- டானியல் ஜெயந்தன் எழுதிய ‘வயல் மாதா’ (கருப்புப் பிரதிகள், 2023) சிறுகதைத் தொகுப்புக்கு பிரான்ஸ் நாட்டில் 18.06.2023 அன்று வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அந்நூல் ரோமன் கத்தோலிக்க மத நம்பிக்கையைத் தவறாகச் சித்தரிப்பதாக ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எழுத்தாளருக்கு மிரட்டல் விடுத்ததோடு நூல் பிரதிகளைக் கிழித்தும் எரித்தும் பிரான்ஸில் போராட்டம் நடத்தியுள்ளனர். 2015இல், எனது ‘மாதொருபாகன்’ நாவலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியோரும் அதன் பிரதிகளைப் பொதுவெளியில் எரித்தனர். நூல் பிரதியை எரிப்பது அதன் கருத்துகளை அழிப்பதன் குறியீடு என்று சொல்லலாம். ‘எரித்தல்’ எங்கிருந்து வந்திருக்கக்கூடும்?
வரலாற்றில் எரித்தல்
- மழை வேண்டிச் செய்யும் சடங்குகளில் ஒன்று ‘கொடும்பாவி கொளுத்துதல்’. பாவச் செயல்கள் பெருகிவிட்டதால்தான் மழைப்பொழிவு இல்லை எனக் கருதி, ஒட்டுமொத்தப் பாவத்தின் உருவகமாகப் பொம்மை ஒன்றைச் செய்து, அதைப் பல ஊர்களுக்கு இழுத்துச் சென்று இறுதியில் இறப்புச் சடங்குகளுடன் தீயில் எரித்தலே இச்சடங்கு. பாவனைச் சடங்காகிய இது, இருபதாம் நூற்றாண்டில் ஒரு போராட்ட வடிவமாக உருப்பெற்றது.
- மக்களுக்குத் துன்பம் விளைவிக்கும் வகையில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களைக் கொடும்பாவியாகச் சித்திரித்து உருவப் பொம்மையைக் கொளுத்துதல் போராட்டமாக நடந்ததுண்டு. 1980களில் ஈழத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மாணவர் போராட்டங்களில் சிங்கள ஆட்சியாளர்களின் கொடும்பாவி கொளுத்தப்படுவது பரவலாக நடந்தது.
எரித்தலும் எரித்தல் நிமித்தமும்
- தமிழ்ப் புறப்பொருள் இலக்கணத்தில், ‘உழபுல வஞ்சி’ என்றொரு துறை உண்டு. போரில் பகை நாட்டைத் தீயிட்டுக் கொளுத்துதல் என்று அதற்குப் பொருள். போர் என்பது களத்தில் நேருக்கு நேராக மோதிக்கொள்வது மட்டுமல்ல.
- பகை நாட்டின் வளத்தைப் பல வகையிலும் அழித்துப் பல்லாண்டுகள் அம்மக்கள் மேலெழாத வண்ணம் துன்பத்துக்கு ஆளாக்குதலும் போரில் அடங்கும். வீடுகள், தீவனப் போர்கள், வேளாண் பயிர்கள், சேமிப்புத் தவசங்கள் ஆகியவற்றை எரிப்பதன் வழியாக அம்மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை அழிக்கும் நடைமுறை இது.
- மக்கள் வழக்கில் ‘தீக்கிரையாக்குதல்’ என்று இதைக் கூறுவதுண்டு. மன்னர்கள் அவ்வாறு செய்வதைப் புகழ்ந்து வரலாற்று நூல்களிலும் ‘பகை நாட்டை அம்மன்னன் தீக்கிரையாக்கினான்’ என்று எழுதுவர். பல காலமாக மக்கள் உழைப்பில் உருவானவற்றைச் சிதைப்பதன் மூலமாக அந்நாட்டின் வலிமையை அழிப்பதே இதன் நோக்கம்.
- மீண்டும் பழைய வலிமையைப் பெற வேண்டுமானால் இன்னும் பல காலம் அதற்கென உழைக்க வேண்டும். போர் என்பது கருவிகளைக் கொண்டு சண்டை செய்வது என்பதோடு முடிந்து விடுவதல்ல. நாட்டின் வாழ்வாதாரங்களை அழித்து இயல்பு வாழ்க்கையையே முடக்குவதாகும்.
- உக்ரைன் போரில் இத்தகைய நடைமுறைகளை இப்போதும் காண்கிறோம். கட்டிடங்களைத் தரைமட்டமாக்குதல், வேளாண் நிலங்களை அழித்தல், அணைக்கட்டுகளைத் தகர்த்தல் எனத் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. போர் முடிந்தாலும் அந்நாடு பொருளாதார வலிமையை இழந்து நிற்கும்.
- அதைப் பெறுவதற்கு இன்னும் பல்லாண்டுகள் அம்மக்கள் இடைவிடாது உழைத்தாக வேண்டும். சாதி, மதக் கலவரங்களின்போது குறிப்பிட்ட பிரிவினரின் சொத்துகளைக் குறிவைத்து அழிக்கும் வீடுகளுக்குத் தீ வைத்தல், வாகனங்களை எரித்தல், கால்நடைகளைக் கொல்லுதல் என்னும் கொடூரச் செயல்களையும் நம் காலத்தில் காணத்தான் செய்கிறோம்.
நவீன காலத்தில் ‘உழபுல வஞ்சி’
- பருண்மையான நடைமுறையாக மன்னராட்சிக் காலத்தில் இருந்த ‘உழபுல வஞ்சி’ என்னும் தீயிட்டுக் கொளுத்துதல் இருபதாம் நூற்றாண்டில் குறியீட்டு வடிவம் பெற்று, போராட்ட வடிவங்களில் ஒன்றாக மாறியது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒருபகுதியாக, ‘அந்நியத் துணி பகிஷ்கரிப்பு’ என்பதை காந்தி அறிவித்தார்.
- அந்நியத் துணிகளைப் பகிஷ்கரித்த’லை ஆட்சியாளர்களுக்கும் சமூகத்துக்கும் உணர்த்த வேண்டும். அதற்கு அடையாளமாகத் தம்மிடம் இருந்த அந்நியத் துணிகளைப் பொதுவிடத்தில் காந்தியர்கள் கொளுத்தினர். அநேகமாக ‘எரிப்பு’ என்னும் போராட்ட வடிவம் நவீன வடிவம் பெற்றது அப்போதுதான் என்று தோன்றுகிறது.
- தொடக்கத்தில் காந்தியராக இருந்த பெரியார், அப்போராட்ட வடிவத்தைப் பின்னர் விரிவாக்கினார். திராவிடர்களை இழிவாகச் சித்திரிக்கிறது என்னும் கருத்தோட்டத்தில் ‘கம்பராமாயண’த்தையும் ‘பெரியபுராண’த்தையும் எரிக்க வேண்டும் என்னும் கருத்துப் பரப்பல் 1940களில் தீவிரமாக நடந்தது. அரசியல் சாசனத்தை எரிக்கும் போராட்டத்தைப் பெரியார் நடத்தினார். தொழிலாளர்கள், அரசு ஊழியர்களின் போராட்டங்களில் அரசு ஆணைகள், அறிவிப்புகள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றை எரித்தல் ஒரு நடைமுறையாக வளர்ந்தது.
- ஜனநாயக வழிமுறைப் போராட்டங்களில் ஒன்றாக எரிப்பை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லாக் காலத்திலும் எரிப்பைச் சட்ட மீறலாகவே அரசு கருதி வந்திருக்கிறது. ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றை அரசு அனுமதி பெற்று நடத்தலாம். சாலை மறியல், வேலைநிறுத்தம், கடையடைப்பு ஆகியவற்றுக்கு அரசு அனுமதி கிடையாது. அதுபோலவே எதையும் எரிப்பதற்கும் அரசு அனுமதி தருவதில்லை. எரிப்பு என்பது சட்ட மீறல்தான்.
- அவ்வகையில் ஒரு நூலை எரிப்பதையும் சட்ட மீறலாகவே காண வேண்டும். அரசியல் சாசனம், அரசு ஆணை, பழைய இலக்கியம் ஆகியவற்றைச் சட்டத்தை மீறி எரித்தல், அவற்றில் உள்ள கருத்துக்கு எதிரான குறியீட்டு நடவடிக்கையாகிறது. ஆனால், வாழும் எழுத்தாளர் ஒருவரது நூலை எரித்தல் என்பது கருத்தை எதிர்ப்பதாக மட்டும் நிற்பதில்லை. எழுத்தாளரின் உயிருக்கு அச்சுறுத்தல், அன்றாட வாழ்வுக்கு மிரட்டல் என்பவையும் எரித்தல் வடிவத்தில் அடங்குகின்றன.
கருத்தை எரிக்க முடியுமா?
- கருத்தைக் குறிவைப்பதைக் கடந்து, எழுத்தாளரைக் குறிவைப்பதாக நோக்கம் திசை மாறுகிறது. எழுத்தாளருக்கான வெளி முடங்குகிறது. தொடர்ந்து அவர் எழுதுவதைத் தடுக்கிறது. ஒளிந்துகொள்ளுதல், இடம்பெயர்தல், உயிரச்சத்தோடே வாழ்தல் என எழுத்தாளரின் உயிர் வாழும் அடிப்படை உரிமையே பறிக்கப்படுகிறது. சாதி, மத அடிப்படைவாதம் மேலோங்கும் இக்காலத்தில் எரிப்புக்கான குறியீட்டுப் பொருள் மாறிவிட்டது.
- இந்நிலையில், ஒருவர் தாம் விலை கொடுத்து வாங்கிய ஒரு நூலைத் தன்னளவில் கிழிக்கலாம்; எரிக்கலாம்; என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ஆனால், பொதுவெளியில் கும்பலாகக் கூடி நூல் எரிப்பதை ஆதரிக்க இயலாது என்றே தோன்றுகிறது. ஒரு நூல் பிடிக்கவில்லை என்றால், அதை வாங்காமல் தவிர்க்கலாம்; வாசிக்காமல் இருக்கலாம்; வாங்க வேண்டாம் எனப் பிறருக்குப் பரிந்துரைக்கலாம்.
- வாங்கிவிட்ட பிறகு எடைக்குப் போடலாம். விரும்புவோருக்குத் தானமாகக் கொடுக்கலாம். எழுதும் திறனிருப்பின் விமர்சித்து மாற்றுக் கருத்தை முன்வைக்கலாம். பேச்சாற்றல் உடையோர் தம் கருத்தை வலியுறுத்திப் பேசலாம். தமக்குப் பிடிக்காத கருத்தை எதிர் கொள்ளத் தம்மளவிலேயே அவருக்குப் பெருஞ்சுதந்திரம் இருக்கிறது. பிறர் இருப்பைப் பாதிக்காத வகையில் தம் சுதந்திரத்தை ஒருவர் பயன்படுத்துவதே நல்லது.
நன்றி: தி இந்து (05 – 07 – 2023)