TNPSC Thervupettagam

எழுதி முடியாப் பெருவரலாறு!

July 11 , 2024 184 days 249 0
  • "உலகிலுள்ள மத பேதங்களையெல்லாம் வேருடன் களைந்து சர்வ சமரசக் கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்குத் தமிழ்நாடே சரியான களம். உலகம் முழுவதும் மத மாச்சரியங்கள் இல்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்யவல்ல மகான்கள் இப்போது நம் நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். அது பற்றியே பூமண்டலத்தில் புதிய விழிப்பு, தமிழகத்திலே தொடங்குமென்கிறோம்' என்ற மகாகவி பாரதியின் வாக்கு அப்படியே மெய்யாகும்படி, தம் வாழ்வைத் தவ வாழ்வாக்கித் தரணி உய்யப் பாடுபட்ட தமிழ்மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
  • அற்புதத் தொண்டாற்றிய அப்பர் பெருமான், செங்காவிச் சிங்கம் சுவாமி விவேகானந்தர், புரட்சித் துறவி இராமாநுஜர், அருட்பிரகாச வள்ளலார் என்னும் அருளாளர்மரபில் தமிழகம் செய்த தவப்பயனாய் வந்து உதித்த சைவ சமயத்து ஆன்மிக ஞாயிறு அடிகள் பெருமான். 11.7.1925 அன்று மயிலாடுதுறையை அடுத்த நடுத்திட்டுக் கிராமத்தில், சீனிவாசம்பிள்ளை- சொர்ணத்தாச்சி தம்பதியருக்கு மகவாகப் பிறந்த இந்த ஞானமதலைக்குப் பெற்றோர் இட்ட பெயர், அரங்கநாதன். துறவேற்ற காலத்தில் தரப்பெற்ற திருநாமம், "கந்தசாமித் தம்பிரான். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமகாசந்நிதானமாகப் பட்டம் ஏற்றபோது, "திருவருள்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்." இன்றளவும் மக்கள் மனங்களில் நின்றுநிலைக்கும் திருப்பெயர், "தவத்திரு குன்றக்குடி அடிகளார்.'
  • ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டு, அறியாமையும் வறுமையும் அரித்தெடுக்க, ஜாதி, சமயச் சழக்குகளால் தாய் நாட்டு மக்கள் தவிக்கின்ற காலத்தில் தோன்றியவர் அடிகளார். சிதம்பரத்தை அடுத்த திருவேட்களத்தில் பள்ளிச் சிறுவனாய், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஆசிரியப் பெருமக்களுக்குப் பால் ஊற்றும் பையனாய், அரங்கநாதன் என்னும் பெயருடன் வளர்ந்த இப்பிள்ளைக்கு, தினம் ஒரு திருக்குறள் மனனம் செய்து ஒப்பிக்கச் சொன்னவர் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை. அதுவே, அவருக்குள் உலகத் திருக்குறள் பேரவையை உருவாக்கி உலகுய்ய வழிகாட்டத் தூண்டியது.
  • அதுபோன்று, மாலை வேளைகளில் சேரிப் பகுதிகளுக்குச் சென்று ஏழை மக்களின் வாழ்வுக்கு வழிகாட்டிய விபுலானந்த அடிகளின் அன்புக்குப் பாத்திரமாகி, அரிக்கன் விளக்கேந்தி உடன் சென்றவர் அரங்கநாதன். அதுவே, தொண்டு மரபும் துறவு ஒழுக்கமும் அவருக்குள் வேர்கொள்ளச் செய்தது.
  • திரு.வி.க.வின் "என் கடன் பணி செய்து கிடப்பதே' என்னும் நூலை வாசித்ததோடல்லாமல், வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கத் தொடங்கிய அரங்கநாதனை, தருமபுர ஆதீனத்தில் பணி செய்யத் தூண்டியது. தமிழின் மீது கொண்ட பற்றும், சமயத்தின்பால் கொண்ட நேயமும், இறைவனின் மேல் கொண்ட பக்தியும் அவருக்குள் பொங்கிப் பெருகியதைக் கண்ட கயிலைக்குருமணி துறவேற்கப் பணித்தார். "கந்தசாமி' என்னும் திருநாமத்துடன் தம்பிரான் சுவாமிகளாக விளங்கிய அவரைக் குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம், தன் இளவரசாக விரும்பி ஏற்றது.
  • 1949-இல் குன்றக்குடித் திருமடத்தின் ஆதீன இளவரசாகி, 16.6.1952 முதல் ஆதீனத் தலைமையேற்று 45-ஆவது குருமகாசந்நிதானமாக விளங்கினார். திருக்குறளையும், திருமுறைகளையும் ஆழப் பயின்ற அனுபவமும், அற்புதமாய் எடுத்துரைக்கும் ஆற்றலும் அறிந்த தமிழகம் இவர்தம் உரை கேட்டு ஊக்கம் பெற்றது. இருள் கடிந்தெழுந்த ஞான ஞாயிறாக, அடிகளார் உலா வந்து அருள் ஒளிபரப்பினார்.
  • அடிகளார் பட்டம் ஏற்ற காலம், ஆத்திக-நாத்திக வாதம் ஓங்கி ஒலித்த காலம். சமயநெறி நின்று, சமுதாயப் பணிகள் புரிந்த அடிகளார், இறை மறுப்பாளர்கள் விடுக்கும் வினாக்களுக்கெல்லாம் ஏற்ற முறையில் விளக்கம் அளித்தார். அருள்நெறித் திருக்கூட்டம் என்ற அமைப்பினை நிறுவி, ஆன்மிக அன்பர்களை ஒருங்கிணைத்தார்.
  • 1952-இல் தேவகோட்டையில் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் மாநாடு நடந்தது. தமிழகம் எங்கும் கிளைகள் வளர்ந்தன. இதன் கிளை இலங்கையிலும் முகிழ்த்தது.1955-இல் "அருள்நெறித் திருப்பணி மன்றம்' தோன்றியது. அதன்வழி, சமய நெறிநின்று சமுதாயப் பணியாற்றும் தொண்டர்கள் மிகுந்தனர். தமிழ்ச் சமய வழிபாடு நடைமுறைப்படுத்தப் பெற்றது. தேவார, திருவாசக திருமுறைகள் உணர்ந்து ஓதப் பெற்றன. ஆலய வளாகங்களுக்கு அப்பால், ஏழை மக்களிடம் சென்று, அவர்களின் வாழ்வு செழிக்க எல்லாப் பணிகளும் மேற்கொள்ளப்பெற்றன.
  • எதிர்ரெதிர் துருவங்களாக இருந்து பணி செய்த தவத்திரு அடிகளாரையும், தந்தை பெரியாரையும் தமிழ் ஒருங்கிணைத்தது. ஈரோட்டில் இருவரது சந்திப்பும் நிகழ்ந்தது. விவாதம் வளர்ந்தது. அவரவர் நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் இணைந்து தொண்டு புரியலாம் என்கிற இணக்கம் எழுந்தது. இது மகத்தான மாற்றம்.
  • இதே வேளையில் தோழர் ஜீவா போன்ற அன்பர்களின் முயற்சியினால், மார்க்சியத் தாக்கமும் இணைய சைவசித்தாந்த வழிநின்று அனைத்துக் கொள்கையாளர்களையும் அரவணைத்துச் செயல்பட்ட அடிகளார் பல்வகைப் பொறுப்புகளை ஏற்றார். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை நிலைப்படுத்தினார்.
  • திருமடத்தின் வாயிலாக, 11 கல்வி நிறுவனங்களை உருவாக்கினார். தொண்டு இயக்கங்களை உருவாக்கித் துணை நின்றார். சட்ட மேலவை உறுப்பினர் உள்ளிட்ட அரசு சார் அமைப்புகளில் பொறுப்புகள் வகித்த அடிகளார் அவற்றைப் பதவி எனக் கொள்ளாமல் பணி செய்யும் களமாகவே அமைத்துச் செயல்படுத்தினார்.
  • பூவும் புனலும் சொரிந்து யாவரும் வழிபட, தாய்மொழியாம் தமிழ்கொண்டு, இறைவனை அருச்சிக்க வழிவகை செய்த அடிகளார், மாற்றுக் கருத்துடையவர்களும் மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் எடுத்துரைத்தார். தமிழகம், மக்கள் சிந்தனை உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராக இருந்து ஏராளமாக எழுதினார். ஆனந்த விகடன், தினமணி உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதினார்.
  • வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுகளிலும், பல்கலைக்கழக அறக்கட்டளைப் பொழிவுகளிலும் அடிகளார் முன்வைத்த சிந்தனைகள் அமரத்துவம் வாய்ந்த அருட்சிந்தனைகள். அவையனைத்தும் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப் பெற்றுள்ளன.
  • எல்லா நிலைகளிலும் மக்கள் முன்னேற்றம் என்பதிலேயே அவர்தம் கவனம் இருந்தது. தெய்வ பக்தியும் தேசபக்தியும் ஒருங்கிணைய அடிகளார் செய்த அறப்பணிகள் பல. அவற்றுள் ஒன்று, 1962-இல் சீனப்போர் நிகழ்ந்தபோது, தன் தங்க உருத்திராக்க மாலையை, திருவொற்றியூர் கூட்டத்தில் ஏலம் விட்டு, அந்நிதியை, அரசுக்கு அளித்தமை.
  • ஜாதி, சமயப் பூசல்கள் நிலவிய இடங்களுக்கெல்லாம் சென்று அமைதியை நிலைநாட்டிய அமைதிச் சாமியாய் அடிகளார் வலம்வந்தார். 1982-இல் நடந்த மண்டைக்காடு மதக் கலவரத்தின்போது, அடிகளார் மேற்கொண்ட அமைதிப் பணி என்றும் வரலாற்றில் நின்று பேசக்கூடியது.
  • காரைக்குடி கம்பன் கழகம் தொடங்கிய பட்டிமண்டபத்தை, பாமரர்களுக்கெல்லாம் ஞானம் போதிக்கும் மாலை நேரப் பல்கலைக்கழக வகுப்பறைகளாக மாற்றிப் பெருமை கொண்ட அடிகளார், வாதிட்டவர்களின் வாத, பிரதிவாதங்களை அலசி ஆராய்ந்து அளித்த தீர்ப்புகள் அழியா வரம் பெற்றவை.
  • இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், கொரியா, சீனா, சோவியத் ரஷியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும், லண்டன், அமெரிக்கா, மற்றும் அரபு நாடுகளுக்கும் ஆக, உலகெங்கும் சென்று தமிழ் மரபின் செழுமையை நிலைநிறுத்திய பெருமையாளர் அடிகளார்; 1972-இல் சோவியத் நாட்டுக்கு அவர் மேற்கொண்ட பயணத்தின் விளைவாய்த் தோன்றியது குன்றக்குடி கிராமத் திட்டம். வானம் பார்த்த பூமியாய் இருந்த தன் கிராமத்தை, தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றியவர் அடிகளார்.
  • கூட்டுறவுச் சங்கங்கள், சிறு தொழிற்கூடங்கள், பண்ணைகள் முதலியவற்றை வங்கிகளின் துணையோடு, தேசத் தலைவர்களின் பெயர்களில் தொடங்கினார். அதன் உச்சமாக விஞ்ஞானிகளின் துணைகொண்டு அவர் உருவாக்கிய திட்டம் "ஸ்டார்' என்பது. அதன்படி விரிந்த தொழிலகங்களால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்பது சாத்தியமாயிற்று. மகளிருக்கும் வேலைவாய்ப்பு உறுதிப்பட்டது.
  • திரையரங்கம் இல்லை. மதுக்கடைகள் கிடையாது. உழைப்பைத் தவிர்த்து, ஏமாற்றி, போலியான அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கையூட்டும் லாட்டரிச் சீட்டுகளுக்குத் தடை இப்படி அடிகளார் கொணர்ந்த பல்வேறு திட்டங்களால், மக்கள் பயன் பெற்றனர். சேமிப்பு சாத்தியம் ஆனது. ஆடம்பரங்கள் தவிர்க்கப்பட்டன. கிராமம் தன்னிறைவு பெற்றது.
  • நிறைவு காலத்தில், "எங்கே போகிறோம்? என்று தொடங்கி எங்கே போக வேண்டும்?' என்று முடித்த அடிகளாரின் உரை, மதுரை வானொலியில் வலம்வந்து, தினமணி இதழில் வெளிவந்து உலக்கு இப்போதும் வழிகாட்டுகின்றன. யாரொடும் பகை கொள்ளாமல், அனைத்துச் சமயத்தினருடனும், சமூகத்தினருடனும் நல்லிணக்கம் பேணி, உலக நலன் பேணிய தவத்திரு குன்றக்குடி அடிகள் பெருமானின் 100-ஆவது பிறந்த தினம் இன்று (11.7.2024) தொடங்குகிறது.
  • எழுதி முடியாப் பெருவரலாறாக, பேசி முடியாப் பெருஞ்சாதனைகள் புரிந்த அருள் வரலாறாக விரியும் அடிகள் பெருமானின் அற்புதப் பெருவாழ்வு, எழுபது ஆண்டுகளுக்குள் (1995) நிறைவடைந்து விட்டாலும், இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நின்று வழிகாட்டும் வல்லமை கொண்டது என்பதைக் காலம் உணரும்; கட்டாயம் உணர்த்தும்.

நன்றி: தினமணி (11 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories