TNPSC Thervupettagam

எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு

March 12 , 2025 7 hrs 0 min 12 0

எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு

  • உலகப் புகழ்பெற்ற அணு இயல் விஞ்ஞானி ரூதர்ஃபோர்டு. அணுவை ஆய்வு செய்ததோடு அணுவைப் பிளக்கவும் முடியும் என்கிற கருதுகோளுக்கும் வித்திட்டவர்.
  • 1871, ஆகஸ்ட் 30 அன்று நியூசிலாந்தின் பிரைட்வாட்டர் என்கிற இடத்தில் பிறந்தார் ரூதர்ஃபோர்டு. பன்னிரண்டு பிள்ளைகளில் நான்காவது குழந்தை இவர். எளிய விவசாயக் குடும்பம். ரூதர்ஃபோர்டு அரசுப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். அம்மா ஆசிரியராக இருந்ததால், கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்லியே வளர்த்தார். ரூதர்ஃபோர்டுக்கும் படிப்பின் மீது ஆர்வம் அதிகமாகவே இருந்தது. 10 வயதில் அறிவியல் புத்தகம் ஒன்றைக் கண்டார். அந்தப் புத்கத்தைப் பார்த்துப் பரிசோதனைகளை மேற்கொண்டார். அவற்றைக் கண்ட குடும்பத்தினர் ரூதர்ஃபோர்டு குறித்துப் பெருமிதம் கொண்டனர்.
  • 16 வயதில் நெல்சன் கல்லூரியில் படிக்க உதவித்தொகை கிடைத்தது. அடுத்து ரூதர்ஃபோர்டு நியூசிலாந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1893இல் கணிதம், இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார். மின்காந்த அலைகளின் சோதனையில் ஆர்வம் காட்டினார்.
  • தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் ரூதர்ஃபோர்டுக்கு உதவியது. 24 வயதில் கேம்பிரிட்ஜின் டிரினிட்டி கல்லூரியில் ஜே.ஜே. தாம்சனின் கீழ் கேவென்டிஷ் ஆய்வகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார் ரூதர்ஃபோர்டு. அவரின் திறமைகளை தாம்சன் விரைவாக அடையாளம் கண்டுகொண்டார். ​​1897இல் ரூதர்ஃபோர்டு டிரினிட்டி கல்லூரியில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.
  • 1898இல் யுரேனியம் கதிர்வீச்சில் ஆல்பா, பீட்டா கதிர்கள் இருப்பதையும் அவற்றின் பண்புகளையும் கண்டறிந்தார். காமா கதிர்களையும் கண்டறிந்தார். மின்காந்த அலைகளைக் கண்டறியும் கருவி உள்பட பல கருவிகளை உருவாக்கினார். ரூதர்ஃபோர்டின் திறமையை அறிந்த கனடா, தங்கள் பல்கலைக்கழகத்தில் ஓர் இயற்பியல் மேடையை ஒதுக்கிக் கொடுத்தது. பல ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார்.
  • 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் இங்கிலாந்து திரும்பினார் ரூதர்ஃபோர்டு. மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். கதிரியக்கத் தனிமங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1908இல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார் ரூதர்ஃபோர்டு.
  • நோபல் வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் அடுத்த முக்கியமான கண்டறிதலை நிகழ்த்தினார். எப்படிச் சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுற்றுகின்றனவோ அதேபோல் அணுவின் அனைத்து நேர்மின்னூட்டமும் மையத்தில் ஒரு சிறிய இடத்தில் குவிந்துள்ளது என்றார். அணுவின் தன்மையில் அதுவரை அறியப்படாத செய்தி அது.
  • 1919இல் அழியாப் புகழ் கிடைத்தது. ஜே.ஜே. தாம்சனுக்குப் பிறகு கேம்பிரிட்ஜில் கேவென்டிஷ் இயற்பியல் பேராசிரியர் பதவியை ஏற்றார் ரூதர்ஃபோர்டு. அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சியின் ஆலோசனைக் குழு தலைவரானார்.
  • 1903இல் ராயல் கழகத்தின் உறுப்பினரானவர் 1925 முதல் 1930 வரை அதன் தலைவராகவும் பணியாற்றினார். மேலும் ராயல் கழகத்தின் உயர்ந்த ரம்ஃபோர்ட் பதக்கத்தை 1905இல் பெற்றார்.
  • கதிரியக்கத்தன்மை, கதிரியக்க மாற்றங்கள் போன்ற புத்தகங்களை எழுதினார். பல விருதுகளையும் வாங்கினார். நைட் பட்டம், ஆர்டர் ஆஃப் மெரிட் போன்ற முக்கியப் பட்டங்களைப் பெற்றார். ஸ்வீடன், கனடா, ரஷ்யா, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகள் ரூதர்ஃபோர்டின் உருவம் பொரித்த தபால்தலையை வெளியிட்டன.
  • ’அணுக் கரு இயற்பியலின் தந்தை’ என்று போற்றப்பட்ட ரூதர் ஃபோர்டு, 1937, அக்டாபர் 19 அன்று 66வது வயதில் மறைந்தார். புகழ்பெற்ற இங்கிலாந்து விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின் ஆகியோரின் கல்லறைக்கு அருகில் ரூதர் ஃபோர்டின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories