TNPSC Thervupettagam

எல்லை மீறும் இணையப் பயன்பாடு: குழந்தைகளுடன் ஓர் ஒப்பந்தம்!

December 26 , 2024 29 days 43 0

எல்லை மீறும் இணையப் பயன்பாடு: குழந்தைகளுடன் ஓர் ஒப்பந்தம்!

  • இன்று வகைவகையான இணைய கருவிகளை இயக்கும் குழந்தைகளைக் கண்காணிக்கப் பெற்றோர் பயன்படுத்தக்கூடிய ‘tech contracts’ என்கிற பெயரில் ஒப்பந்தங்கள் வந்துவிட்டன. அவரவர் குடும்பங்களுக்கு ஏற்றாற்போல் அவ்வப்போது மாற்றிக்கொள்ளக்கூடிய ஒப்பந்தங்கள் இவை. இந்த ஒப்பந்தங்கள், பிள்ளைகள் எல்லை மீறாமல் இணையத்தைப் பயன்படுத்தவும் மீறியபோது பாதுகாத்திடக் குடும்பமே அரணாக நிற்கவும் பேருதவி புரிவன.
  • இன்று பரவலாக வந்துவிட்ட தொழில்நுட்ப ஒப்பந்தங்களைப் பார்க்கும்போது, ‘வருமுன்னர்க் காவாதான்..’ எனத் தொடங்கும் குறள்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு செயல் தவறாகக்கூடிய வாய்ப்பிருப்பதை முன்கூட்டியே அறிந்து, அச்செயலால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளாதவரின் வாழ்க்கை, நெருப்பின்முன் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போலக் கருகிவிடும் என்று தெளிவாக விளக்கி எச்சரித்த வள்ளுவரும் அவர்தம் தொலைநோக்கும் வியக்க வைக்கின்றன.
  • ஐம்பது ஆண்டுகளுக்குமுன் குழந்தைகளின் கைகளில் இருந்தவை செப்புச் சாமானும் கிலுகிலுப்பையும். ஆனால், கைசூப்பும் வயதில் திறன்பேசி (smart phone) பிடிக்கும் காலமிது. விரல்நுனியில் தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றுவதில் தொடங்கும் குழந்தை, சில ஆண்டுகளில் பல செயலிகளைக் கையாளும் திறன்பெற்று வளர்கிறது. அடுத்த மிகச் சில ஆண்டுகளிலேயே, சமூக வலைதளங்களில் இணையும் உந்துதலும் ஆர்வமும் தலைக்கேறிவிடுகிறது. தொலைபேசியையும் இணையத்தையும் இரு கண்களாகப் போற்றுவதை விடுங்கள்; கையறு நிலையை விளக்க ‘இணையம் இழந்தவன் கைபோல..’ என்று புதிய குறள் பாடுகிறார்கள் இவர்கள்.
  • கட்டுப்பாடற்ற இணையப் பயன்பாட்டால், தம் வயதுக்குப் பொருந்தாத செய்திகளையும் காட்சிகளையும் தெரிந்தும் பார்த்தும் மனம் பேதலிக்கும் சிறார்களைப் பற்றித் தினந்தோறும் கேள்விப்படுகிறோம். இணையத்தை ஒதுக்குவதோ குழந்தைளை ஒடுக்குவதோ இதற்கான தீர்வல்ல என்று நாம் அறிவோம். பின், வழிதான் என்ன?
  • நடக்கப் பழகும் குழந்தை விழாமலிருக்க நம் கையைக் கொடுப்போம்; மிதிவண்டி ஓட்டப் பழக்குகையில், சமண் நிலையைச் சொல்லிக் கொடுப்போம்; முதன்முறையாக நீந்துகையில் இடுப்பில் பாதுகாப்பு வளையத்தை மாட்டுவோம். அதுபோல, தம் பொறுப்புணர்ந்து- முக்கியமாகப் பாதுகாப்புடன் இருக்கக் குழந்தைகளைப் பழக்குவதே இன்றைய முதல் தேவையாக இருக்கவேண்டும்.
  • பார்வையை மாற்றிய சம்பவம்: குழந்தைகளுக்கு இணையத்தைப் பழக்கப்படுத்துவதில் என் பார்வையை மாற்றிய, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வொன்று என் நினைவுக்கு வந்தது.
  • 2012ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் நாங்கள் வாழ்ந்தபோது, எங்கள் மகளை ‘அமெரிக்கன் ஸ்கூல் ஆஃப் தி ஹேக்’கில் (சுருக்கமாக ASH என்றழைப்பார்கள்) மழலையர் வகுப்பில் சேர்த்தோம். உளைச்சலின்றி ஆடல், பாடல், விளையாட்டோடு மகிழ்வுடன் புதிய பள்ளியில் கற்கத் தொடங்கினாள் அவள். சேர்க்கையின்போதே பள்ளி நிர்வாகம் சொன்ன ஒன்று, வியப்பையும் தயக்கத்தையும் ஒருசேரத் தந்தது எங்களுக்கு. “நீங்கள் குழந்தைக்கு ஐபேட்(IPAD) ஒன்றை வாங்கிக் கொடுக்கவேண்டும்” என்பதுதான் அது.
  • ஐந்து வயது குழந்தைக்கு ஐபேட் எதற்கு? உடல்நலத்தைக் கெடுக்கும் தேவையற்ற கதிர்கள்; கண்களைப் பாதிக்கும் ஒளிக்கற்றை; ஓடி விளையாட வேண்டிய பருவத்தில் உடலியக்கத்தை முடக்கும் இணைப்புகள்; மூளையைச் சுண்டியிழுத்துப் பின் கட்டிப்போடும் தொழில்நுட்ப ஆதிக்கம் ... என்று பலவித எண்ணங்கள் அலைபோல் எங்களைத் தாக்கின.
  • பள்ளி நிர்வாகத்திடம் சென்று மறுப்பு தெரிவித்தோம்; விளக்கம் கேட்டோம். அவர்கள், ‘இனிவரும் காலம் தொழில்நுட்பத்தின் காலம். குழந்தைகளைத் தொடக்கக் கல்விக் காலத்திலிருந்தே அதற்குப் பழக்கப்படுத்தும் தேவை மிகுதியாக உள்ளது. அவர்கள் வளர்ந்துவரும் நேரத்தில் அவ்வகையில் பின்தங்கியவர்களாக நிற்கக்கூடாது. எங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதி கணிப்பொறி மூலமே கற்றுத்தரப்படும்’ என்று பலவாறாக எங்களுக்கு விளக்கினார்கள்.
  • புரிந்தும் புரியாததுமாக முதன்முதலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வீட்டில் காலடியெடுத்து வைத்தது. பள்ளியில் ஆங்கிலமும் கணிதமும் அறிவியலும் ஆசிரியர்கள் விளையாடியபடி விளக்க, காணொலிமூலம் ஐபேட் கூடுதலாகக் கற்றுக் கொடுத்தது. மாணவர்கள், இருக்கையில் அமர்ந்தும் தரையில் சாய்ந்தும் குப்புறப்படுத்தும் அவரவர் விருப்பப்படி கண்டு கேட்டு மகிழ்ந்தார்கள். வீட்டிலும் அதே பாடங்களும் பாடல்களும் ஐபேடில் ஒலித்தன. இந்தியாவில் 1980களில் பள்ளிக்குச் சென்ற எங்களுக்கு இது புதிதுதானே!
  • அடுத்த ஓராண்டிற்குள், நாங்கள் நெதர்லாந்து நாட்டிலிருந்து தென்கிழக்காசிய நாடான கம்போடியாவுக்குப் பணிமாற்றமாகிச் சென்றோம். அதே அமெரிக்கப் பாடத்திட்டத்தின்கீழ் இயங்கிய ISPP (இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் புனம்பென்) பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தாள் மகள்.

தாளில்லா வீட்டுப்பாடம்:

  • 2013ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் அவள் சேர்ந்தபோது காத்திருந்தது அடுத்த வியப்பு. வாரந்தோறும் வீட்டுப்பாடம் வாரத்தின் முதல் நாளான திங்களன்று தரப்படும். வியாழனன்று குழந்தைகள் எழுதவேண்டியவற்றை முடித்து ஆசிரியர்களுக்குத் தந்துவிடவேண்டும். இதிலென்ன வியப்பு என்கிறீர்களா? 2021இல் நிதியமைச்சர் படித்தாரே, இந்தியாவின் முதல் தாளில்லா நிதிநிலை அறிக்கை… அதுபோல, என் குழந்தைக்குக் கொடுக்கப்பட்டதும் அவள் தரவேண்டியதும் தாளில்லா வீட்டுப்பாடம். சரி, அது என்ன தாளில்லா வீட்டுப்பாடம்?
  • ஆசிரியர் வாரத்திற்கான வீட்டுப்பாடத் திட்டத்தை மின்னஞ்சலில் அனுப்புவார். குழந்தையோ பணியை முடித்து மின்னஞ்சலில் திருப்பியனுப்ப வேண்டும். இது என்ன பிரமாதம் என்று நீங்கள் கேட்டால், ‘இன்னும் நிறைய ஸ்பெசல் அயிட்டம் பாக்கியிருக்கு’ என்று வடிவேலுவைப்போல் நான் சொல்ல வேண்டியிருக்கும். அதிலொன்று, வீட்டுப் பாடத்தின் ஒரு பகுதி, கூகுள் டிரைவில் செய்தனுப்ப வேண்டிய கட்டுரையாக இருக்கும். அதற்கு, மாணவர்களே இணையத்தைத் தேடிச் செய்தி சேகரித்துத் தரவேண்டும்.
  • எனவே, வீட்டுப்பாடத்திற்காகவும் வேறு கல்விக் காரணங்களுக்காகவும் முதலாம் வகுப்பு மாணவர்களுக்குப் புதிய மின்னஞ்சல் உருவாக்கித் தரப்பட்டது. ஐந்து வயதில் ஐபேடா என்கிற பதற்றமே தணியாதபோது, ஆறு வயதுக் குழந்தைக்கு மின்னஞ்சலா என்று பதறிப்போனோம். பொதுத்தளத்தில் இல்லாமல், பள்ளிக்கு மட்டுமான மின்னஞ்சல் அது. பொத்திப் பொத்தி வளர்க்கும் சின்னஞ்சிறு மகள், அதுவும் ஆறு வயதில் முதலாம் வகுப்பில் தேவையற்ற காட்சிகளைப் பார்க்க நேருமா? தேவையற்ற செய்திகளைக் கேட்க நேருமா? வலைதளப் பிடியிலிருந்து எப்படி அவளைப் பாதுகாப்பது? இந்த முறை சரிதானா என்று எண்ணற்ற கேள்விகள் எழுந்தன. எங்கள் இருவருக்கும் மனம் தவித்தது.
  • மறுவாரத்தில் ஒரு நாள், மின்னஞ்சல் முகவரியுடன் வீட்டுக்கு வந்தாள் குட்டிப்பெண். பெரிய சாதனையாளரைப் போல முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி, வளர்ந்து பெரிய பெண்ணாகப் புதிய பொறுப்புக்களை ஏற்றதுபோன்ற பெருமிதம்; யாருக்கும் கிட்டாத புதிய பொருளொன்றைப் பெற்ற பேருவகை. அந்தச் சின்னஞ்சிறு மலர்முகம், படபடக்கும் விழிகளும் பரபரக்கும் இதயமுமாகப் பள்ளியிலிருந்து வந்து தனக்குரிய மின்னஞ்சலைப் பற்றிக் கூறிய அந்த நாள் இன்றும் என் நினைவில் தேனாய் இனிக்கிறது.

மின்னஞ்சல் ஒப்பந்தம்:

  • கூடுதலாகப் பள்ளி, அச்சடிக்கப்பட்ட படிவமொன்றையும் அனுப்பியிருந்தது. அது ஓர் ஒப்பந்தப் படிவம். அது முதலாம் வகுப்பு மாணவியான எங்கள் மகள், பெற்றோர் முன்னிலையில் கையெழுத்திட்டுத் தரவேண்டிய உறுதிமொழியைத் தாங்கிய ஒப்பந்தம்.

புதிய மின்னஞ்சல் பெற்ற மாணவர்கள்

  • தங்கள் மின்னஞ்சலைப் பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள்தவிர வேறெவருக்கும் பகிரக் கூடாது.
  • தங்கள் மின்னஞ்சலிலிருந்து பள்ளி ஆசிரியர்கள் தவிர வேறெவருக்கும் தகவல்/அஞ்சல் அனுப்பக் கூடாது.
  • மின்னஞ்சலுக்கான கடவுச்சொல்லை எவருடனும் பகிரக் கூடாது.
  • அப்படி அறியாமல் பகிர்ந்தாலோ, யாராவது அறிந்துகொண்டதாகத் தெரிந்தாலோ, உடனே பெற்றோரிடமோ ஆசிரியர்களிடமோ சொல்லிவிட்டுக் கடவுச்சொல்லை மாற்ற வேண்டும்.
  • இணையத்தை மிக மிகக் கவனமாகக் கையாள வேண்டும்.
  • இணையத்திலிருந்து செய்தி சேகரித்தபின், அதிலிருந்து புரிந்துகொண்டு தன் சொந்த கருத்தையே கூகுள் டிரைவில் தரவேண்டும்.
  • அப்படி வேறொருவர் இணையத்திலிருந்து மேற்கோள் காட்டினால், ‘நன்றி/courtesy’ என்று அந்த இணைய முகவரியைக் குறிப்பிட வேண்டும்.
  • இணையத்தில் தேடும்போது, தங்களுக்குரியதல்லாத பக்கத்தைத் திறந்திட நேர்ந்தால், உடனே பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் சொல்லவேண்டும்.
  • குழந்தைகளுக்கான ஒப்பந்தத்தோடு பெற்றோருக்கான அறிவுரையும் இணைக்கப்பட்டிருந்தது. நீண்ட பட்டியலைப் பெற்றோர் முழுமையாகப் படித்துப் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்; அறிவாகச் சிந்தித்துப் புரிந்துகொண்ட குழந்தைகள் மனதார உறுதியளித்தபின் கையெழுத்திட வேண்டும்.

பொறுப்பேற்பது அவசியம்:

  • ஆறு வயது குழந்தை உறுதிமொழியையும் ஒப்பந்தத்தையும் எப்படிப் பார்த்தது? என்னவென்று புரிந்துகொண்டது? இந்தச் சூழலைக் குழந்தை எதிர்கொள்ள நாங்கள் என்ன செய்தோம்?
  • குழந்தை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய விதிமுறைகள் என்னென்ன என்பதைத் தெளிவாக வரையறுத்து, ஒப்பந்தத்திலேயே பள்ளி எங்களுக்கு வழியமைத்துக் கொடுத்துவிட்டது. பொறுமையாக அவளுக்குப் புரியவைத்து, குறிப்பாக அச்சுறுத்தல் ஏதுமின்றி விளக்குவதே சரியான முறையெனப் பட்டது.
  • ‘அச்சுறுத்தல் ஏதுமின்றி’ என்று குறிப்பாகச் சொல்வதற்குப் பல காரணங்கள் உண்டு. சாலையைக் கடக்க விதிமுறைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் விதிமுறைகள், பணியிடங்களில் விதிமுறைகள். இந்த விதிமுறைகளை மீறினால் தண்டனைகள். தண்டனைகள் என்கிற பெயராலேயே விதிமுறைகள் காக்கப்படும் சமூகங்களில் அச்சமொன்றே நல்வழிப்படுத்தப் பயன்படுகிறது. மேலை நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
  • குழந்தை வளர்ப்பின் அடிப்படைகளில், தவறு செய்தால் சாமி கண்ணைக் குத்துவதும் சொல்வதைக் கேட்காவிட்டால் பூச்சாண்டி பிடித்துச் செல்வதும்கூட அச்சமூட்டி விதிமுறைகளுக்குள் குழந்தைகளை நிற்கச் செய்யும் உத்திகள்தான்.
  • ஆனால், மிகச்சிறிய வயதிலேயே பேச்சுவார்த்தை மேஜையில் எதிரெதிர் அமர்ந்து, கருத்துப் பரிமாறியும் விவாதித்தும் நல்லது கெட்டதைப் புரிந்துகொள்ளும் திறனைக் குழந்தைகளுக்குள் புகுத்துதல் மிகவும் தேவை. தங்கள் பொறுப்புகளைப் புரிந்துகொண்டால் மட்டும் போதாது; தம் செயல்களுக்கு முழுமையாகப் பொறுப்பேற்கவும் அவர்கள் ஆயத்தமாக இருப்பது அவசியம்.
  • தன் மின்னஞ்சலுக்கான கடவுச்சொல்லைப் பாதுகாக்க அவள் பட்ட பாடும், பள்ளியில் பக்கத்தில் இருக்கும் மாணவர் பார்த்துவிட்டதாக உணர்ந்ததும் ஆசிரியரிடம் ஓடி மாற்றிக் கொண்டதும் அடிக்கடி நடந்த கூத்துகள். வீட்டிலோ, “என் கடவுச்சொல்லை யாருக்கும் சொல்லவும் முடியாது காட்டவும் முடியாது… கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் யாரிடமும் சொல்லிவிடவில்லையே?” என்று ஏகப்பட்ட ‘அலட்டல்கள்’.
  • இணையத்திலிருந்து பாடம் தொடர்பான கட்டுரைகளைப் படிக்க உதவுவது எங்கள் பொறுப்பு. என்றபோதும், அவற்றைப் புரிந்து வயதிற்கேற்ற கட்டுரைகள் வடிவமைப்பதில் ஊக்கமும் உழைப்பும் குழந்தையுடையது. வீட்டுப்பாடத்தைப் புதிய முறையில் முடிக்கும் முனைப்பு இருந்ததுபோலவே, பாதுகாப்பும் பொறுப்புணர்வும் அவளிடம் சேர்ந்தே இருந்தன. இணையத்தை உணர்ந்து வளர்ந்தது அவள் மட்டுமல்ல, நாங்களும்தான்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக, ஆறுவயது குழந்தைக்கு நாங்கள் புரியவைத்தது இணையத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறையை மட்டுமல்ல; எல்லை மீறாத கட்டுப்பாட்டையும், தன் நெஞ்சே தனக்கு வேலி என்கிற உறுதியையும், தன் தவறுகளுக்குத் தானே பொறுப்பு என்பதையுணரும் திறனையும் கூடத்தான்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories