச்சகம் உருவானால் அதன் கீழ் ஆறு துறைகள் இணைந்து செயல்படும். எரிசக்தித் துறையுடன் ஆறு முகமைகள் தொடர்புள்ளவை. அவை மின்னாற்றல் ஒழுங்காற்று முகமை, தரவு முகமை, திறன் முகமை, திட்டமிடல் - தொழில்நுட்ப முகமை, திட்ட அமலாக்கல் முகமை, ஆராய்ச்சி - வளர்ச்சி முகமை.

உச்சபட்சப் பயன்பாடு

  • எரிசக்தித் துறைக்கு ஒரேயொரு ஐக்கிய அமைச்சகம் இருந்தால் ஒருங்கிணைந்த பார்வை சாத்தியமாகும். நம்மிடம் உள்ள வரம்புக்குட்பட்ட இயற்கை வளங்களைத் திட்டமிட்டுப் பயன்படுத்த முடியும். மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல் மூலங்களை உற்பத்திசெய்ய ஒரேயொரு அமைச்சகம் இருந்தால், நாட்டுக்கேற்ற எரிசக்திக் கொள்கையை விரைந்து இறுதிசெய்து நிறைவேற்றலாம்.
  • இப்போதுள்ள அமைப்பில் அனைத்து வளர்ச்சி மூலங்களையும் ஒருங்கிணைத்துப் பயன்படுத்த முடியாமல், ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைச்சகங்கள் அல்லது துறைகளுக்குக் கட்டுப்பட்டதாக இருக்கின்றன. அது மட்டுமின்றி எந்தவகை ஆற்றலை யார் அதிகம் நுகர்கின்றனர், யாருக்கு அது தேவை என்பதுபோன்ற தரவுகள் சிதறிக்கிடக்கின்றன. எனவே ஒரு துறை, இன்னொரு துறைக்குத் தெரியாமல் தன்னிடம் உள்ளதை மட்டுமே அதிகம் நுகர வேண்டும் என்ற முனைப்பில் செயல்படுகிறது. இது சிறந்த வழிமுறை அல்ல.
  • மின்னாற்றல் உள்ளிட்ட எரிசக்தி தொடர்பான துறைகளை ஒருங்கிணைப்பதற்கான சில நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துள்ளது. முதன்முறையாக எல்லா வகை மின்னாற்றலுக்கும் ஒரே அமைச்சரை கேபினட் அந்தஸ்தில் நியமித்திருக்கிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் வரும் துறைகள் ஒன்றுக்கொன்று தொடர்பானவை என்பதால், பல்வேறு தரப்பிலிருந்தும் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
  • மரபுசார்ந்த எரிசக்தி, மரபுசாரா எரிசக்தி ஆகிய இரு வழிகளிலும் மின்சாரத்தைத் தயாரிக்கவும், விநியோகிக்கவும், விற்கவும், தடையாக உள்ள அம்சங்களைக் களையவும், நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இது உதவும். மின்னாற்றலைத் தயாரிப்பது மட்டுமல்ல, வழியில் இழப்பில்லாமல் விநியோகிப்பதும் முக்கியம்.
  • எந்த வகையில் மின்சாரம் தயாரிக்கப்பட்டாலும் அது ஒரே பொதுவழியாக விநியோகிக்கப்பட்டால் மொத்த உற்பத்தி, மொத்த நுகர்வு ஆகியவற்றை அறியவும் பற்றாக்குறையோ உபரியோ இருந்தால் உரிய மாற்று நடவடிக்கை எடுக்கவும் பயன்படும்.
  • மின்சார விநியோக நிறுவனங்கள் உற்பத்தி யாளர்களுக்கு உரிய தொகையை, உரிய நேரத்தில் வழங்காமல்போவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இந்த ஒருங்கிணைப்பு பயன்படும்.
  • இத்துறைகளை இணைப்பதால் கிராமப்புறங்களில் மின்சாரத்தை விநியோகிப்பது எளிதாகிவருகிறது. அத்துடன் ஏழைகளும் நடுத்தர மக்களும் வாங்கும் வகையில் ‘எல்இடி’ பல்புகள் மானிய விலையில் விநியோகிக்கப்படுகின்றன. நிலக்கரிச் சுரங்கங்களைத் தாமதமின்றி ஏலம் விடவும், மின்னுற்பத்தி மட்டுமல்லாது பிற தொழில் துறையினரும் நிலக்கரி பெறவும் புதிய குத்தகை ஏல நடைமுறைக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • இத்துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி, வேலைவாய்ப்பு, இறக்குமதி குறைப்பு ஆகியவை லட்சியங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. எரிசக்தித் துறையில் சீர்திருத்தம் கொண்டுவர அரசு அக்கறை காட்டுவதை இவை உணர்த்துகின்றன.

‘ஜல் சக்தி’ உதாரணம்

  • முக்கியமான அமைச்சகங்களை இப்படி இணைக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. தண்ணீர் வளத் துறை, நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர்ப்பு, குடிநீர் - சுகாதாரத் துறை ஆகிய அமைச்சகங்கள் ‘ஜல் சக்தி’ என்ற பெயரில் ஒரே துறையாக இணைக்கப்பட்டுள்ளன.
  • நீர்வள நிர்வாக நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதுதான் இதன் நோக்கம். 60 கோடி இந்தியர்களுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை, 75% வீடுகளுக்குத் தண்ணீர் அவர்களுடைய வீடுகளுக்கு அருகில் இல்லை என்ற பின்னணியில் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
  • அரசின் இந்த நடவடிக்கைகள் சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்ட அடி என்றாலும், பயணப்பட வேண்டிய தொலைவு நெடிது. புதிய மின்னாற்றல் கொள்கை தொடர்பான பரிந்துரைகளை ஏற்பதும், ஏற்று அமல்செய்வதும் எளிதல்ல. பல துறைகளின் அதிகார வர்க்கக் கட்டமைப்பையே இது அசைத்துப் பார்க்கும் என்பதால், அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
  • மின்உற்பத்தியை அதிகரிப்பது, தொடர்ச்சியாக உற்பத்திசெய்வது, அனைவருக்கும் மின்னாற்றல் கிடைக்கச் செய்வது என்ற லட்சியத்துடன் ஒப்பிடுகையில் இந்த சவால்கள் சாமானியமானவை. அரசு உறுதியாகச் செயல்பட வேண்டும். மின்சாரம் லாபகரமான முறையில், இயற்கை வளங்களுக்கு அழிவில்லாத வகையில் தயாரிக்கப்படுவதுடன் வீணடிக்கப்படாமல் விநியோகிக்கப்பட வேண்டும்.
  • அதற்கு ஒரே துறையின் கீழ் நிர்வாகம் இருப்பதுதான் நல்லது. கரிப்புகை வெளியீட்டைக் குறைத்து, சுற்றுச்சூழல் கெடாமல் அதிக மின்சாரம் தயாரிக்க பிற நாடுகளுடன் போட்டி போடுவதுடன் இந்தியா தலைமை தாங்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (13-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories